Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கணபதியை பிப்ரவரி 6ம் தேதி முதல் பணி இடைநீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

கணபதியை கைதுக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது புதிதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். பணி நியமன விவகாரத்தில் கணபதி மட்டுமின்றி அரசியல் புள்ளிகளுக்கும், பிற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சிலருக்கும்கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை கோவை ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ இன்று (பிப்ரவரி 12, 2018) விசாரித்தார். கணபதியை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனத் தெரிகிறது.