Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

சேலத்தில் 52 ஆயிரம் பெண்கள்
சேர்ந்து ‘ஏஸ் பவுண்டேஷன்’ (ACE Foundation)என்ற
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாபெரும்
கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர்.
இந்தியா முழுவதும் இயங்கி வரும்
அமைப்பு ரீதியற்ற பெண்கள் குழுக்களை
ஒருங்கிணைக்கும் முகமாக
புதிய பயணத்தை தொடங்கியுள்ளது
இந்த மகளிர் படை. இது
முற்றிலும் அரசியல் சார்பற்ற அமைப்பு.

 

தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு, இன்று முதல் (பிப்ரவரி 9, 2019) ‘ஏஸ் பவுண்டேஷன்’ என்ற புதிய அமைப்பினூடாக தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதாவது, தானம் அறக்கட்டளைக்கும் இப்புதிய அமைப்பிற்கும் இனி யாதொரு தொடர்பும் இருக்காது. இப்படியொரு துணிச்சலான முடிவை, சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இயங்கி வரும் 52 ஆயிரம் பெண்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் நேரடியாக பங்கும், பொறுப்பும் உண்டு.

மதுரையைச் சேர்ந்த, மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆகப்பெரிய பிராண்டு அம்பாசிடராக விளங்கும் சின்னப்பிள்ளை அம்மையார், ஏஸ் பவுண்டேஷனை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திரை நட்சத்திரங்களுடன்தான் செல்ஃபி எடுப்போம் என்றில்லாமல், இந்த பவுண்டேஷனைச் சேர்ந்த பல பெண்களும், சின்னப்பிள்ளையுடன் செல்ஃபியும், குழு புகைப்படங்களும் போட்டிப்போட்டு எடுத்து மகிழ்ந்தனர்.

 

”மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பல
பெண்களை அதிகாரமிக்கவராக மாற்றி
இருக்கிறது. மட்டுமின்றி, வங்கிகள்,
காவல்நிலையங்கள், ஆட்சியர் அலுவலகம்
என பொது அலுவலகங்களுக்கும்
பள்ளிப்படிப்பைக்கூட முடித்திராத பல
பெண்களும் இன்றைக்கு துணிச்சலாக
சென்று வரக்கூடிய அளவுக்கு,
அவர்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி இருக்கிறது.

என்றாலும், இந்த நாட்டில் நிலவிவரும்
மதுவும், கந்துவட்டியும், லஞ்சமும்தான்
வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாக
இருக்கின்றன. அவற்றை ஒழித்தால்தான்
நாடு உண்மையான வளர்ச்சியைப் பெற முடியும்,”
என்கிறார் சின்னப்பிள்ளை.
இவை மூன்றும் மிகப்பெரும்
சமூகத்தீமைகள் என்று சொல்கிறார்.
1990 முதல் மகளிர் சுயஉதவிக்குழுக்களை
வழிநடத்தி வரும் சின்னப்பிள்ளை
சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
மேலும், எல்லா அரசு வேலைகளும்
லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கிறது
என்றும் வேதனையுடன் சொன்னார்.

அதே கருத்தை வழிமொழிந்த ஏஸ் பவுண்டேஷனின் தலைவர் பா.சிவராணி, சேலம் மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரம் பெண்களின் குடும்பங்களில் 600க்கும் மேற்பட்டோர் குடிப்பழக்கத்தினால் மரணம் அடைந்துள்ளதாக கூறினார். இதைவிடக் கொடுமை என்னவெனில், அப்படி மரணம் அடைந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்றும் சொன்னார் அவர்.

 

இந்த அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, ராஜன், காயத்ரி ஆகியோருடன் வட்டார நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக செய்திருந்தனர்.

 

ஏஸ் பவுண்டேஷனை தொடங்கியிருக்கும் களஞ்சியம் பெண்கள் அனைவருமே, ஏற்கனவே முன்னோடி வங்கிகள் மூலமாக 140 கோடி ரூபாய்க்கும் மேல் கடனுதவி பெற்று வாழ்வியலை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 70 கோடி ரூபாய்க்கும் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே, இந்த புதிய படை எதையும் வெல்லக்கூடியவர்கள் என்றால் மிகையன்று.

 

– பேனாக்காரன்.