ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24, 2017) அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் இருந்த நிலையில், அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதனால் எடப்பாடி பழனிசாமி-டிடிவி தினகரன் தரப்பினருக்கு அதிமுக அம்மா கட்சி என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி என்றும் பெயர் வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
அதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிட்டனர். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், வாக்குப்பதிவுக்கு மூன்று நாள்கள் இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கிடையே, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 21ம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 7-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி தவிர்த்து அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.