சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர்.
சேலம் – சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு வழிச்சாலைக்காக நிலம் அளந்து முட்டுக்கல் நடும் பணிகளில் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில், நில எடுப்பு தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் நிலம் அளக்கும் பணிகளில் ஈடுபட்டனர். வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயியும், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி பொறியாளருமான கலைவாணிக்குச் சொந்தமான விளை நிலத்தில் அதிகாரிகள் நிலத்தை அளந்து முட்டுக்கல் நட்டனர்.
அப்போது கலைவாணி, ”நேற்று ஓரிடத்தில் அளந்து முட்டுக்கல் நட்டனர். இன்று இன்னும் சில மீட்டர் தூரம் சென்று நடுக்காட்டுக்குள் முட்டுக்கல் நடுகின்றனர். உங்களது அளவீட்டு முறையே குழப்பமாக இருக்கிறது.
குவாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ள இடங்களில் அவர்களுக்கு சாதகமாக நிலங்களை விட்டுவிட்டு, விளை நிலங்களை மட்டும் குறிவைத்து கைப்பற்றுவது ஏன்? எங்களுக்குச் சொந்தமான 14 ஏக்கர் விளை நிலத்தில், இரண்டு ஏக்கர் நிலம் முழுவதுமாக பறிபோகிறது.
இதுகுறித்து மக்களிடம் நேரில் கருத்து கேட்காமலும், அவர்களின் சம்மதம் பெறாமலும் நிலத்தை அளந்தால் எப்படி? இந்த நிலத்தில்தான் என் மாமனார் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் சமாதி உள்ளது. இந்த நிலத்தை எட்டு வழிச்சாலைக்காக விட்டுத்தர முடியாது,” என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் சிறிது நேரம் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் அவரை சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே, இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரான சேலம் பள்ளத்தாதனூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி (24), ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்திற்கு வந்தார்.
அவர் அங்குள்ள பொதுமக்களிடையே, ”நிலம் நம்முடைய உரிமை. வீடு நம்முடையது. நாம் உழைத்து, கஞ்சி குடித்து வருகிறோம். இந்த நிலத்தை யாருக்காகவும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம், அராஜகமாக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
எட்டு வழிச்சாலை நமக்குத் தேவையில்லை. விவசாயத்தைக் காக்க விவசாயிகள் ஓரணியில் திரள வேண்டும். விவசாயிகளுக்காக போராடுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்வதை ஏற்க முடியாது,” என்று பேசினார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறையினர் வளர்மதியிடம் சென்று கைது செய்வதாகக் கூறினர். அதற்கு அவர், ”இங்குள்ள மக்கள் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் மக்களுக்கு ஆதரவாக வந்து பேசுமாறு அழைத்தனர்.
அதனால்தான் வந்து பேசினேன். இதற்கே நீங்கள் கைது செய்வதாகக் கூறினால், இந்த நாட்டில் பேசுவதற்குக்கூட யாருக்கும் உரிமை இல்லையா?,” என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
பெண் போலீசார் வளர்மதியை கைது செய்வதற்காக அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தனர். அங்குள்ள மக்கள் வளர்மதியை மீட்கும் நோக்கில் அவர்களும் ஒருபுறம் இழுத்தனர். பின்னர், போலீசார் வளர்மதியை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே வளர்மதி, ‘போலீசார் அராஜகம் ஒழிக’ என்று முழக்கங்களை எழுப்பினார்.
அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இப்போது வளர்மதியும் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இது போன்ற கைதுகள் தொடரும் எனத் தெரிகிறது.