Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, மேலும் 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டும் எனக்கூறினர்.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்குவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு செல்லுபடி ஆகும் என்றும் கூறினார்.

தமிழகத்திற்கு வெட்டு:

தமிழகத்தில் காவிரி படுகையில் 20 டிஎம்சி-க்கும் அதிகமாகவே நிலத்தடி நீராதாரம் இருக்கிறது. அதிலிருந்து தண்ணீர் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதனால், தமிழகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரிலிருந்து 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு, 177.25 டிஎம்சி ஆக குறைக்கப்படுகிறது. இதனை, கர்நாடகா அரசு உரிய காலத்தில் தமிழகத்திற்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

பெங்களூர் நகர மக்களின் குடிநீர் தேவையும், தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் கர்நாடகாவிற்கான காவிரி நீர் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் தீபக் மிஸ்ரா கூறினார்.

நதிநீர் என்பது தேசிய சொத்து. அதை எந்த ஒரு மாநில அரசும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்து இருந்தார்.

இவ்விவகாரத்தில், கடந்த 2007ம் ஆண்டு தீர்ப்பு அளித்த காவிரி நடுவர் மன்றம், கர்நாடக அரசு தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீரை பத்து மாதங்களில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தண்ணீரின் அளவிலிருந்து 14.75 டிஎம்சி குறைத்து, அதை கர்நாடகாவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளா, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காவிரி நீர் விவகாரத்தில் பெரிய அளவில் பயன்படக்கூடிய தமிழகத்திற்கு இந்த தீர்ப்பு ஓரவஞ்சனையாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.

கர்நாடகாவுக்கு ஆப்பு:

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மைசூர் அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி, கர்நாடகா அரசு எந்த இடத்திலும் புதிதாக அணைகள் கட்ட முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

சாத்தியமா?:

இது வரவேற்கப்பட வேண்டிய அம்சம் என்றாலும், காவிரி படுகையில் 20 டிஎம்சி வரை நிலத்தடி நீர் இருப்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பு சற்றே முரணாகப் படுகிறது. நிலத்தடி நீர் என்பது ஒவ்வொரு இடத்திலும் மாறுபடக்கூடியது. அதை உறிஞ்சு எடுத்து விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

யார் யார் என்ன சொன்னார்கள்?:

ஜெயக்குமார், அமைச்சர்:

காவிரி நீரில் உரிய பங்கைப் பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு காவிரி நீர் பங்கீடு 205 டிஎம்சி குறையக்கூடாது, காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா வழி வந்த அரசும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்றைய தீர்ப்பில் தமி-ழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டதாக வருத்தம் அளிக்கிறது. அதேநேரம், கர்நாடகா அரசு காவிரியை தங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடி வந்தது. அப்படி யாரும் காவிரியை சொந்தம் கொண்டாட முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

மு.க. ஸ்டாலின், திமுக செயல் தலைவர்:

தமிழகத்திற்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நமது உரிமைகளை பறிகொடுத்துவிட்டது. இது தொடர்பான உடனடியாக அரசு, அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்.

தமிழிசை, பாஜக தலைவர்:

தமிழகத்திற்கு காவிரி நீர் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த தீர்ப்பை தமிழக பாஜக வரவேற்கவில்லை.

கமல்ஹாசன், நடிகர்:

காவிரி நீர் குறைப்பு என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் சின்னதாக மனநிம்மதியும் இருக்கிறது. கொடுத்திருக்கிறது. முன்பு ஒருமுறை ஆர்ப்பாட்டத்தின்போது, நாம் குரங்குகளாக இருந்தபோதே காவிரி ஓடிக்கொண்டு இருந்தது. இப்போது திடீரென்று யாரும் அதை சொந்தம் கொண்டாட முடியாது என்று கோபத்தில் சொன்னேன். இப்போது அதே கருத்தை தீர்ப்பில் சொல்லியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

இப்போது நமக்கு கிடைத்திருக்கும் நீரை பத்திரப்படுத்துவதுதான் முக்கியம். ஓட்டு வேட்டைக்காக இரு மாநிலங்களிலும் யாரும் சச்சரவுகளுக்கு வழிவகுத்து விடக்கூடாது. கிடைக்கும் தண்ணீரை எப்படி சேமிப்பது, எப்படி உபயோகிப்பது என்பதைத்தான் யோசிக்க வேண்டும். இது ஓர் அழுத்தமான தீர்ப்பு. தண்ணீர், தேசிய சொத்து.

சித்தராமைய்யா, கர்நாடகா முதல்வர்:

காவிரி படுகை விவசாயிகளுக்கும் கர்நாடகா மக்களுக்கும் இது நல்ல செய்தி.

கொண்டாட்டமும், பாதுகாப்பும்:

உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகாவில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், இந்த தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள கர்நாடகா நிறுவனங்கள், சொத்துகளுக்கு சேதம் அடையக்கூடாது என்பதற்காக கர்நாடகா வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு தமிழக அரசு காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பேருந்துகள் கர்நாடாகா எல்லையிலேயே நிறுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.