Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதிய கதைக்களத்துடன் வந்திருக்கும் படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபடும், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணீ காட்டி வரும் ஒரு கும்பலை வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன் லைன்.

நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ‘போஸ்’ வெங்கட், அபிமன்யூ சிங், மனோபாலா, சத்யன் மற்றும் பலர். இசை – ஜிப்ரான். ஒளிப்பதிவு – சத்யன் சூரியன். தயாரிப்பு – ட்ரீம் வாரியர்ஸ். இயக்கம் – ஹெச்.வினோத்.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்று (நவம்பர் 17, 2017) வெளியாகி இருக்கிறது ‘தீரன் அதிகாரம் ஒன்று’. தொடர் குற்றத்தில் ஈடுபடும் ஒரு கும்பலை, ஒரு காவல்துறை அதிகாரி எப்படி பிடிக்கிறார்?, அதற்காக அவர் சந்திக்கும் இழப்புகள், சறுக்கல்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை ஆக்ஷன் திரில்லர் கலந்து பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

காவல்துறையில் கணினிமயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. அப்போது ஓர் ஆவணக் கோப்பை எதேச்சையாக பார்க்கும் காவல்துறை அதிகாரி, 1995 முதல் 2005 வரை தமிழகத்தில் பல குற்றச்செயல்களில் அதிரடித்து வந்த ஒரு கும்பல் பற்றியும், அவர்களை அழித்தொழித்த காவல்துறை அதிகாரி பற்றிய தகவல்களும் அதில் இருக்கிறது.

அந்த கோப்பில் உள்ள சம்பவங்களைச் சொல்லும் ஃபிளாஷ்பேக் காட்சிகளாக கதை விரிவடைகிறது. இந்தப்படம் உண்மைச் சம்பவங்களைத் தழுவியது என்பதோடு, நம்மில் பலர் பத்திரிகை செய்திகளாக படித்தவைதான் என்பதால், இந்தப்படம் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது.

இந்தப் படத்தில் கார்த்தி, தீரன் திருமாறன் என்ற பாத்திரத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நடித்திருக்கிறார் என்பதைவிட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம். நடையில், உடையில், பேச்சில் அத்தனை மிடுக்கு.

நேர்மையான அதிகாரி என்பதாலேயே அடிக்கடி இடமாற்றத்திற்கு ஆளாகிறார். அப்படி ஒருமுறை அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உள்கோட்டத்திற்கு மாறுதல் செய்யப்படுகிறார்.

திடீரென்று நெடுஞ்சாலை ஓரமாக தனியாக இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழையும் மர்ம கும்பல், அங்கிருந்தவர்களைக் கொடூரமாக கொன்றுவிட்டு, நகை, பணத்தை அள்ளிச்சென்று விடுகின்றனர்.

இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே எம்எல்ஏ ஒருவரும் கொடூரமாக மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகே அந்த கொலைகார கொள்ளை கும்பலைப் பிடிக்கும் விசாரணை தீவிரம் அடைகிறது. அங்கு திரைக்கதையில் தொடங்கும் வேகம், மேலும் மேலும் வேகமெடுத்து, படத்தின் இறுதிவரை பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்த்தி விடுகிறது.

இதுபோன்ற நாசகார வேலைகளில் ஈடுபடுவது வடநாட்டு கொள்ளை கும்பல்தான் எனத் தெரிந்தவுடன், கதை ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு நகர்கிறது. அங்கு செல்லும் தமிழ்நாடு காவல்துறையினர் கொள்ளை கும்பலைச் சேர்ந்த சிலரை என்கவுன்ட்டர் செய்தும், சிலரை உயிருடனும் பிடித்து வருகிறார்கள்.

வடநாட்டு கொள்ளை கும்பல் தலைவனாக வரும் அபிமன்யூ சிங், மிரட்டல். இனி அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வரலாம்.

கதை, 1995-2005 காலக்கட்டத்தில் நடக்கிறது. அந்தக் காலக்கட்டத்தை சித்தரிக்கும் செட்டுகளும் போடப்பட்டுள்ளது, கவனம் ஈர்க்கின்றன. அப்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, கொள்ளை கும்பலை விரல் ரேகை ஆதாரங்களைக் கொண்டு வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

வடமாநிலங்களில் புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி. காக்கி உடை அவருக்கு அருமையாக பொருந்தி போகிறது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கிறது. திலீப் சுப்பராயன் தெறிக்கவிட்டிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி, நாயகி ரகுல் பிரீத் சிங் உடனான ரொமான்ஸ் காட்சிகளும் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. வேகமாக திரைக்கதை கொண்ட இப்படத்தில், ரொமான்ஸ் காட்சிகள் சற்று பிரேக் போடுவதாக தெரிகிறது. ‘செவத்தப் பொண்ணு…’, ‘ஒரு வீட்டில் நீயும் நானும்…’ போன்ற பாடல்கள் நன்றாக இருந்தாலும், அவையும் வேகமான திரைக்கதையில் ஒட்டவே இல்லை. அந்தப் பாடல்களை வெட்டிவிட்டு பார்த்தாலும் எந்த பாதிப்பும் உணர முடியாது.

ரகுல்பிரீத் சிங் நடித்தால் படங்கள் ஓடாது என்ற முத்திரை இந்தப் படத்தின் மூலம் தகர்க்கப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 பெயிலான ஒரு பெண்ணின் குறும்புத்தனங்கள் ஆகட்டும், கார்த்திக் உடனான ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் ரகுல் பிரீத் சிங் ரொம்பவே வசீகரிக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானாலும் ஆச்சர்யம் இல்லை.

கொலை, கொள்ளையை வெறும் செய்திகளாக மட்டும் பார்த்த நமக்கு அந்த கும்பலை பிடிப்பதில் காவல்துறையினர் காட்டும் தீவிரம் குறித்து படம் விரிவாக பேசுகிறது. புதிய கதைக்களம் என்பதால் அதற்கான டீட்டெய்லிங் செய்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

வினோத் படம் என்றாலே வசனத்திற்கு முக்கியத்துவம் இல்லாமலா? அதுவும் இருக்கிறது. ஆனால், ஷார்ப்.

நாயகனுக்கு நேர்மையான காவல்துறை அதிகாரி பாத்திரம் என்றாலே, காட்சிக்கு காட்சி நாயகனின் அசாத்திய நாயக பிம்பம் தெறிக்கும் படங்களை மட்டுமே பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். காக்கி கதைகளில் வரும் ‘கிளீஷே’க்களை உடைத்திருக்கிறது இந்தப்படம்.

படத்தின் வேகத்திற்கு ஜிப்ரானின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். ஓர் ஒளிப்பதிவாளருக்கு லைட்டிங் எந்தளவுக்கு முக்கியம், எந்தெந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, இந்தப்படத்தை ரெஃபரன்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு, சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கச்சிதம். எடிட்டிங்கும் விறுவிறுப்பு.

படத்தில் இடைவேளை வருவதை உணர்வதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அந்தளவுக்கு திரைக்கதை படுவேகத்தில் பயணிக்கிறது. துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களுக்குரிய பங்கை கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

பவாரியா ஆபரேஷனில் ஈடுபடும் ‘போஸ்’ வெங்கட், தன் குடும்பம் பாதிக்கப்படும்போது, ‘சார் என்ன இந்த ஆபரேஷன்ல இருந்து அனுப்பிடுங்க சார்’ உருகும்போது பார்வையாளர்களை நெகிழச் செய்து விடுகிறார்.

சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளை முடித்திருக்கும் கார்த்திக்கு, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கும். சூர்யாவுக்கு சிங்கம் பட வரிசைபோல் கார்த்திக்கு, தீரன் வரிசை படங்கள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. தீரன் அதிகாரம் இரண்டு எப்போது? என தங்களை அறியாமலே ரசிகர்களை கேட்க வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றியும் கூட.

– வெண்திரையான்.