Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!

சாமியார் என்றாலே சர்ச்சைகள் இல்லாமலா?. வாயில் இருந்து லிங்கம் எடுப்பதாக பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா, ராஜீவ் கொலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்திராசாமி, சங்கரராமன் கொலை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயேந்திரர் என சாமியார்களை சுற்றி சர்ச்சைகளும் றெக்கை கட்டி பறந்துள்ளன. இவர்களை எல்லாம் ஓரங்கட்டி, எப்போதும் தன்னை சர்ச்சை வளையத்திற்குள்ளேயே வைத்திருப்பவர்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங்.

தேரா சச்சா சவுதா, என்பது ஓர் ஆன்மீக சபை. இதன் தலைவராக 1990ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தவர்தான் குர்மீத் ராம் ரஹீம். ஆரம்பம் முதலே தனக்கென ஒரு தொண்டர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இளம் வயதிலேயே ஆன்மீக தீட்சை பெற்றவர், அவர் ஒரு தெய்வப்பிறவி என்றெல்லாம் சொல்ல வைத்தார்.

சாமியார் என்றாலே காவி உடையில் அல்லது வெள்ளை உடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்தார், குர்மீத் ராம். ராமராஜன், டி.ராஜேந்தர் போல கண்களைப் பறிக்கும் பல வண்ண உடைகளை உடுத்திக் கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.

அவர் பொறுப்புக்கு வந்த பின்னர்தான் ஹரியானா மாநிலம் சிர்சா பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. மிக பிரம்மாண்டமாக ரத்த தான முகாம் நடத்தி, கின்னஸ் சாதனைகளும் படைத்திருக்கிறார். குர்மீத் ராமின் உத்தரவுக்கிணங்கி அவருடைய 1000 தொண்டர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.

இது போன்ற பெருமைக்குரிய விஷயங்கள் இருந்தாலும், தேரா சச்சா சவுதா அமைப்பின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றான தனி மனித ஒ-ழுக்கம், பெண்களுக்கு சமூக அடையாளம் போன்றவற்றில் தடம் புரண்ட போதுதான் சிக்கலே வெடிக்க ஆரம்பித்தன.

தனது பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குர்மீத் ராம் ரஹீம் மீது கடந்த 2002ல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் சிபிஐ நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள், வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும்.

போதாக்குறைக்கு, கடந்த 2010ம் ஆண்டில், தன் ஆசிரமத்தில் இருந்த 400 ஆண் தொண்டர்களுக்கு ஒரே நேரத்தில் கட்டாய ஆண்மை நீக்க அறுவை சிகிச்சையும் செய்து பரபரப்பின் உச்சம் தொட்டார். தன் தொண்டர்கள் யாரும் பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வ செய்து விடக்கூடாது என்பதற்காக ஆண்மை நீக்கம் செய்ததாகவும், தானும் செய்து கொண்டதாகவும் நீதிமன்றத்திலும் ஒப்புக்கொண்டார்.

‘மெசேஞ்சர் ஆஃப் காட்’ உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார். சாமியார் என்றால் நம் முன் தோன்றும் வழக்கமான படிமங்களை தகர்த்தெறிந்த குர்மீத் ராம் ரஹீமுக்கு உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர் என்பதும் வியப்புக்குரியதுதான்.

பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததுமுதல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 31 பேர் பலியாகி உள்ளனர். அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. தேரா சச்சா சவுதா, இத்தனை ஆண்டுகளாக இதைத்தான் இதைத்தான் போதித்து வந்ததா?