Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சத்யா – சினிமா விமர்சனம்

காணாமல் போன பெண் குழந்தையை மீட்க போராடும் இளைஞன் சந்திக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சிக்கல்களும்தான் சத்யா படத்தின் ஒன்லைன்.

நடிகர்கள்: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஸ், ‘யோகி’ பாபு, ‘நிழல்கள்’ ரவி; இசை: சைமன் கே கிங்; ஒளிப்பதிவு: அருண்மணி பழனி; எடிட்டிங்: கவுதம் ரவிச்சந்திரன்; தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி; இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

நாயகன் சத்யா (சிபிராஜ்) ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடன் யோகி பாபுவும் பணியாற்றுகிறார். திடீரென்று ஒருநாள் சிபிராஜிக்கு அவருடைய முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது.

சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் அவசரமாக ஓர் உதவி கேட்க, நாயகனும் இந்தியா திரும்புகிறார். தன் நான்கு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் சிபிராஜ், குழந்தையை தேடி பயணிக்கிறார். அவர் குழந்தையைக் கண்டுபிடித்தாரா இல்லையா? உள்ளூர் காவல்துறை, கணவர் என்றெல்லாம் விட்டுவிட்டு தன்னை எதற்காக ரம்யா நம்பீசன் அழைத்தார்? போன்ற கேள்விகளுக்கு ட்விட்ஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து விடை சொல்கிறது சத்யா.

சிபிராஜூம், ரம்யா நம்பீசனும் ஒரே ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இருவரும் காதலிக்கின்றனர். ஆனால், ரம்யா நம்பீசனின் தந்தைக்கு (நிழல்கள் ரவி) இந்தக் காதல் பிடிக்கவில்லை. இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், திடீரென்று நிழல்கள் ரவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அப்போது ஏற்பட்ட இடைவெளியில் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார் நிழல்கள் ரவி.

காதல் கைகூடாத சோகத்தில் இருக்கும் சிபிராஜூக்கு பணியாற்றும் நிறுவனத்தின் சார்பில் ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு, அங்கு சென்று விடுகிறார். ரம்யாவை பிரிந்து நான்கு வருடங்கள் கழித்து அவரிடம் இருந்து ஃபோன் வருகிறது.

ரம்யா நம்பீசனின் குழந்தையைப் பற்றி விசாரிக்கும் சிபிராஜிக்கு அவர் சந்திக்கும் ஒவ்வொருவரும் தரும் தகவல்களும் அவரை அதிர்ச்சி அடையச் செய்கிறது. கிட்டத்தட்ட அப்படி ஒரு குழந்தையே இல்லை என்பதுபோல் பலரும் பதில் தருகின்றனர். போதாக்குறைக்கு ரம்யாவின் கணவரும், அவருக்கு மூளை குழம்பி விட்டதாகவும், இல்லாத குழந்தையை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பேசுவதாகவும் ட்விஸ்ட் போடுகிறார். உள்ளூர் காவல்துறையும் அப்படியொரு குழந்தையே இல்லை என்கிறது.

ஒரு கட்டத்தில், ரம்யா நம்பீசன் மீதே சிபிராஜிக்கு சந்தேகம் வலுக்கிறது. தன்னையே சந்தேகம் கொண்டதால் விரக்தி அடையும் அவர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

ரம்யா வசிக்கும் வீட்டு சுவரில் இருந்து குழந்தை இருந்ததற்கான முக்கிய தடயத்தை பெறுகிறார் சிபிராஜ். அவருடைய தொடர் விசாரணையில், ரம்யா நம்பீசனின் கணவர் மற்றும் அவருடைய தம்பி ஆகியோர்தான் குழந்தையைக் கடத்தியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் சிபிராஜ்.

இந்நிலையில், ரம்யாவின் கணவரின் தம்பி கொல்லப்படுகிறார். மீண்டும் முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இருந்தாலும், பெற்¢ற குழந்தையை தந்தையே ஏன் கொல்லத் துடிக்கிறார்? என சிபிராஜ் எழுப்பும் சந்தேகத்திற்கு அதிர்ச்சியான பதில் கிடைக்கிறது.

குழந்தையின் விவகாரத்தில் காவல்துறை, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என எல்லோரும் கூட்டு சேர்ந்து பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன? காணாமல்போன குழந்தை கிடைத்ததா? என பல்வேறு கேள்விகளையும் கதையின் போக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதன் போக்கிலேயே அதன் மர்ம முடிச்சுகளையும் பரபரப்பான திரைக்கதையால் அவிழ்க்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

ஓராண்டுக்குமுன், தெலுங்கில் வெளியான ‘க்ஷணம்’ படத்தின் மறு ஆக்கம்தான் சத்யா. தமிழுக்காக சில இடங்களில் சின்னச்சின்ன மாற்¢றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், க்ஷணம் படத்தின் பிரதான திரைக்கதையை சிதைக்காமல் அப்படியே தமிழில் தந்துள்ளதால் மூலப்படத்தின் அதே சுவாரஸ்யம், விறுவிறுப்பு அப்படியே சத்யா படத்திலும் இருக்கிறது சிறப்பு.

சிபிராஜ் கதைக்குத் தேவையான அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எமோஷனல் காட்சிகளில் இன்னும் தேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கு நடிக்க வராது என்பதை யோகி பாபு மூலம் ஒரு நக்கல் வசனத்தை வைத்து, பார்வையாளர்களுக்கு சொல்லிவிடுகிறார். ஆனாலும், மோசமில்லை.

காதல், ரொமான்ஸ், எமோஷனல், குழந்தையைக் காணாமல் தவிக்கும் பரிதவிப்பு என ரம்யா நம்பீசன் பிய்த்து உதறுகிறார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு காவல்துறை அதிகாரி வேடம். சில காட்சிகள்தான் என்றாலும், நிறைவாக செய்திருக்கிறார். உள்ளூர் காவல்துறை அதிகாரியாக வரும் ஆனந்தராஜ், வழக்கமான நக்கல் நையாண்டி வசனங்களால் கவனம் ஈர்க்கிறார்.

யோகி பாபுவுக்கு இதில் ஒரு சில காட்சிகள் மட்டும்தான். சதீஸுக்கு நல்லவேளையாக இந்தப்படத்தில் காமெடி காட்சிகள் இல்லை. அவரும் ஒரு கேரக்டர் ரோல்தான் செய்திருக்கிறார் என்பதால் மொக்கை ஜோக்குகளின்றி படத்தை ரசிக்க முடிகிறது. சொல்லப்போனால் சதீஸ்தான் சில இடங்களில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப் பயன்பட்டிருக்கிறார்.

சைமன் கே கிங் தமிழுக்கு புதிய வரவு. அவருடைய இசையில் ‘யவ்வனா…’ பாடல் திரும்பவும் கேட்கலாம். பின்னணி இசை, திரைக்கதையை இன்னும் வேகமெடுக்க வைக்கிறது. அதேபோல்தான், எடிட்டிங்கும். திரில்லர் கதைக்கு ஏற்ற படத்தொகுப்பால் அசத்தி இருக்கிறார் கவுதம் ரவிச்சந்திரன். இருப்பினும், காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் வெட்டி எறிந்திருக்கலாம்.

குழந்தையைத் தேடிப்போகும் ஒவ்வோர் இடத்திலும் பேசும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனி.

ஒவ்வொரு காட்சியிலும் எழும் மர்ம முடிச்சுகள், கிளைமேக்ஸ் காட்சியில் நெகிழ்வான முடிவு, நான் லீனியர் திரைக்கதை என தவிர்க்க முடியாத படமாகி இருக்கிறது, சத்யா.

 

– வெண்திரையான்.