கொல்லிமலை பழங்குடி மக்களிடையே
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டங்கள்.
திமுக தேர்தல் பொறுப்பாளர்களின்
ஜனரஞ்சகமான பேச்சுகள், பழங்குடி
கிராமங்களில் ரொம்பவே எடுபட்டதால்
அவர்களை கட்சிக்காரர்களாக
மாற்றும் பணிகளிலும் இறங்கி
இருக்கிறது, திமுக.
மக்களை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக முன்னெடுத்துள்ள ஊராட்சி சபைக்கூட்டங்களுக்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே செல்லாத இடங்களை எல்லாம் தேடித்தேடிச் செல்கின்றனர், அத்தொகுதி பொறுப்பாளர்கள். இதுவரை வராதவர்கள் தேடி வருகிறார்கள் என்ற பேராவலோ என்னவோ திமுகவினரே எதிர்பார்க்காத ரிசல்ட் மலைக்கிராமங்களில் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் ஆகியோர் நாமக்கல் மக்களவை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காந்திசெல்வன் தலைமையிலான உள்ளூர் நிர்வாகிகள் எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டுகின்றனர். தன் வயதையும் பொருட்படுத்தாமல் பொங்கலூரார், பரப்புரைக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குகிறார். இடத்திற்கேற்றார்போல், கனல் தெறிக்கவும், ஜனரஞ்சகமாகவும் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒரு பிடிபிடித்து விடுகிறார் எஸ்.ஆர்.பார்த்திபன். இப்படி ரசனையான கலவை வேறெந்த தொகுதிகளிலும் அமைந்திருக்குமா என்பது அய்யமே.
கொல்லிமலையில் ஒவ்வொரு கிராமமும் நாடு என்றே அழைக்கப்படுகிறது. அங்கு, மொத்தம் 14 நாடுகள் உள்ளன. கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் அங்குள்ள சித்தூர் நாடு, பெயில் நாடு, வாழவந்தி நாடு, குண்டூர் நாடு, தின்னனூர் நாடு, வளப்பூர் நாடு, சேளூர் நாடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தினர். குண்டூர் நாடு கிராமத்திற்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், சுமார் 2 கி.மீ. தூரம் திமுகவினர் நடந்தே சென்றுள்ளனர். இளைஞர்கள் வேகத்திற்கு பொங்கலூராரும் ஈடுகொடுத்ததுதான் ஆச்சர்யம்.
சமவெளிப்பகுதியைக் காட்டிலும்
மலைவாழ் பழங்குடிகளிடையே
ஊராட்சி சபைக்கூட்டத்திற்கு
பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஒவ்வொரு ஊரிலும் சராசரியாக
250க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன்
பங்கேற்றதை தேர்தல் பொறுப்பாளர்களேகூட
எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்,
அம்மாவட்டக் கழக கண்மணிகள்.
குறிப்பாக, பழங்குடியின பெண்கள் பலர்
ஆர்வத்துடன் இக்கூட்டங்களில்
கலந்து கொண்டனர். இது,
நகர்ப்புற மற்றும் படித்த பெண்கள்
கற்றுக்கொள்ள வேண்டியதாகவே
கருதுகிறேன்.
பழங்குடிகளின் பேச்சு, நடை, உடை இப்படித்தான் இருக்கும் என்றெண்ணி போவோருக்கும்கூட அவர்களின் இன்றைய நேர்த்தியான உடை நாகரீகம், பேச்சு, அரசியல் அறிவு ஆகியவை அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிட்டுவிடும். ஒருவேளை, தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து இதுபோன்ற பரப்புரைகளை திமுக மேற்கொள்ளுமெனில் வெகுசனங்களை அடுத்த கால் நூற்றாண்டுகளுக்கு கட்டிப்போட்டு வைத்திருக்கவும் கூடும் என்பது என் அபிப்ராயம்.
குண்டூர் நாடு கிராமத்தில் நடந்த கூட்டத்தில்,
‘எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?’ என்று கூட்டத்தினரைப்
பார்த்து எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் இருந்து எழுந்து பேசிய ஒரு பெண்,
‘பழனிசாமி ரொம்ப கெட்டவருங்க…
கொள்ளை அடிக்கிறாருங்க’ என்றார் தடாலடியாக.
உடனே பார்த்திபன், ‘எந்த பழனிசாமினு
ஊர் பேரோட சேர்த்து சொல்லுங்கம்மா…
இல்லேனா எங்களோட வந்திருக்கும்
பழனிசாமிய சொல்றதா தப்பா
நினைச்சுக்கப் போறாங்க’ என்று
நையாண்டியாக கூறியதை,
கூட்டத்தினர் மட்டுமல்ல;
திமுகவினரும் ரசித்துக் கேட்டனர்.
தொடர்ந்து பேசிய அந்தப்பெண்மணி, ”அம்மாவை சசிகலா, எடப்பாடி பழனிசாமி எல்லாரும் சேர்ந்துதாங்க கொன்னுப்புட்டாங்க,” என்றார். மலைவாழ் மக்கள் வரை இதுபோன்ற தகவல்கள் சென்று சேர்ந்திருப்பதை திமுகவினரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டனர்.
மற்றொரு பெண்மணி பேசுகையில், ”எங்க ஊர்ல ரேஷன் கடையில இலவசமா அரிசி போடுறாங்கய்யா. ஆனா காலாவதியான சோப்பு, எண்ணெய், மளிகை சாமான்கள்னு 250 ரூபாய்க்கு எங்க தலையில கட்டிடறாங்கய்யா. இங்க எல்லாருமே வறுமைக்கோட்டுக்குக் கீழதான் வாழறோம். ஒருபக்கம் இலவச அரிசி கொடுத்துட்டு, இன்னொரு பக்கம் பணத்தை பிடுங்கிக்கிறாங்கய்யா….” என்றார்.
வாழவந்தி நாடு கிராமத்தில் நடந்த ஊராட்சிசபைக் கூட்டத்தில், திமுக பொறுப்பாளர்கள், ”ஆதரிப்போம் ஆதரிப்போம் அண்ணன் தளபதியை ஆதரிப்போம்” என்றும், ”வாக்களிப்போம் வாக்களிப்போம் அண்ணன் தளபதிக்கு வாக்களிப்போம்” என்றும், ”தூக்கி எறிவோம் தூக்கி எறிவோம் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவோம்” என்று முழக்கமிட்டு, மக்களையும் முழக்கமிடச் செய்யும் நூதன உத்தியைக் கையாண்டனர்.
பொங்கலூர் பழனிசாமி பெரும்பாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் என மோடி அரசை புடைத்து எடுத்து விடுகிறார். எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் விமர்சித்துப் பேசினார். ”தளபதியை கட்சித் தலைவராக பார்க்காதீர்கள். அவரை உங்களின் உடன்பிறப்பாக, உங்கள் வீட்டுப்பிள்ளையாக பாருங்கள்,” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் முழங்கத் தவறுவதில்லை. சிறப்பாக பேசும் பெண்களை பாராட்டி கூட்டத்திலேயே சால்வை அணிவித்து கவுரவப்படுத்துகின்றனர்.
சமவெளி பகுதிகளைக் காட்டிலும், கொல்லிமலை பழங்குடி மக்களிடையே ஊராட்சி சபைக்கூட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
– பேனாக்காரன்.