Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!: திடுக்கிடும் வாக்குமூலம்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, பணத்திற்காக தாய் படுகொலை என அடுத்தடுத்த குற்றத்தில் ஈடுபட்டு வந்த தஷ்வந்த், பெற்ற தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை போரூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம், 7 வயதே ஆன ஹாஸினி என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள். சந்தேகம் வராமல் இருக்க, சடலமும் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பெற்ற தாயென்றும் பாராமல் பணம் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு மும்பைக்குக் தப்பி ஓடினார்.

சூதாட்ட பிரியரான தஷ்வந்த், மும்பையில் குதிரை பந்தயம், சீட்டாட்டம் என்று பொழுதைக் கழித்து வந்த நிலையில், தமிழக தனிப்படை காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மும்பையில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தஷ்வந்த் மீண்டும் தப்பிச்சென்றார்.

கழிப்பறை செல்ல வேண்டும் என்று கூறியதால் அவருடைய ஒரு கைவிலங்கை காவல்துறையினர் கழற்றியுள்ளனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் தப்பியோடியது தெரியவந்தது. உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் தஷ்வந்தை மீண்டும் மடக்கிப்பிடித்த தனிப்படையினர் அவரை, மும்பை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். மேலும், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. விசாரணை முடிந்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட தஷ்வந்திடம் நேற்று இரவு (டிசம்பர் 9, 2017) முழுவதும் தீவிர விசாரணை நடந்தது.

பாட்ஷா படத்தில் சொல்வதுபோல், நாடி, நரம்பு, புத்தி அனைத்திலும் கொலைவெறி ஊறிப்போனவனாகவே தஷ்வந்த் மாறியிருப்பதாக காவல்துறை தனிப்படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். கிடைத்த பணத்தில் கோவை, மும்பை, சென்னை என பல இடங்களில் சீட்டாட்டம், மது, பெண்களுடன் உல்லாசம் என்று சுகபோகமாக கழித்திருப்பது தெரியவந்துள்ளது.

தாய் சரளா கொல்லப்பட்டது குறித்து வாக்குமூலம் பெற்றனர். அவர் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்ததாலும், கைச்செலவுக்கு பணம் தராததாலும்தான் தாயைக் கொன்றேன் என்று கூறியுள்ளார். அதோபோல், செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தை சேகரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருந்ததாகவும், அன்று அவர் வேலைக்குச் சென்றுவிட்டதால் தப்பித்தார் என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சரளா கொலையில் தஷ்வந்தின் நண்பர்கள் தாஸ், டேவிட் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. தஷ்வந்த் தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கோயம்பேட்டில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply