Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

இந்திய அளவில் இன்றைக்கு
தமிழகம் கல்வி, தொழில்துறை,
விவசாயம் என பல துறைகளிலும்
மற்ற மாநிலங்களைக் காட்டிலும்
பரவலான, நீடித்த வளர்ச்சி
பெற்றிருக்கிறது என்றால் அதில்
திமுகவுக்கு பெரும் பங்கு
இருக்கிறது. சமூகநீதி முதல்
இன்றைக்கு காவி அரசாங்கம்
அமல்படுத்தியுள்ள மருத்துவக்காப்பீடு
உள்ளிட்ட திட்டங்களுக்கு
வித்திட்டவர் கருணாநிதி.

 

எப்போதும் முன்னோக்கிச்
சிந்திக்கக் கூடிய அபார ஆற்றல்
வாய்ந்தவர். என்னதான்
தமிழ் மொழி, தமிழர்களின்
வளர்ச்சிக்கு பாடுபட்டாலும்
திமுக மீதும், கருணாநிதி மீதும்
சர்க்காரியா கமிஷன், திருட்டு
ரயிலேறி வந்தவர், 2ஜி ஸ்பெக்ட்ரம்
வரையிலான ஊழல் புகார்கள்
அன்று முதல் இன்று வரை
சூழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவர் வாங்கி வந்த வரம் (?!)
அப்படி. திமுக மீதான
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு
ஆதாரங்கள் இல்லை. என்றாலும்,
எதிர்க்கட்சிகளால் திமுகவுக்கு
எதிராக சமூக வலைதளங்களில்
இப்போதும் அவதூறுகள்
கட்டவிழ்த்து விடப்படுவது
தொடர்கின்றன. அதையெல்லாம்
எதிர்கொள்வதில் இளம் திமுகவினர்
ரொம்பவே தடுமாறுகிறார்கள்
என்பதும் கண்கூடு.

இவற்றுக்கெல்லாம் பதில்
சொல்லும் விதமாக,
திமுக இளைஞரணி ‘பொய் பெட்டி’
என்ற தலைப்பில் கடந்த
22.12.2019ம் தேதி சென்னையில்
ஒரு பயிலரங்கத்தை நடத்தி
இருக்கிறது. திமுக மீதான
பொய்ச்சரடுகளுக்கு, உடன்பிறப்புகள்
இனிமேல் நேர்த்தியாக பதிலடி
கொடுப்பார்கள் என்பதை
அந்தப் பயிலரங்க காணொலிக்
காட்சிகளைப் பார்த்தபோது தெரிந்தது.
‘நக்கீரன்’ பொறுப்பாசிரியர்
தோழர் கோவி.லெனின்,
பயிலரங்களில் சொன்ன
பல தகவல்கள் சுவையானவை
மட்டுமின்றி, இளம்
தலைமுறையினர் தெரிந்து கொள்ள
வேண்டியதும்கூட. அந்தப்
பயிலரங்க காணொலிப்
பதிவிலிருந்து…

 

கப்ஸாக்களையும், புரூடாக்களையும்
தவிர்க்க வழி என்ன?
ஆக்கப்பூர்வமான விவாதங்களை
மக்கள் பிரச்னைகளை
மடைமாற்றம் செய்யும்
சங்கிகளின் யுக்தியை திராவிட
இயக்கம் எப்படி
கையாளப் போகிறது?

 

அறிவார்ந்த நூறு பேருடன்
நம்மால் போராட முடியும்.
ஒரு முட்டாளுடன் போராட
முடியாது. கலைஞர் ஒரு
மஞ்சப்பையைத் தூக்கிக்கொண்டு
திருட்டு ரயிலேறி சென்னைக்கு
வந்தாரு… ‘வித்தவுட்’ல வந்தாரு…
என்று சொல்கிறார்கள். அப்படிச்
சொல்பவர்களிடம் சென்று,
‘கலைஞர் எங்கிருந்து
சென்னைக்கு வந்தார்?’,
‘எந்த இடத்தில் ரயில் ஏறினார்?’
என்று கேளுங்கள். அவர்களுக்கு
அதைப்பற்றி எல்லாம்
எதுவுமே தெரியாது.

 

சென்னைக்கு வந்து அரசியல்
செய்து எம்எல்ஏ ஆனார் என்பார்கள்.
எதுவுமே தெரியாது அவர்களுக்கு.
அவர் ஒன்றும் நேரடியாக சென்னைக்கு
வரவில்லை. பாண்டிச்சேரியில்
ஒரு நாடகம் நடந்தபோது தாக்குதல்
நடந்தது. அப்போது அடிபட்டு
அவர் சாலையோரம் கிடந்தார்.
அவரை மீட்டு, பெரியாரிடம்
கொண்டு சேர்த்தனர். பெரியார்
தன்னுடனேயே இருக்குமாறு
அழைத்ததன் பேரில் கலைஞர்
ஈரோடு குடியரசு பத்திரிகை
அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

கோவி.லெனின்

அப்போதே அவர், ‘கவிதையல்ல’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் எழுதுகிறார். அதுதான் வசன கவிதைக்கு அடிப்படையான புத்தகம். பாரதியார் எழுதிய வசன கவிதை ஒருபுறம் இருந்தாலும், கலைஞரின் ‘கவிதையல்ல’ வசன கவிதைக்கும் தனி இடம் உண்டு. இன்றைக்கு நாம் ட்விட்டரில் எழுதுகிறோமே… அதுபோல அன்றைக்கே கலைஞர், கவிதையல்ல புத்தகத்தில் ‘பளிச் பளிச்’ என்று எழுதியிருக்கிறார்.

 

குடியரசு பத்திரிகையில், ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். திருவையாறில் தியாகைய்யர் ஆராதனை நடந்தது. அப்போது தண்டபாணி தேசிகர் பாடுகிறார். அவர் பாடி முடித்த பிறகு, பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாட வந்தார். தண்டபாணி தேசிகர், பார்ப்பனரல்லாதவர் என்பதால், அவர் உட்கார்ந்த இடம் தீட்டு ஆகிவிட்டதாகச் சொல்லி, அந்த இடத்தை தண்ணீரால் கழுவி விட்டனர். அதன் பிறகுதான் அந்த பார்ப்பனர் அங்கே அமர்ந்து பாடினார். அந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ‘தீட்டாயிடுத்து’ என்று கலைஞர் எழுதிய தலையங்கத்தை பெரியார் ரொம்பவே பாராட்டினார்.

 

பின்னர் கோவையில் உள்ள ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனத்தில் துணை வசனகர்த்தாவாக ஒரு படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் அந்தப்படத்தில் கலைஞரின் பெயர் போடாததால் அவருக்கு வருத்தம் ஏற்பட்டது. அங்கிருந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வந்தார். அப்போதுதான், மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். பராசக்தி படம் 1952ல் வருகிறது. அதற்கு முன்பே 1951ம் ஆண்டில், மணமகள் படத்திற்கு வசனம் எழுதினார். அந்தப் படத்திற்காக கலைவாணர் என்எஸ்கே கொடுத்த பணத்தில்தான் கலைஞர் சொந்தமாக கார் வாங்கினார். அப்போது அவருக்கு வயது 27. அந்த வயதில் தமி-ழில் வசனம் எழுதி கார் வாங்கி சரித்திரம் படைத்த ஒரே நபர் கலைஞர் மட்டும்தான். இன்று வரை யாரும் அந்த சாதனையைச் செய்யவில்லை.

 

அதன்பிறகுதான் அவர் சென்னைக்கே வருகிறார். கப்ஸா விடுபவர்களைக் கேட்டால், அவர் திருட்டு ரயிலில் வந்ததாகச் சொல்வார்கள். அவர் ஃபர்ஸ்ட் கிளாஸ்லயே வருவார். திமுக தலைவர்களிலேயே தமி-ழில் வசனம் எழுதி, சென்னையில் முதன்முதலில் சொந்தமாக வீடு வாங்கியது கலைஞர் மட்டும்தான்.

 

சரி… ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரிடம் இருந்த நகைகள் எப்படி வந்தது என்று கேட்டார்கள். அப்போது ஜெயலலிதா, எங்க பாட்டிக்கு, மைசூர் மகாராஜா கொடுத்தது என்று சொன்னார். எங்கள் கலைஞர், வசனம் எழுதி, தன் பெயர் இடம் பெற்ற திரைப்படங்கள் மூலமாக வெளிப்படையாக சம்பாதித்து, கார் வாங்கியிருக்கிறார். மைசூர் மகாராஜா எதற்காக பாட்டிக்கு நகை கொடுத்தார்? நீங்கள் ஏதாவது தப்பாக நினைத்து விடாதீர்கள்? நீங்கள் மைசூரில் போய் என்ன கலை வளர்த்தீர்கள்? ராஜகுருவாக இருந்து என்ன ஆலோசனை கொடுத்தீர்கள் என்று சொல்ல வந்தேன்.

 

நம் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு நம்மிடம் பதில் இருக்கிறது. சமூகத்தைப் புரட்டிப்போட்ட திறமைசாலி கலைஞர். திறமை இருப்பதால்தான் அவருக்கு சினிமா தயாரிப்பாளர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். அதை எல்லாம் சொல்லுங்கள். மைசூர் கதையெல்லாம் மறந்து விடுங்கள்.

 

திமுக தலைவர் கலைஞர் மீது
ஆதாரமே இல்லாமல் கூறப்படும்
குற்றச்சாட்டுகளை எப்படி
எதிர்கொள்வது?

 

இதுவும் திருட்டு ரயில்
கதை மாதிரிதான்.
வேறு ஒன்றும் கிடையாது.
கலைஞர் மீது சொல்லப்படாத
குற்றச்சாட்டுகள் என்றும்
எதுவும் இருக்காது.
ஊழல் குற்றச்சாட்டு என்பது
சர்க்காரியாவில் ஆரம்பித்து
2ஜி வரைக்கும் வருவார்கள்.
இதில் எந்த குற்றச்சாட்டும்
நிரூபிக்கப்படவில்லை.
சர்க்காரியாவுக்கு பெட்டிஷன்
கொடுத்தவர் எம்ஜிஆர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தை
மட்டும் எடுத்துப் போட்டாலே
போதும். நம் மீது அவதூறுகள்
யார் சுமத்துகிறார்களோ
அவர்களிடமே நமக்கான
பதில் இருக்கிறது. அதை
எடுத்துப் போடுவதுதான்
நம்முடைய வேலை.

 

எம்ஜிஆர் என்ன சொன்னார்?
2ஜி வழக்கில் நீதிபதி என்ன
சொன்னார்? இவ்வளவு வாய் கிழிய
பேசினவர்கள் எல்லாம் என்ன
ஆதாரம் கொண்டு வந்து
கொடுத்தார்கள்? என்பதை
2ஜி வழக்கில் தீர்ப்பு கொடுத்த
நீதிபதி சொல்லிவிட்டார்.
அதே பதிலை, சர்க்காரியாவில்
புகார் அளித்த எம்ஜிஆரே,
‘எனக்கு எதுவும் தெரியாது’
என்று பதில் சொல்லி விட்டார்.
திமுக மீதான ஊழல்
குற்றச்சாட்டுகள் எல்லாம்
இந்த ரகம்தான்.

 

எம்ஜிஆர், ஜெயலலிதா பிம்பத்தை
மக்கள் ஒழிக்கும் முன்பே,
எடப்பாடி பழனிசாமி லாவகமாக
தன் பேச்சில் எனது ஆட்சி,
எனது ஆணைக்கேற்ப என
முழங்குகிறாரே, இன்னுமா
எம்ஜிஆர் ஜெயலலிதா
விசுவாசிகள் இவர்களை
நம்புகிறார்கள்?

 

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா என்றே தெரியவில்லை. பிம்பம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக கட்டமைக்கப்பட்டது. அதைத் தகர்த்து வருவது என்பது பெரிய போராட்டம்தான். பிம்பத்தை தகர்ப்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம். இதுதான் இந்து மதம் என்று சொல்லி அதில் இருக்கின்ற 97 சதவீத மக்களை ஏமாற்றிவிட்டு, 3 சதவீத மக்களை மட்டும் அதற்குள் வைத்துக்கொண்டு பண்ணும் வேலைகள் இருக்கிறது. அந்த 3 சதவீதம் பேர் தீர்மானிப்பதுதான் நடக்கிறது.

 

எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் திராவிடக் கொள்கைகள் நிலைநிறுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிம்பம் வரும். அரசியல் ரீதியாக எம்ஜிஆர் என்ற பிம்பம் அவர்களுக்குக் கிடைத்தது. எம்ஜிஆர் என்ற பிம்பம் ஏன் அவ்வளவு வலிமையாக இருந்தது? ஏன் இன்னும் அந்த பிம்பம் பயன்படுத்தப்படுகிறது என்றால், அந்த பிம்பம் உருவான இடம் திராவிட இயக்கம். அதனால்தான் சொல்கிறேன் திராவிட இய க்கம் இப்போதும் வலிமையாக இருக்கிறது.

 

சினிமாவில், எம்ஜிஆருக்கு நம்பியார் எப்படி வலிமையாக இருந்தாரோ, அதுபோல திமுகவுக்கு நம்பியாராக எம்ஜிஆர் இருக்கிறார். திராவிட இயக்கம், உண்மைகளை மட்டுமில்லை; பிம்பத்தையும் வலிமையாக கொடுத்திருக்கிறது. ஏன் இந்த பிம்பத்தை வைக்கிறார்கள் என்றால், திமுகவுக்கு எதிராக கொண்டு செல்வதற்காகத்தான். அவர்களுக்கு எம்ஜிஆர் மீதோ, ஜெயலலிதா மீதோ அக்கறை கிடையாது.

 

திமுக வளர்ந்து விடக்கூடாது. திராவிட இயக்க கொள்கைகள் வந்துவிடக்கூடாது. சமூக நீதி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அத்தகைய பிம்பத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், கெட்டதில் நல்லதாக எம்ஜிஆராக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் இங்கே அரசியல் நடத்த வேண்டுமானால் சமூகநீதி என்ற ஒப்பனையாவது போட்டுக்கொண்டுதான் நிற்க வேண்டும். வேறு வழியே கிடையாது.

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தது என்பது ஒரு விபத்து. அதை வேறு ஒன்றும் பண்ண முடியாது. ஐசியூவில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணும் நாள் வரும். அதற்குதான் தேர்தல் இருக்கிறது. அப்போது மொத்தமாக டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஆனால், அதுவரை நம் மீது அவதூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி எல்லாம் பெரிய ராஜதந்திரிகள் கிடையாது. அதிகாரத்திற்கு வரும் வரை நமக்கு சில சிக்கல்கள் இருக்கும். ஆனால் அதிகாரத்தை அடைய நாம் கொள்கை ரீதியாக பயணத்தை எடுத்து வைக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்