Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து
மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு
தமிழக இளைஞர்கள் தயாராகி
வருகின்றனர்.

துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது.

சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன.

மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்து கொள்கிறது.

ஒருவேளை, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்தாலும் அல்லது பாஜக ஆட்சியைக் கைப்பற்றினாலுமேகூட நிச்சயமாக உச்ச நீதிமன்றம் சொன்னபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமை க்கப்போவதில்லை.

பெயரளவுக்கு, மாற்று வடிவத்தில் சவளைப்பிள்ளையாக ஒரு அமைப்பை வேண்டுமானாலும் அமைக்குமே தவிர, அது முழுமையான காவிரி மேலாண்மை வாரியமாக இருக்காது. காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் கர்நாடகமே முக்கியம்.

தேசியக் கட்சிகளின் அடுத்தடுத்த
நகர்வுகள் இப்படியிருக்க,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
தமிழக அரசோ, ஒட்டுமொத்தமாக
தமிழக நலனை நடுவண் அரசிடம்
அடகு வைத்துவிட்டு கையறு
நிலையில் இருக்கிறது.

இனி, தன்னலம் பாராத தலைவர்கள்
கிடைப்பது அரிது என்பதை இளைஞர்கள்
புரிந்து வைத்திருக்கின்றனர்.
டெல்லியில் பட்டினியுடனும்,
கோவணத்துடனும் போராட்டம்
நடத்திய விவசாயிகளை ஏறிட்டும்
பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி,
நடிகைகளுக்கு மட்டும் உடனுக்குடன்
அப்பாயின்ட்மென்ட் தருகிறார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்
அப்பாயின்ட்மென்ட் கேட்டும்,
நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.
காவிரியில் நீரின்றி, தமிழக விவசாயிகளின்
வாழ்வாதாரமே முடங்கிப் போகும்
நிலையில் இருக்க, விளை பொருள்களுக்கு
ஒன்றரை மடங்கு விலை கொடுப்பேன்
என்று நரேந்திர மோடி முழங்குவது
ஆகப்பெரிய முரண்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார காலம் அவகாசம் கொடுத்தும், இப்போது இன்னும் மூன்று மாதம் அவகாசம் கேட்கிறது நடுவண் அரசு. உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக இன்று தமிழக அரசு நடுவண் அரசு மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

பாஜகவும், இங்குள்ள அதிமுக அரசும் தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருவதைப் புரிந்து கொண்ட தமிழக இளைஞர்கள் இன்று (மார்ச் 31, 2018) சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தைத் துவக்கினர். ‘காவிரியில் பிச்சை கேட்கவில்லை; உரிமையைக் கேட்கிறோம்’ என்றும், ‘வாரியம் இல்லாவிட்டால் வரியும் இல்லை’ என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளைத் தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் பெருந்திரள் கூடிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழக அரசு, மெரீனாவில் கூடிய 3 பெண்கள் உள்பட 18 பேரை உடனடியாகக் கைது செய்து தன் ஆண்மையை பறைசாற்றியிருக்கிறது. இரவு 9 மணியளவில், அவர்கள் அனைவரும் சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து மெரினாவில் போராட்டம் நடத்தவும் தடை விதித்திருக்கிறது சென்னை மாநகர காவல்துறை. அதேநேரம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்னனுமதியுடன் போராட்டம் நடத்தவும் அனுமதி அளித்திருக்கிறது.

எனினும், இளைஞர்கள் போராட்டம் மாவட்டந்தோறும் வெடித்துக் கிளம்பும் எனத்தெரிகிறது. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல் தமிழக இளைஞர்கள் உறங்கும் எரிமலையாக இருக்கிறார்கள். அவர்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்ப ஆயத்தமாகிவிட்டனர்.

‘தண்ணீரை விடு அல்லது தனியாக விடு’ என இப்போதே தனித்தமிழ்நாடுக்கான முழக்கங்கள் பரவலாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், வங்கிகளை முடக்குவதும், ரயில் போக்குவரத்தை முடக்குவதும் என புதிய ஒத்துழையாமை போராட்டம் துவங்குவதற்கான கட்டாயத்தை நடுவண் அரசு தமிழர்கள் மீது திணித்திருக்கிறது.

புரட்சிக்கவி பாரதிதாசன் பாடலை தமிழக இளைஞர்கள் நெஞ்சத்தில் நிறுத்தும் தருணம் இது.

”கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர்குணமேவிய தமிழா!”

 

– வழிப்போக்கன்.