Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்!

”அரசியல் களத்தில் இறங்குவதற்கு இப்போது அவசரம் இல்லை,” என்று ரஜினிகாந்த் திடீரென்று கூறியுள்ளதை கிண்டலடித்து நெட்டிஸன்கள் ட்விட்டரில் கேலி, கிண்டல் செய்து விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

கடந்த மே மாதம், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், ”போர் வரட்டும். அப்போது பார்த்துக்கலாம். அதுவரை காத்திருங்கள்” என்ற குறியீட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அரசியல் நெருப்பை பற்ற வைத்தார் ரஜினிகாந்த்.

கிட்டத்தட்ட ரஜினிகாந்த், அரசியல் களம் காண்பது உறுதியாகி விட்டதாகவே அவருடைய ரசிகர்கள் கருதினர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி, இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது.

அண்மையில் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்ற ரஜினிகாந்த், அங்கு சாமி தரிசனம் செய்தார். ராகவேந்திரர் தரிசனம் முடிந்து அவர் இன்று (நவம்பர் 22, 2017) விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ஊடகத்தினரை சந்தித்த அவர், அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரம் இல்லை என்றார். மேலும், ‘காலா’ படப்பிடிப்பு முடிந்ததாகவும், என் பிறந்த நாள் முடிந்த பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறேன் என்றும் கூறினார்.

ஒருபுறம் கமல்ஹாசன், அரசியல் கட்சிப்பெயர், கொள்கை வகுப்பு பணிகளில் மும்முரம் அடைந்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தோ, திடீரென்று அரசியல் களம் காண இப்போது அவசரம் இல்லை என்றதால், அவருடைய ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ரஜினிகாந்தை பின்னிருந்து பாஜகதான் இயக்குவதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்திலேயே ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த், பாஜகவின் முக்கிய புள்ளிகள் அளித்த ஆலோசனையை அடுத்தே மே மாதத்தில் ரசிகர்களை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இப்போதும்கூட, குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அரசியல் பிரவேசம் குறித்து வெளியிடுமாறு பாஜக தரப்பில் அவருக்கு சமிக்ஞைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அவர், அரசியல் களத்தில் இறங்குவதை ஒத்தி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினியின் திடீர் பல்டியை, வேறு ஒறு சமாச்சாரத்துடனும் முடிச்சுப்போட்டுப் பேசுகின்றனர். ஜனவரியில் பொங்கல் விருந்தாக 2.0 படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், திடீரென்று அந்தப்படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தன் படங்கள் வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காகவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசுவதாகவும், 2.0 படம் ரிலீஸ் தேதி முடிவைப் பொறுத்து அவர் மீண்டும் அரசியல் பேச்சை தொடங்குவார் என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ரஜினியை கிண்டலடித்து ட்விட்டரில் பலர் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். இன்னும் போர் வரல. பத்து வருடம் கழித்து வாங்க. ஒன்றும் அவசரம் இல்லை என்று கேலியாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ”மோடி சொன்னால் அரசியலுக்கு வருவார் என்றும், அவசரமும் இல்லை; அவசியமும் இல்லை,” என்றும் பதிவிட்டுள்ளனர்.