Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.

 

சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.

 

தும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ”எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,” என்று ஆவேசமாக பேசினார்.

இந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால், பின்னணியில் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக இதில் தலையிடுவதாக கூறுகிறது காவல்துறை.

 

நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (கலகத்தை விளைவித்தல்), பிரிவு 183 (ஒரு பொது ஊழியரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தின்படி சொத்தை எடுப்பதை தடைப்படுத்துதல்), பிரிவு 189 (பொது ஊழியருக்குக் கேடு விளைவிப்பதாக அச்சுறுத்தல்), பிரிவு 506 (2) (கொலை மிரட்டல்), குவிமுச பிரிவு 7 (1) (ஏ) சிஎல்ஏ (கலவரத்தைத் தூண்டும் நோக்குடன் சதி திட்டம் தீட்டுதல்) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மன்சூர் அலிகான் கைது செய்தது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன…

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தையும், விமான நிலையம் விரிவாக்கத்தையும் எந்தவித இடையூறுகளுமின்றி கனகச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் மேலிடத்தின் உத்தரவு என்கிறது காவல்துறை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போல் சேலத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது.

 

பசுமை வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு யார் யாரெல்லாம் இடையூறாக இருக்கிறார்களோ அவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்களின் முந்தைய செயல்பாடுகளில் எங்கேயாவது எப்போதாவது அரசுக்கு எதிராக பேசியிருந்தால் அதை ஒரு வழக்காக பதிவு செய்யவும் தயாராக இருக்கிறார்களாம்.

 

சேலம் ரூரல் போலீஸ் டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பத், ஓமலூர் எஸ்ஐ பெரியசாமி உள்பட 15 பேர் கொண்ட குழுவினர்தான், நடிகர் மன்சூர் அலிகானை கடந்த ஞாயிறன்று கைது செய்திருக்கிறது.

 

மன்சூர் அலிகானின் வீட்டை 50 அடி தொலைவில் நெருங்கும்போதுதான், யாரை கைது செய்யப்போகிறோம் என்ற தகவலையே பட்டவர்த்தனமாக டிஎஸ்பி சங்கர் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

 

முதல் நாள் இரவு சேலத்தில் இருந்து கிளம்பும்போது, கிரைம் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியை பிடிக்கச் செல்கிறோம் என்றே தனிப்படையினருக்கு தகவல் சொல்லப்பட்டு உள்ளது.

இதில் கொஞ்சம் இடறினாலும் மக்கள் கூட்டமும், இதர அமைப்பினரும் திரண்டு விடுவார்கள் என்பதால்தான் மன்சூர் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாம்.

 

தனிப்படையில் உடன் சென்ற அனைத்து காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை போலீசாரின் செல்போன் எண்களும் முன்கூட்டியே டிஎஸ்பி சங்கர் நாராயணன் பெற்றுக்கொண்டாராம். யார் மொபைலில் இருந்தும் அழைப்புகள் செல்லக்கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்துள்ளார்.

 

சரியாக காலை 7 மணிக்கு மன்சூரின் வீட்டை நெருங்கிய போலீசார், கதவைத் தட்டி எழுப்பினர். போலீசாரைக் கண்டதும் மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் பதற்றம் அடைந்தனர். அந்த வீட்டில் பத்து குழந்தைகளும், இரு பெண்களும் இருந்தனர். உதவிக்காக அந்தப் பகுதி உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல்பாண்டியனை அழைத்துக் கொண்டனர்.

 

கைது செய்வதாக போலீசார் கூறியதைக் கேட்டதும் மன்சூர் அலிகானின் குழந்தைகள் கதறி அழுதனர். அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்ட மன்சூர், ”நாட்டுக்காகத்தானே போகிறேன். இதுக்கெல்லாம் அழலாமா..? சீக்கிரம் வந்து விடுவேன்,” என்று தேற்றியுள்ளார்.

 

மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட தகவலை சேலம் தனிப்படை காவல்துறையினர், சேலம் மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜிடம் தெரிவித்தனர்.

 

காலை 8 மணிக்கெல்லாம் அரும்பாக்கத்தில் இருந்து மன்சூர் அலிகானை அழைத்துக்கொண்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்தனர். தன்னுடைய காரிலேயே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கேட்டதற்கு, காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

 

வரும் வழியில் ஆத்தூரில் உணவு சாப்பிட அனுமதித்தனர். இரண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்ட மன்சூர் அலிகான், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை விழுங்கினார். அங்கு வந்த சில உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

 

அப்போது அவர், ”எட்டு வழிச்சாலை திட்டம் தமிழகத்தை நாசமாக்கும் திட்டம். தமிழகத்தை ராவண பூமி என்று மத்திய அரசு எல்லா வகையிலும் புறக்கணிக்கிறது. 10 ஆயிரம் கோடியில் சாலையை போட்டுவிட்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும். தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்,” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

 

இரவு 8 மணியளவில் மன்சூர் அலிகானை மேட்டூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே, கைது ஆவணங்களில் சில விவரங்கள் தவறாக உள்ளதாக மாஜிஸ்ட்ரேட் கூற, திரும்பவும் போலீசார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று, ஆவணங்களை சரி செய்து கொண்டு சென்றனர்.

 

ஆவணங்கள் திருத்தப்பட்டு கொண்டு வரும்வரை கோர்ட் வளாகத்தில் மன்சூர் அலிகான், காலார நடந்து கொண்டிருந்தார். பிறகு அவரை வரும் 29ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்து மன்சூர் அலிகானை சிறைக்குக் கொண்டு செல்ல நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது என்கிறார்கள்.

 

ஒருவேளை, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, சேலம், ஓமலூர் பகுதியில் ஏதேனும் களேபரங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஓமலூர் சப்&டிவிஷன் டிஎஸ்பி பாஸ்கரன், உள்ளூரிலேயே கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டு இருந்தது.

 

‘ஆபரேஷன் கிரீன்வேஸ்’ திட்டத்தில், முதல் பலி மன்சூர் அலிகான். இன்னும் அடுத்தடுத்து வேறு சில முக்கியப் புள்ளிகளும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்கிறது காவல்துறை.

 

சேலம் மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான் காரணமாகத்தான், எவ்வித சர்ச்சைகளுக்கும் இடமின்றி மன்சூர் அலிகானை தூக்க முடிந்ததாகச் சொல்கின்றனர் காவல்துறையினர்.

 

இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷிடம் கேட்டபோது, ”மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் சினிமாவில் பேசுவதுபோல், எட்டு வழிச்சாலைக்காக எட்டு பேரை வெட்டுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

 

அதற்காக அவர் அப்படி செய்வார் என்று அர்த்தம் ஆகிவிடாது. இதற்கெல்லாம் கைது செய்வது கண்டிக்கத் தக்கது. நாங்கள் அவரை ஜாமீனில் எடுக்க ஓமலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்,” என்றார்.

 

//பியூஷ் மானுஷ் கைது!//

நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு அழைந்து வந்த சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் (43), நேற்று (ஜூன் 18, 2018) கைது செய்யப்பட்டார்.

 

சேலத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த அவரை, இரவு 7.30 மணியளவில் ஓமலூர் அருகே தடுத்து நிறுத்திய போலீசார், மன்சூர் அலிகான் மீது பதிவு செய்யப்பட்ட அதே பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

 

ஜூன் 18ம் தேதி மதியம், மன்சூர் அலிகான் கைது குறித்து கருத்தறிய பியூஷ் மானுஷை தொடர்பு கொண்டோம். மன்சூர் அலிகானை ஜாமீனில் எடுப்பதற்கான வேலைகள் நடந்துள்ளதாக தெரிவித்த அவரும், அன்று இரவு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

– பேனாக்காரன்.