தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-சின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அத்துறை வட்டாரத்தையும் தாண்டி, பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கண்டனங்களே அதற்கு சான்று. இதையெல்லாம் தமிழக அரசு அவதானித்துக் கொண்டுதான் இருக்கும்.
உதயச்சந்திரன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் அத்துறையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும், அவருக்கு ‘செக்’ வைக்கப்பட்டதற்கான சில காரணங்களையும் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். இப்போது மேலும் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பே, எந்தெந்த பள்ளிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்பதை ஆசிரியர்கள், தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள், அமைச்சர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரைப் பிடித்து, தங்களுக்கான இடத்திற்கு துண்டு போட்டு வைத்து விடுவார்கள். இதற்கெல்லாமே ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகார மையத்திற்கு ‘காணிக்கை’ செலுத்த வேண்டும். ஒரே இடத்திற்கு பல ஆசிரியர்கள் போட்டியிடும் பட்சத்தில் காணிக்கையின் வரம்பு ரூ.7 லட்சம் வரைகூட உயரக்கூடும்.
நடப்புக் கல்வி ஆண்டில் ஒட்டுமொத்தமாக 13 ஆயிரம் ஆசிரியர்கள், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கலந்தாய்வின்போது ஒன்றியம், மாவட்டம், கிளைக்கழக நிர்வாகிகள் என அதிமுகவினரிடம் இருந்து 1200 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கேட்டு பரிந்துரைகள் குவிந்துள்ளன. இவையனைத்தும் முற்றாக புறந்தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. உதயச்சந்திரன் ஐஏஎஸ்-ன் இந்த நடவடிக்கை ஆளும் தரப்பை உச்சபட்ச கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அதிமுக நிர்வாகிகளின் சில பரிந்துரைகளை அதிகாரிகள் செய்து கொடுப்பது நடைமுறையில் இருந்து வந்ததுதான். ஜெயலலிதா இல்லாத இந்த நிலையில், அதுவும் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்திருக்கும் நபர்களின் சிபாரிசுகளே புறக்கணிக்கப்பட்டதை ஆளும் தரப்பு ரசிக்கவில்லை.
ஆளும் தரப்புக்கு அடுத்த தலைவலி, சிபிஎஸ்இ பள்ளிகள் வடிவத்தில் வந்தது. மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற வேண்டுமெனில் மாநில அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழ் இருந்தால்தான், சிபிஎஸ்இ பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இணைப்பு பெற முடியும்.
சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்குப் பின்னர் தமிழகத்தில் ஏராளமான மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறின. பொதுவாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழக்கமான மெட்ரிக் பள்ளிகளைக் காட்டிலும் இரு மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். அதனால், தடையில்லா சான்றிதழுக்கு ரூ.35 லட்சம் வரை ‘அன்பளிப்பு’ கேட்பது காலங்காலமாக நடைமுறையில் இருந்தாலும், அதை கொடுப்பதற்கு பள்ளிக்கூட அதிபர்களும் மறுப்பதில்லை. இதற்கும் ‘செக்’ வைத்தார் உதயச்சந்திரன் ஐஏஎஸ். அவரை பள்ளிக்கல்வித்துறைக்கு கொண்டு வந்த அமைச்சர் செங்கோட்டையன்கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
உதயச்சந்திரனின் வெளிப்படையான நடவடிக்கைகளால் சுயநிதி பள்ளிக்கூட அதிபர்கள், பைசா செலவில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிக்கான தடையில்லா சான்றிதழ்களை பெற்றுச்சென்றனர். நடப்புக் கல்வி ஆண்டில் இதுவரை 40க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிக்கான தடையில்லா சான்றிதழ்களை பெற்றுள்ளன. இதிலெல்லாம் காசு பார்த்து, கரைகண்டவர்களுக்கு உதயச்சந்திரன் இருக்கும் வரை பைசா தேற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனாலும், ”உதயச்சந்திரனை மாற்றுவதில் அல்லது அவருடைய அதிகாரத்தைக் குறைப்பதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. அதேநேரம், அதிகார மையம் சொல்வதை தட்டவும் முடியாமல்தான் அவர் இருந்தார்,” என்கிறார் அரசின் உள்¢விவகாரங்களை அறிந்த தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி ஒருவர்.
இன்னொரு தகவலையும் அந்த நிர்வாகி சொன்னார். ”பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக அமைச்சர் உள்பட ஆளுங்கட்சியினரின் எந்த ஒரு சிபாரிசுகளையும் ஏற்க வேண்டாம். நேர்மையாக செயலாற்றுங்கள்” என்று உதயச்சந்திரன் ஐஏஎஸ், எல்லா மாவட்ட சிஇஓ-க்களுக்கும் வெளிப்படையாகவே சொன்னதாகவும் கூறினார்.
இதன் பிறகுதான் அவரை வேறு துறைக்கு இடமாற்றம் செய்யும் வேலைகளில் ஜரூர் காட்டியுள்ளது தமி-ழக அரசு. அதற்குள் எதிர்க்கட்சிகள் கண்டனம், இடமாற்றம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு என சென்றதால், வேறு வழியின்றி இப்போதைக்கு அவருடைய அதிகாரத்தை மட்டும் குறைத்துள்ளது தமிழக அரசு.
இந்த விவகாரம் இப்படி என்றால், பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த 2006ம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனராக இருந்த ஜாங்கிட்டும், அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் யாதவும் வடநெமிலி கிராமத்தில் ஏழை மக்களுக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டதாக புகார் எழுந்தன.
இது தொடர்பாக வடநெமிலியைச் சேர்ந்த ஒருவர் அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இது தொடர்பாக, இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ததாகவும் கூறுகின்றனர். கூடுதல் தகவல்களுக்காக…