Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

வாக்குச்சாவடிகள் மற்றும்
வாக்கு எண்ணிக்கை மையங்களில்
பணியாற்றும் ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்களுக்கு போதிய
கழிப்பறைகள், தண்ணீர்,
உணவு வசதிகள் செய்து
தராமல் ஒவ்வொருமுறையும்
தங்களை அரசும், தேர்தல்
ஆணையமும் கிள்ளுக்கீரையாக
நடத்துவதாக கடும் அதிருப்தி
கிளம்பியுள்ளது. தேர்தல்
பணிகளை முடித்துவிட்டுச்
செல்லும் ஊழியர்களுக்கு
பாதுகாப்பில்லை என்ற
குற்றச்சாட்டையும்
முன்வைக்கின்றனர்.

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதோடு ஒரு வாக்காளனின் ஜனநாயக கடமை முடிந்து விடுகிறது. ஆனால், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி அளப்பரியது.

இத்தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள், அரசு, நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என நான்கு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை தனியார் பள்ளி ஆசிரியர்களும்கூட தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு வாக்குச்சாவடிக்கு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர் மற்றும் அவருக்குக் கீழ் பணியாற்றும் நிலை-1 முதல் நிலை-6 வரையிலான 7 பேருக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக ஒரே ஒரு ஆண் ஊழியர் மட்டும் பணியமர்த்தப்பட்டு உள்ளார். மற்றவர்கள் பெண்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சீட்டுகள் செலுத்தும் பெட்டி, வாக்குச் சீட்டுகளை பெட்டிக்குள் உள்ளே தள்ளிவிடும் மூங்கில் பிரம்பு, அழியாத மை புட்டி, நான்கு வண்ண வாக்குச்சீட்டுகள் உள்பட 72 வகையான பொருள்களைக் கொண்டு செல்வதில் ஜாக்கிரதை உணர்வுடன் செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறதா என்றால் வெறும் கேள்விகளே மிஞ்சுகிறது.

”வாயிருந்தும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஊமை ஜனங்களாகிவிட்டோம் சார்… சொல்லவே வெட்கமாக இருக்கிறது… சிறுநீர் கழிக்கக்கூட போதிய கழிப்பறைகளோ, தண்ணீர் வசதியோ இல்லாத பள்ளிகளில்தான் தேர்தல் பணியாற்றி இருக்கிறோம்…,” என்கிறார்கள் பெண் ஊழியர்கள்.

சேலம் சிந்தி இந்து நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் சுசீலா (52), இதுவரை ஏழு முறை தேர்தல் பணியாற்றி இருக்கிறார். இந்த தேர்தலில் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து நம்மிடம் பேசினார்.

”உள்ளாட்சித் தேர்தலின்போது, எனக்கு சேலம் மாவட்டம் வளையக்காரனூர் அரசுப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும் நடத்தப்படும் தேர்தல் ஆயத்தக் கூட்டங்களில், வாக்குச்சாவடிகளில் கட்சி முகவர்கள் கொடுக்கும் உணவை தின்னக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். உணவு, தேநீர் உள்ளிட்ட வசதிகளை அரசே செய்து கொடுக்கும் என்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவது இல்லை. ஒருநேரம் உணவு கிடைத்தால், மதியம், இரவுப் பணிகளின்போது அம்போவென விட்டு விடுகிறார்கள். கடைசியில் நாங்கள் கட்சிக்காரர்களிடம்தான் கையேந்த வேண்டிய நிலை உள்ளது.

எங்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளியில் தண்ணீர் தொட்டிதான் பெரிதாக இருந்ததே தவிர, குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வரவில்லை. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய பல பெண்கள் வாக்குப்பதிவு நாளன்று குளிக்கவே இல்லை. டிச. 27ம் தேதி தேர்தல் என்றால், அந்த மையத்திற்கு முதல் நாள் மதியம் 12 மணிக்கெல்லாம் ஆஜராகி விட்டோம். மின்விளக்கு வசதியும் செய்யப்படாததால், அன்று இரவு முழுவதும் கும்மிருட்டில் தூக்கமின்றி தவித்தோம். காலைக்கடனை கழிக்கக்கூட காலை 8 மணி ஆகிவிட்டது. அதுவும் ஷிப்ட் முறையில் போனோம்.

ஜன. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்றும் எனக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அன்று காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் உள்பட எல்லா ஊழியர்களும் சென்று விட்டோம். மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகளை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால், அந்த நேரத்தில் பேருந்து வசதி இல்லை. என் கணவருக்கும் வாகனம் ஓட்டத் தெரியாது என்பதால், பேருந்துக்காக கொட்டும் பனியில் வெட்டவெளியில் அமர்ந்து இருந்தேன்.

அதிகாலை 3.30 மணியளவில், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து ஜீப்பில் கிளம்பிச் சென்றார். அவரிடம், ‘சார்… என்னை உங்கள் ஜீப்பில் ஏற்றிச் சென்று அம்மாபேட்டையில் விட்டுவிடுங்கள். அங்கிருந்து நான் யாரையாவது வரவழைத்து வீட்டுக்குப் போய்விடுவேன்’ என்று கூறினேன். அவரோ, அப்படியெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அவர்பாட்டுக்குச் சென்றுவிட்டார். அரசு ஊழியர் ஒருவரே இன்னொரு அரசு ஊழியருக்கு உதவாமல் போனால் எங்களுக்கெல்லாம் யார்தான் பாதுகாப்பு வழங்குவார்கள்?

கொலை பட்டினியாக வேலை பார்த்த எங்களுக்கு, வாக்கு எண்ணிக்கை நாளன்று இரவு 9 மணிக்கு கல் மாதிரியான நான்கு இட்லிகளை கொடுத்தார்கள். அதாவது கிடைத்ததே என்று சாப்பிட்டோம். இது இப்படி என்றால், தரமற்ற காகிதங்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டதால், ஒரு சின்னத்திற்கு சீல் வைத்த பிறகு வாக்குச்சீட்டை மடிக்கும்போது, அடுத்த சின்னத்திலும் சீல் பதிந்து விடுகிறது. அப்படி வேறு சின்னத்தில் பதிந்த மையை பிளேடு மூலம் சுரண்டும் வேலைகளையும் செய்தோம்.

இமாலய தேர்தல்களை நடத்துவதாக பெருமையாகச் சொல்லும் தேர்தல் ஆணையம், ஒரு வாக்குச்சீட்டைக் கூட தரமான காகிதத்தில் அச்சிட முடியாத நிலையில் இருக்கிறதா?,” என்று கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர் சுசீலா.

சிந்தி இந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, கடந்த மக்களவைத் தேர்தலின்போது முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சொன்னார்.

லதா – சந்திரசேகர் – சுசீலா

”மாநிலத் தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம் என எதுவாக இருந்தாலும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களின் நலன்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ஆணையங்களின் கவலை எல்லாம் ஓட்டு வாங்குவது மட்டும்தான்.

மக்களவை தேர்தலின்போது நான் உள்பட பல ஆசிரியர், அரசு ஊழியர்கள், ரிசர்வ் ஊழியர்களாக இடைப்பாடியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தோம். வாக்குப்பதிவுக்கு முதல் நாள் இரவு திடீரென்று, தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களில் சங்க நிர்வாகிகள் யார் யார் என்று கணக்கெடுத்து, அவர்களை பணியில் இருந்து விலக்கினார்கள். அதனால், அவர்களுக்கு பணி ஒதுக்கிய வாக்குச்சாவடிகளில் ரிசர்வில் இருந்த எங்களை, இரவு 9 மணியளவில் திடுதிப்பென்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும்படி மிரட்டினர்.

வாக்குச்சாவடிகளுக்கு
செல்லும்போது நடு ராத்திரிக்கு
மேல் ஆகிவிட்டது. எல்லோருக்கும்
பயங்கர பசி. தேர்தல் பணிக்குச்
செல்ல வேண்டும் என மிரட்டிய
அதிகாரிகள், எங்களுக்கு வயிறுனு
ஒண்ணு இருப்பதையே மறந்துவிட்டனர்.
உணவுக்காக பல இடங்களில்
அலைந்தோம். ஒரு கடையில்
சென்று உப்புமாவது கிளறி கொடுங்க
என்று கெஞ்சினோம். எங்கள் மேல்
பரிதாபப்பட்டு, அந்த கடைக்காரர்கள்
உப்புமா தயார் செய்து கொடுத்தனர்.

நான் தேர்தல் பணியாற்றிய பள்ளியில், இயற்கை உபாதைகளைக் கழிக்க போதிய கழிப்பறைகள். கழிப்பறை இருந்தால் தண்ணீர் வசதி இல்லை. அதனால் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடிக்க மாட்டோம். நாங்களே வாக்குச்சாவடி அறைகளை பெருக்கி சுத்தம் செய்தோம். மின்சார வசதிகூட இல்லாத பள்ளி அது. ஆளும் அரசு மட்டுமின்றி, தேர்தல் ஆணையங்கள் கூட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கேவலமாகத்தான் நடத்துகிறது,” என்கிறார்.

வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தலைமை அலுவலருக்கு 2050 ரூபாயும், அவருக்குக் கீழ் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு 1550 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்பார்வையாளருக்கு 850 ரூபாயும், மற்றவர்களுக்கு 650 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தில், உணவுக்காக 100 ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளப்படும். ஆக, தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் தர்மத்திற்கு பணியாற்றவில்லை என்று மேலோட்டமாக புரிந்து கொண்டாலும்கூட, அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் படும் துயரங்களுக்கு அத்தொகை கொஞ்சமும் ஈடாகாது.

இதுபற்றி தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகர் (55) விரிவாகப் பேசினார்.

தேர்தல் பணிக்கான
வாக்குச்சாவடிகள் பெரும்பாலும்
அரசுப்பள்ளிகளில்தான்
அமைக்கப்படுகின்றன.
பல பள்ளிகளில் கழிப்பறைகள்
இருந்தால் போதிய தண்ணீர்
வசதி இருக்காது. மின்சார
வசதி இருக்காது. இதுபோன்ற
அடிப்படை வசதிகளை எல்லாம்
அந்தந்த கிராம ஊராட்சி
செயலர்தான் செய்திருக்க
வேண்டும். ஆனால் அனைத்து
வசதிகளையும் செய்துவிட்டதாகச்
சொல்லித்தான் ஒப்புதல் பெற்று,
வாக்குச்சாவடிகள் அமைக்கிறார்கள்.
இந்த வகையில் மட்டும்
ஊராட்சி செயலர்கள், அதிகாரிகள்
பெரிய ஊழல் செய்திருக்கிறார்கள்.

தேர்தல் காலங்களில்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
படும் அவஸ்தைகளை இன்னொரு
கோணத்திலும் பார்க்கிறேன்.
எனக்கு வீரபாண்டி ஒன்றியத்துக்கு
உட்பட்ட பெருமாம்பட்டி
வாக்கு எண்ணும் மையத்தில்
பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அங்கு பணிகளை முடித்துவிட்டு
இரவு 1.30 மணியளவில் கிளம்பும்போது,
இரண்டு பெண் ஊழியர்களும்
வாக்குச்சாவடிக்கு வெளியே
அர்த்த ராத்திரியில் பேருந்துக்காக
காத்திருந்தனர். பேருந்துகள்
வராத நேரம் அது. அவர்களில்
ஒருவர் திருமணம் ஆகாதவர்.
இன்னொருவர், புதிதாக
திருமணம் ஆனவர்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு
வெளியே கட்சிக்காரர்கள்,
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்
பலர் குடிபோதையில் உற்சாகமாக
இருந்தனர். இதுபோன்ற நேரங்களில்
பெண் ஊழியர்களின் பாதுகாப்பும்
கேள்விக்குறியாகி விடுகிறது.
பிறகு எங்கள் சங்க நிர்வாகி
ஒருவரை காரில் வரவழைத்து,
அவர்களை பத்திரமாக வீட்டுக்குக்
கொண்டுபோய் விட்டோம்.

தேர்தலை ஜனநாயகத் திருவிழா
என்று சொன்னால், ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள் சந்தோஷமாகத்தானே
தேர்தல் பணிக்குச் செல்ல வேண்டும்?
ஆனால் களத்தில் அவ்வாறு
நிகழவில்லையே ஏன்? பல பேர்,
ஆளை விட்டால் போதும் என்ற
நிலையில்தான் இருக்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல்
பணிக்குச் செல்ல விரும்பவில்லை
என்று கூறிய 2017 ஆசிரியர்களுக்கு
முதன்மைக் கல்வி அலுவலர்
’17 பி’ மெமோ கொடுப்பேன்
என்று மிரட்டினார்.

அரசு ஊழியர்களும்,
ஆசிரியர்களும் வாயில்லா
பூச்சிகளாக… ஊமை ஜனங்களாகி
விட்டோம். எங்களை இந்த அரசும்,
தேர்தல் ஆணையமும் கொத்தடிமை
போலத்தான் நடத்துகிறது.
‘வாக்கு எண்ணும் மையத்தில்,
கட்சிக்காரர்கள் பிரியாணி
போட்டிருப்பார்கள். சாப்பிட்டுவிட்டு
வந்திருப்பார்கள்’ என்று
அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்களைப் பற்றி கேவலமாக
விமர்சனம் செய்திருப்பது
வேதனை அளிக்கிறது.

எங்களை எதற்கெடுத்தாலும்
’17 ஏ’ மெமோவைச் சொல்லி
மிரட்டியே, பணியில் ஈடுபடுத்தும்
இந்த அரசு, அர்த்த ராத்திரியில்
பணி முடிந்து திரும்பும் ஊழியர்களின்
பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமாவது
சிந்தித்து இருக்கிறதா? தேர்தல்
பணிகளில் 95 சதவீதம் பெண்கள்தான்
ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும்,
பணிகளை முடித்துவிட்டு, பெண்கள்
நடு இரவிலும் தனியாக பாதுகாப்பாக
சென்றுவிடும் நிலை இன்னும்
தமிழ்நாட்டில் வரவில்லை.
அதையெல்லாம் சிந்திக்காத
தேர்தல் ஆணையமும், அரசாங்கமும்
சட்டத்தைக் காட்டி மிரட்டி
பணிய வைக்கிறது.

வாக்குச்சாவடி,
வாக்கு எண்ணும் மையங்களில்
மாற்று ஊழியர்களை சுழற்சி
முறையில் பணிகளில் ஈடுபடுத்தினால்
ஓரளவுக்கு இப்பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கும். ஆனால், அரசாங்கம்
எங்களை ‘ரீபில் பேனா’ போல
பயன்படுத்தி விட்டு தூக்கி
எறிந்து விடுகிறது. வேலை
செய்யாத ஊழியர்களுக்கு வேலை
கொடுக்காமல் இருப்பதும்,
வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு
மெமோ கொடுப்பதும் தொடர்கிறது,”
என்கிறார் சந்திரசேகர்.

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறையினர் பலரும்கூட உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். கைக்குழந்தையுடன் வாக்களிக்க வரும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்க மறைவிடமின்றி தடுமாறியதையும் நேரில் கண்டோம். இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் என்பதைக்கூட அறியாத அமைப்புகளாகத்தான் ஆளும் அரசும், அதன் தேர்தல் ஆணையமும் இருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது?

அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் எப்படிப்பட்ட கலனும் வெடித்து விடும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும்கூட அப்படியானவர்கள்தான் என்பதை ஆளும் அதிகார வர்க்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

– பேனாக்காரன்