Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது.

அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நான்கு தீர்மானங்களையும் மனோஜ்பாண்டியன், சி.வி. சண்முகம், மைத்ரேயன் ஆகியோர் ஆகியோர் வாசித்தனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஒருவர் மட்டுமே முன்மொழிய, மற்றவர்கள் அதை வழிமொழிவார்கள். இன்றைய கூட்டத்தில், முதன்முதலாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கும் தீர்மானங்கள் வாசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், இபிஎஸ் அணியுடன் கரம் கோத்த பின்னும் பன்னீர்செல்வம் அணி வலுவாக இருப்பதையே காட்டுகிறது. கட்சிப் பொறுப்புகளில் இல்லாத மனோஜ்பாண்டியனுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருந்ததும் புதுமையாக இருந்தது.

சசிகலாவை, கட்சி பதவியில் இருந்து நீக்க தீர்மானம் இயற்றப்பட்டதாக காட்சி ஊடகங்களில் திடீரென்று தவறான தகவல் பரவியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், கலந்து கொண்டவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கூறும்போது, எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் என பெரும்பான்மையினர் கலந்து கொண்டதாக மட்டும் தெரிவித்தார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்கே செல்வத்திடம் கேட்டோம்.

”இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7.50 லட்சம் பிரமாண பத்திரங்களில் சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கும்போது அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது என்பது கிரிமினல் குற்றம் ஆகும். பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியுமே தவிர, மற்றவர்கள் அவ்வாறு செய்ய முடியாது. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஆகியவை சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமானது. அவற்றை யாரும் கையகப்படுத்த முடியாது,” என்றார் எஸ்.கே. செல்வம்.

தீர்மானம் குறித்து தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறுகையில், ”ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு போன்ற தனி நபர் சொத்துக்களை கையகப்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதற்குப் பெயர்தான் ‘420’ (மோசடி) என்பது. அதனால்தான் அன்றைக்கே டிடிவி தினகரன் அவரை 420 என்று சொன்னார். அதிமுகவை பின்னால் இருந்து குருமூர்த்திதான் (துக்ளக் ஆசிரியர்) இயக்குகிறார்,” என்றார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்கதமிழ்ச்செல்வன், ”ஓபிஎஸ் மற்றும் அவருடைய அணியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?,” என்றார்.

இந்த பரபரப்புகளுக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை புதுடில்லி செல்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஓரிரு நாளில் டெல்லி சென்று, தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.