Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது.

அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.

திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுகிறார் என தினகரன் அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்கே. செல்வம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என திருச்சி எம்.பி. சவால் விடுத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று சேலம் மாநகர் மாவட்ட செயலாளரான ஜி. வெங்கடாசலம் நீக்கப்பட்டு எஸ்.இ. வெங்கடாசலம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பு பொது செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.