Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

மூத்த வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷண் (63),
நாடறிந்த வழக்கறிஞர்
மட்டுமல்ல; மொரார்ஜி தேசாய்
அமைச்சரவையில் சட்டத்துறை
அமைச்சராக இருந்த வழக்கறிஞர்
சாந்தி பூஷணின் மகன்களுள்
ஒருவரும்கூட. பொதுநல
வழக்குகளில் எப்போதும்
ஆர்வம் செலுத்தி வரும்
பிரசாந்த் பூஷண், மனதில்
பட்டதை அப்பட்டமாகப்
பேசிவிடக் கூடியவர்.
அவர், உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
பற்றி, கடந்த ஜூன் 27, 2020ல்
ட்விட்டர் பக்கத்தில் ஒரு
கருத்தை வெளியிட்டு
இருந்தார்.

அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் வரவரராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.

 

கடந்த 6 ஆண்டுகளாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அவசர நிலையும் பிறப்பிக்கப்படாமலேயே, ஜனநாயகம் அழிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில், உச்சநீதிமன்றத்தின் நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆற்றிய ‘பங்களிப்பு’ முக்கியமானது என்றும் மற்றொரு கருத்தையும் கொஞ்சம் எள்ளலாக பதிவிட்டிருந்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, பிரசாந்த் பூஷணின் இத்தகைய விமர்சனங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸூம் அனுப்பியது. இதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விளக்கம் அளித்திருந்தார். அதில்…

பிரசாந்த் பூஷண்

”தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஹார்லி டேவிட்சன் பைக்கை ஓட்டவில்லை. பைக் நிறுத்தித்தான் வைக்கப்பட்டு உள்ளது. இதை நான் கவனிக்கவில்லை. எனவே அவர் ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார் என்ற பதிவுக்கு வருந்துகிறேன்.

 

இருப்பினும், நான் கூறியவற்றின் மீதமுள்ள கருத்துக்கு வருந்தவில்லை. கடந்த ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் நடவடிக்கைகள், உச்சநீதிமன்றம் ஒரு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யவில்லை. ஜனநாயகத்தை அவை குறைமதிப்பிற்கு உட்படுத்தின என்பது எனது அப்பட்டமான அபிப்ராயமாகும்.

 

நீதிமன்றத்தில் குறைவான வழக்கு விசாரணைக்கு நான் வேதனை அடைந்தேன். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆகவே, ஒரு தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து ஒரே மாதிரியாக வருவதை நேர்மையாக விமர்சிப்பது என்பது நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக கருத முடியாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை விமர்சிப்பதாகவும் கருத முடியாது.

 

கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சிப்பதற்கான இணக்கமான உரிமை ஆகியவை நீதித்துறையின் பலமாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது,” என்றும் தெரிவித்து இருந்தார்.

”பிரசாந்த் பூஷணுக்கு
எதிராக உச்சநீதிமன்றம்
தொடர்ந்த அவமதிப்பு
நடவடிக்கைகள் நீதிமன்றத்தை
விமர்சிப்பதை ‘தடுக்கும்
முயற்சி’ என்றே தோன்றுகிறது.
நீதிமன்றம் அல்லது வெளியே
நீதிபதிகளின் நடத்தை குறித்த
விமர்சனத்திற்காக
தண்டிக்கப்படுவோம் என்று
நீதிமன்றத்தின் தன்னிச்சையான
அதிகாரத்திற்கு பயந்து
குடிமக்கள் வாழும் ஒரு
சூழ்நிலையை ஏற்க
முடியாது,” என்று
முன்னாள் நீதிபதிகளும்
அண்மையில் அறிக்கை
ஒன்றை வெளியிட்டு
இருந்தனர் என்பதையும்
நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.

 

உச்சநீதிமன்ற
நீதிபதி அருண் மிஸ்ரா
தலைமையில் பி.ஆர்.கவாய்,
கிருஷ்ணா முராரி ஆகியோர்
கொண்ட அமர்வு விசாரித்து
வந்த இந்த வழக்கில்,
பிரசாந்த் பூஷண் குற்றவாளி
என்று ஆக. 14, 2020ல்
தீர்ப்பு அளித்துள்ளது.
அவருக்கான தண்டனை
விவரங்கள் ஆக. 20ம் தேதி
அறிவிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.

எதற்காக உச்சநீதிமன்றம்,
பிரசாந்த் பூஷண் மீது மட்டும்
நாலு கால் பாய்ச்சலைக்
காட்ட வேண்டும்? என்ற
அய்யம் நமக்கு எழாமல்
இல்லை. அவர் ஒன்றும்
நாட்டின் அரசியல்
தலையெழுத்தையே மாற்றி
எழுதிவிடக்கூடியவர்
அன்று. கடந்த 2019 நவம்பர்
நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில்
மட்டும் 59867 வழக்குகள்
விசாரிக்கப்படாமல் நிலுவையில்
இருப்பதாகச் சொல்கிறது
ஒரு தரவு. ஏனைய
உயர்நீதிமன்றங்களில்
44.75 லட்சம் வழக்குகளும்,
நாடு முழுவதும் உள்ள
கீழமை நீதிமன்றங்களில்
மட்டும் 3.14 கோடி வழக்குகள்
கண்டுகொள்ளப்படாமல்
நிலுவையில் இருக்கின்றன.
அப்படியான நிலையில்
பிரசாந்த் பூஷண் மீது
ஏன் உச்சநீதிமன்றம்
பாய வேண்டும்?

 

அதற்குக் காரணம்
இல்லாமல் இல்லை.
வழக்கம்போல் இதன்
பின்னணியிலும் மோடிஷாக்களின்
அதிகாரக் கரங்களும்
நீண்டிருக்கின்றன.
காவி கும்பல் அதிகாரத்தைக்
கைப்பற்றிய பிறகுதான்,
ஆர்டிஐ, அமலாக்கத்துறை,
வருமானவரித்துறை,
மத்திய புலனாய்வுப்பிரிவு
என அனைத்து தன்னாட்சி
அமைப்புகளும்
முன்னெப்போதையும் விட
அதிகளவில் சிதிலமடைந்தன.
ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்களின்
அடுத்த தாக்குதல்
நீதித்துறையின்
மீது விழுந்தது.

ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்தோ அல்லது பிற ஆதாயங்களுக்காகவோ நீதிபதிகள் பலர், முக்கிய வழக்குகளில் அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை ‘வாசித்து’ விட்டுப் போகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் முன்பு இருந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, புதிய வரலாற்றை எழுதினர். தீபக் மிஸ்ரா, எந்தளவுக்கு ஊழல் பேர்வழி என்பது நாடறியும்.

 

அப்போது போர்க்கொடி
தூக்கியவர்களுள் ஒருவரான
ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதியாக
இருந்தபோதுதான் அயோத்தி
வழக்கில் தீர்ப்பு அளித்தார்.
அதற்குப் பரிசாக அவருக்கு
ராஜ்யசபா எம்.பி. பதவி
கொடுத்து அழகு பார்த்திருக்கிறது
பாஜக. இதில் வேடிக்கை
என்னவென்றால், இதே
ரஞ்சன் கோகாய் மீதுதான்
உச்சநீதிமன்ற பெண் ஊழியர்
ஒருவர், பாலியல் புகார்
அளித்தார். கடைசியில்
பெயரளவுக்கு விசாரணை
நடத்தி, அந்தப் பெண்ணை
பணிநீக்கம் செய்தனர்.
விசாரணைக் குழுவில்
ரஞ்சன் கோகாயும் இருந்தார்
என்பதுதான் முரண்.
தன் மீதான புகாரை
தானே விசாரித்த
விந்தையும் நடந்தது.

 

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பகடி செய்யும் விதமாக தொடர்ந்து மீம்ஸ்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய வருகையின்போது அவருக்கான ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியால் நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக உள்துறை எச்சரித்தும் பிரதமர் மோடி அதை கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு, இந்தியாவிலும் அதிகளவில் நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் விமர்சித்து இருந்தார். பாஜக அரசில் இந்தியாவின் பொருளாதார வீ-ழ்ச்சி குறித்தும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி குறித்தும் கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

 

இதனால் வெறுத்துப்போன காவி கும்பல்தான், நேரடியாக உச்சநீதிமன்றத்தின் மூலமாகவே பிரசாந்த் பூஷணை மிரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது. பிரசாந்த் பூஷண் போன்ற நாடறிந்த வழக்கறிஞரை நீதிமன்ற அவமதிப்பின் பேரில், தண்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நீதித்துறைக்கு எதிராக ஒருவரும் வாய் திறந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

 

தமிழகத்தில், ‘ஹைகோர்ட்டாவது மயிராவது’ என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சொன்ன பிறகும்கூட, சொரணையின்றி கிடந்த அதே நீதித்துறைதான், பிரசாந்த் பூஷண் மீது வெகுண்டு எழுந்துள்ளது.

 

நீதிபதிகள் என்போரும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் சாமானியர்களுக்கே உரித்தான எல்லா ஆசாபாசங்களும், பலவீனங்களும் இருக்கின்றன. நேற்று வரை, ஒரு வழக்கறிஞராக, காசு கொடுக்கிறார் என்பதற்காக கட்சிக்காரர்களை வெற்றி பெறச் செய்ய பொய்ச்சரடுகளை, போலி சாட்சிகள் மற்றும் சாட்சியங்களையும் புனைகின்ற அதே நபர்தான், பின்னாளில் நீதிபதியாக உயர்கிறார். நீதிபதி ஆன உடனே அவர் புனிதர் ஆகிவிடுவாரா என்ன?

 

சில ஆண்டுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய சொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்தது, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம். பாஜக, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கேரளா மாநில ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்டார். அப்படியெனில் சதாசிவம், நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையுமே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்க வேண்டியதிருக்கிறது.

 

ஒரு நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பு, இன்னொரு நீதிமன்றத்தில் மாற்றப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கு முழுமையாகவும், அய்யத்திற்கு இடமில்லாத வகையிலும் விசாரிக்கப்பட்டுதான் தீர்ப்பு எ-ழுதப்பட்டதா? பல வழக்குகளில் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து விடுதலை செய்யும் நீதிமன்றம், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லையே ஏன்? ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டது எதனால்? எல்லா சூழ்நிலைகளிலும் நீதியரசர்கள் அறம் வழுவாமல்தான் இருந்தார்களா?

 

நீதிபதிகள் எங்கெங்கே தடம் புரண்டனர், எங்கே இடறி விழுந்தனர் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் நன்கறிவர். இப்போதும் நீதிமன்றத்தை நம்பக்கூடிய ஒரே வர்க்கம் விளிம்புநிலை மக்கள் மட்டுமே. அதிகாரமும், பணபலமும் உள்ளவர்கள், எப்படியும் தீர்ப்பை ‘வாங்கி’ விட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நம்முடைய நீதிபதிகள் காப்பாற்றியும் வருகின்றனர்.

 

ஒரு சினிமா பிரபலம் வழக்கு தொடர்ந்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தீர்ப்பை வழங்கி விடுகிற நீதிமன்றங்கள்தான், விவசாயிகள் பிரச்னைகளில் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கின்றன.

 

இங்கே கருப்பு அங்கி என்பது புனிதத்தின் குறியீடும் அல்ல; நீதிபரிபாலனம் செய்வோர் மனுநீதிச் சோழர்களும் அல்லர். அவர்கள் தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள். அவ்வளவே. திருத்தப்பட வேண்டிய தீர்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. பொதுநல வழக்குப் போடுவோருக்கு அபராதம் விதிக்கும் போக்குகளும், பிரசாந்த் பூஷண்கள் தண்டிக்கப்படுவதும் கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் சிதைக்கும் நடவடிக்கைகளே என்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

 

– பேனாக்காரன்