Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை

திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது.

மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது. மழையால் இரண்டரை மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒருவழியாக இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இதனால் 8 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. கடந்த போட்டியில் விளையாடிய முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

இந்திய தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் டின் சவுத்தீயின் வேகத்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டத்தில் அனல் பறந்தாலும் அவரும் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

மனீஷ் பாண்டே 11 பந்துகளில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களுடனும், டோனி ரன் ஏதுமின்றியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுத்தீ, சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 68 ரன்கள் இலக்குடன் (8.50 ரன் ரேட்) நியூஸிலாந்து களம் இறங்கியது. முதல் ஓவரை புவனேஸ்வர்குமார் வீசினார். மார்டின் கப்தில் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் அவரை புவனேஸ்வர் குமார் ஆட்டமிழக்கச் செய்தார். ஆனாலும், மற்றொரு முனையில் அபாயகரமான வீரரான காலின் முன்ரோ இருந்தார்.

இரண்டாவது ஓவரில் பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, காலின் முன்ரோவை 7 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார். நியூஸிலாந்து அணியில் எந்த ஒரு வீரரையும் பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் இந்திய வீரர்கள் பந்துவீச்சு, பீல்டிங்கில் தடகள வீரர்களைப்போல் சிறப்பாக செயல்பட்டனர்.

8 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இ ந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியதுடன், 2 -1 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. நியூஸிலாந்து உடனான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்தியா முதன்முதலாக வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஓவர்கள் பந்து வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதையும் மற்றும் மூன்று டி-20 போட்டிகளிலும் சிக்கனமாக பந்து வீசி 3 விக்கெட் கைப்பற்றியதால் தொடர் நாயகன் விருதையும் ஜஸ்பிரித் பும்ரா வென்றார்.

அடுத்தது என்ன?:

அடுத்ததாக இந்தியா – இலங்கை இடையே மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் நடக்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 16ம் தேதி நடக்கிறது.