Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நாச்சியார் – சினிமா விமர்சனம்

இயக்குநர் பாலாவிடம் இருந்து சற்றே மாறுபட்ட கோணத்தில், இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் படம், நாச்சியார். காவல்துறை அதிகாரி அவதாரம், ஜி.வி.பிரகாஷின் குப்பத்து பையன் தோற்றம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாச்சியார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம்.

நடிப்பு: ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, ‘ராக்லைன்’ வெங்கடேஷ் மற்றும் பலர்.

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் மற்றும் இஓஎன் ஸ்டுடியோஸ்

இயக்கம்: பாலா

 

கதை என்ன?

திருமணம் ஆகாத ஒரு மைனர் பெண் கர்ப்பிணி ஆகிறார். சந்தேகத்தின்பேரில் அந்த இளம்பெண்ணின் காதலனை காவல்துறை கைது செய்கிறது. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்தக் குழந்தைக்கும், கைதான இளைஞனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. எனில், அந்த மைனர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய கயவன் யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது? என்பதுதான் படத்தின் கதை.

திரைமொழி:

நாச்சியார் கதை, சென்னை வளசரவாக்கத்தில் நடந்த ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதனாலோ என்னவோ சென்னையில் வியாபித்திருக்கும் குப்பங்களுள் ஒன்றுதான் படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

கதையின் நாயகன் காத்து என்கிற காத்தவராயன் (ஜி.வி.பிரகாஷ்குமார்), பெற்றோரை இழந்த விடலைப் பருவத்தின் விளிம்பில் இருக்கும் ஓர் இளைஞன். கிடைக்கின்ற கூலி வேலைகளைச் செய்து வருகிறான். வீட்டு வேலைகள் செய்து வரும், பதின் பருவ வயதுடைய ஓர் இளம்பெண் அரசி (இவானா).

குப்பத்து தெருவில் ஓர் ஏதேச்சையான சூழலில் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. வழக்கம்போல் மோதலில் தொடங்கி, காதலில் முடிகிறது. இருவரும் தீவிரமாக காதலிக்கின்றனர். வயதும், சூழ்நிலையும் அவர்களை உடல் அளவிலும் ஒன்றிணைய வைத்துவிடுகிறது. விளைவு… இவானா கர்ப்பம் அடைகிறாள்.

மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியது காத்துதான் என்று அரசியின் தந்தை காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கு விசாரணை, நேர்மையான அதேநேரத்தில் முரட்டுத்தனமான காவல்துறை பெண் உதவி ஆணையரான நாச்சியாரிடம் (ஜோதிகா) செல்கிறது. காத்தவராயனை துரத்திச் சென்று பிடித்து கைது செய்கிறது காவல்துறை.

முரட்டுத்தனமான விசாரணைகளுக்குப் பின்னர் காத்தவராயனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கின்றனர். அரசியை மட்டும் தன் சொந்த பாதுகாப்பில் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் காவல்துறை அதிகாரியான நாச்சியார்.

அங்கு அரசிக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. மரபணு சோதனையில் அந்த குழந்தைக்கும், கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட காத்து என்கிற காத்தவராயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது புலனாகிறது. அப்படி எனில் அந்தக் குழந்தை பிறப்புக்கு காரணமானவர் யார்?, மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரனை எப்படி தண்டித்தார்கள்? என்பதை ரசிக்கும் வகையிலும், ஏற்கும் வகையிலும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாலா.

கொள்ளை கொள்ளும் ஜோதிகா:

‘நாச்சியார்’ ஜோதிகா அறிமுகக் காட்சியே அவரின் பாத்திரப் படைப்பை சொல்லிவிடுகிறது. அவர் வரும் ஜீப், எதிரில் சென்று கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிடுகிறது. அதற்காக ஜீப்பை ஓட்டி வந்த தனது ஓட்டுநரை அடிக்கப் பாய்வதும், மோட்டார் சைக்கிள் மீது மோதியதற்காக வாகனத்தை விட்டு கீழே இறங்கிச் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், யாருக்கும் அடிபடலையே? என்று விசாரித்து விட்டு மீண்டும் தன் வாகனத்தில் ஏறிப்பயணிப்பதுமான வித்தியாசமான அறிமுகம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்றொரு படம் வெளியானது. அதில் ஜோதிகாவுக்கு ரொம்பவே வித்தியாசமான பாத்திரம். அதன்பின், மிக வலுவான பாத்திரம் என்றால் நாச்சியார் படத்தைச் சொல்லலாம்.

காவல்துறை அதிகாரி உடையில் அத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஜோ. கூர்மையான பார்வை, எக்குத்தப்பான வசனங்கள், கையை சுருட்டிவிட்டபடி செல்லும் அலட்சியமான உடல்மொழிகளால் ரசிகர்களை தெறிக்க விடுகிறார்.

டிரைலரில் அவர் பேசிய ‘தேவடியா பயலுகளா…’ என்ற சர்ச்சைக்குரிய வசனம், படத்தில் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை, படத்தின் புரமோஷனுக்காகவே பாலா அப்படியொரு உத்தியைக் கையாண்டிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது.

ஆரம்பமே அட்டகாசம்:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து ‘டபுள் மீனிங்’ நடிகராகவே பார்க்கப்பட்டு வந்தார். இந்தப் படத்தில் அப்படியே நேர்மாறான பாத்திரம். அவருடைய சினிமா கேரியரில் இதுவே முதல் படமாகக் கொள்ள முடியும். குப்பத்து பையன் பாத்திரத்தில் கனகச்சிதம். ஆனால், குப்பத்து வட்டார வழக்கை பேசுவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

ஜோதிகாவுக்கு அடுத்து, படத்தில் அதிகம் கவனம் ஈர்ப்பது அறிமுக நாயகி இவானாதான். அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை உணர்வுகளையும் இயல்பாக வெளிப்ப டுத்துகிறார். ஜி.வி. பிரகாஷூடனான காதலை வெளிப்படுத்துவதிலாகட்டும், அவரை விரட் டுவதுபோல் விரட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரிப்பதிலாகட்டும் இளம் ரசிகர்களை ரொம்பவே ஈர்க்கச் செய்கிறார் இவானா.

‘நறுக்’ வசனம்:

வசனத்தின் மூலம் கிண்டலடிக்கும் பாலாவின் சேட்டைகள் இதிலும் உண்டு. ஜோதிகா ஓரிடத்தில், ”கோயிலாக இருந்தாலும் குப்பை மேடாக இருந்தாலும் எனக்கு எல்லாமே ஒண்ணுதான்” என்பார். இந்த வசனத்தை நீக்கச் சொல்லி இன்று ஏதோ ஒரு ‘லெட்டர் பேடு’ இயக்கம் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

‘நறுக்’ வசனம்:

வசனத்தின் மூலம் கிண்டலடிக்கும் பாலாவின் சேட்டைகள் இதிலும் உண்டு. ஜோதிகா ஓரிடத்தில், ”கோயிலாக இருந்தாலும் குப்பை மேடாக இருந்தாலும் எனக்கு எல்லாமே ஒண்ணுதான்” என்பார். இந்த வசனத்தை நீக்கச் சொல்லி இன்று ஏதோ ஒரு ‘லெட்டர் பேடு’ இயக்கம் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

”அட, சாமிக்கும் போரடிக்கும்ல. அதனாலதான் இப்படி சோதனைகளை கொடுக்குறாரு. நாம வேணும்னா பிரஷ்ஷா ஒரு சாமி உருவாக்கிக்கலாம்” என்பது போன்ற வசனம் ஈர்க்கின்றன. ‘எது புதிய இந்தியா?’ என்பதற்கும்கூட படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இசை ராஜாங்கம்:

இளையராஜா, வழக்கம்போல் பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். டைட்டில் கார்டிலேயே தொடங்கி விடுகிறது அவருடைய ராஜபாட்டை. இரண்டாம் பாதியில் பின்னணி இசையே, எமோஷனலை பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறது. ஒரே ஒரு பாடல்தான். அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது.

ஒளிப்பதிவு:

குப்பத்து தெருக்களையும், காவல்துறையின் துரத்தலையும், எளிய மனிதர்களின் துயரங்களையும் கேமரா வழியாக மிக அழகாக காட்சிப் படுத்தி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு இந்தப் படம் முக்கியமானதாக அமையும் என்றே சொல்லலாம்.

‘நச்’ கிளைமேக்ஸ்:

பாலியல் வல்லுறவு கொண்ட காமக்கொடூரனுக்கு தண்டனை அளிக்கும் விதம் என்பது வழக்கமான பாலாவின் ஸ்டைல்தான். அப்படியொரு கிளைமேக்ஸ் காட்சியை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். நெகிழ்வை ஏற்படுத்துகிறது.

படத்தின் நீளம், முக்கியமான சிறப்பு அம்சம் எனலாம். மொத்தமே 100 நிமிடங்கள் 46 வினாடிகள்தான். முதல் பாதி, காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. சில இடங்களில் படம் வேகமாக நகர்கிறது. சில இடங்களில் சற்றே வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது. இடைவேளை நெருங்குகையில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. இரண்டாம் பாதியை ரொம்பவே ரசிக்கலாம்.

ஆனாலும், காட்சிகளின் தீவிரத்தன்மையை பார்வையாளர்களுக்கு உணர்வுப்பூர்வமாக கடத்தத் தவறி விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும், அதிகாரத்தின் ஆணவத்தைக் கொஞ்சமேனும் தட்டி வைக்கத் தவறவில்லை இந்த, ‘நாச்சியார்’.

 

– வெண்திரையான்.