Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.

ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. பல்லேகெலே மைதானத்தில் போட்டி நடந்தது.

முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடர்ந்து உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வரும் ஷிகர் தவான், 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்தார். அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, 3 ரன்களில் நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, இந்திய அணி நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா ஏதுவான பந்துகளை அடித்து ஆடி, ரன்களைச் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக டோனியும் ரன்களைச் சேர்த்தார். அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா, தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டோனியும் 50 ரன்களைக் கடந்தார்.

இந்த இணை, மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

ரசிகர்கள் ரகளை: இந்திய அணி 210 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், பொறுமை இழந்த இலங்கை ரசிகர்கள் திடீரென்று மைதானத்திற்குள் காலி குடிநீர் பாட்டில்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, ‘வாஷ் அவுட்’ ஆகியிருந்த நிலையில், இப்போது ஒரு நாள் தொடரையும் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அந்த நாட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். காவல்துறையினர், ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மேற்கொண்டு பந்து வீசாமல் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. எனினும், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.