விவேக்: 1961 – 2021
‘சின்ன கலைவாணர்’ என்று
அழைக்கப்படும் பிரபல
நகைச்சுவை நடிகர் விவேக்,
மாரடைப்பால் சனிக்கிழமை
(ஏப். 17) அதிகாலையில்
உயிரிழந்தார்.
அவருக்கு வயது 59:
நடிகர் விவேக்,
வெள்ளிக்கிழமை (ஏப். 16)
வீட்டில் இருந்தபோது
திடீரென்று அவருக்கு
மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர்
மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த
குடும்பத்தினர், அவரை
உடனடியாக மீட்டு
வடபழனியில் உள்ள
தனியார் மருத்துவமனையில்
சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுய நினைவின்றி கிடந்த
விவேக்கிற்கு அவசர
சிகிச்சை பிரிவில் வைத்து
சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிசோதனையில், அவருக்கு
ரத்த நாளத்தில் 100 சதவீதம்
எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு
இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக ஆஞ்சியோ
பிளாஸ்டி மூலம் சரி செய்தனர்.
இந்த சிகிச்சை சுமார்
1 மணி நேரம் நடந்துள்ளது.
இதையடுத்து எக்மோ கருவி
பொருத்தப்பட்டு,
மருத்துவக்குழுவினர்
தீவிரமாக கண்காணித்து
வந்தனர்.
பத்திரிகையாளர்களை
சந்தித்த மருத்துவர்கள்,
”இப்போதைக்கு உடனடியாக
எதுவும் சொல்ல முடியாது.
24 மணி நேர கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகுதான்
சொல்ல முடியும்,”
என்றனர்.
இதற்கிடையே,
கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொண்டதால்தான்
அவருக்கு மாரடைப்பு
ஏற்பட்டது என்ற
தகவல் பரவியது.
இதுகுறித்து
செய்தியாளர்கள் கேட்டதற்கு,
”தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும்
சம்பந்தம் இல்லை.
உடல்நிலையை அவர்
நீண்ட காலமாக
கவனிக்காமல் இருந்துள்ளார்,”
என மருத்துவர்கள் கூறினர்.
இதே கருத்தை,
தமிழக சுகாதாரத்துறை
செயலர் ராதாகிருஷ்ணனும்
கூறினார்.
இந்நிலையில்,
சனிக்கிழமை அதிகாலை
4.30 மணியளவில்
நடிகர் விவேக் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவருடைய
சடலம், சாலிகிராமத்தில்
உள்ள அவருடைய வீட்டிற்குக்
கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விவேக்கின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளாமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சடலம் எரியூட்டப்பட்டது. மகனாக இருந்து அவருடைய மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
திரைப்படக்கலையை வெறுமனே பொருளீட்டுவதற்கான களமாக மட்டுமே கருதாமல், கூடுமானவவரை சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
நகைச்சுவை நடிப்பில் தனக்கென அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட விவேக், திரைப்படங்களில் மூடநம்பிக்கை, ஊழல் ஒழிப்பு குறித்து எல்லாம் பகடியாக காட்சிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அதேநேரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் திரைமொழியில் சொல்லலானார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், இவருடைய ரசிகர் என்பது கூடுதல் சிறப்பு. அவருடைய ஆசியுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் கலாம் பெயரிலேயே மரக்கன்று நடும் திட்டத்தை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகச் செய்து வந்தார். செல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்று நடுவதை ஊக்குவித்து வந்த விவேக், இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். இதில் மக்களையும், கல்லூரி மாணவர்களையும் பங்கெடுக்க வைத்தார்.
அவருடைய திரையுலகப் பயணம், சுற்றுச்சூழல் ஆர்வம் ஆகியவற்றைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தமிழகத்தில் பத்ம விருது பெற்ற ஒரே நகைச்சுவை கலைஞன் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசின் விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி ஆளுமை, திரை எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பல கோணங்கள் அவருக்கு உண்டு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில்தான் நடிகர் விவேக் பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விவேகானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம்., பட்டமேற்படிப்பை முடித்தார். அவருடைய மனைவி செல்வி. அமிர்தானந்தினி. தேஜஸ்வினி என்று இரண்டு மகள்களும், பிரசன்னா குமார் என்ற மகனும் உண்டு. இவர்களில் பிரசன்னா குமார் கடந்த 2015ம் ஆண்டு, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு 13வது வயதில் இறந்துவிட்டார்.
பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். மெட்ராஸ் ஹியூமர் கிளப் நிறுவனர் பி.ஆர்.கோவிந்தராஜன் என்பவர்தான், அவரை இயக்குநர் பாலசந்தரிடம் முதன்முதலாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன்பிறகு பாலசந்தர், ஒரு குறிப்பிட்ட சூழலை விளக்கி, 16 கதாபாத்திரங்களுக்கு ஒரு ஸ்கிரிப்டை எழுதச் சொன்னார். இதனை விவேக் ஒரே இரவில் எழுதி முடித்துக் கொடுத்தார்.
பிறகுதான் இது, பாலசந்தர் தன்னை சோதிப்பதற்காக வைத்த பரீட்சை என்பது அவருக்கு தெரிய வந்தது. அவருடைய ஈடுபாட்டைப் பார்த்து பாலசந்தர் வியந்தார். அதன்பிறகு இருவரும் நெருக்கமாகி விட்டனர். இதையடுத்து 1987ல் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்திற்கான ஸ்கிரிப்டுக்கு உதவும் வகையில், அந்தப் படத்தில் சுகாசினியின் தம்பி பாத்திரத்தில் நடிக்க வைத்தார் பாலசந்தர். அதுதான் விவேக் நடித்த முதல் படம்.
ஆரம்பத்தில் துணை பாத்திரங்களில் நடித்து வந்த விவேக், ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ ஆகிய படங்களில் மீண்டும் பாலசந்தருடன் இணைந்தார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் விவேக் பேசும், ‘இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற காமெடி மக்களிடம் வெகுவாகப் போய்ச்சேர்ந்தது.
பின்னர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘புத்தம் புது பயணம்’, இயக்குநர் விக்ரமனின் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடிக்கும் முன்னணி பாத்திரத்திற்கு முன்னேறினார்.
அதன்பிறகு நடிகர் ரஜினியுடன் ‘உழைப்பாளி’, ‘வீரா’ ஆகிய படங்களிலும் நாயகனுக்கு அடுத்து இரண்டாம் நிலை நடிகராக அறியப்பட்டார். நடிகர் அஜித்குமாருடன் இணைத்து நடித்த ‘காதல் மன்னன்’, ‘உன்னைத்தேடி’, ‘வாலி’ ஆகிய படங்களில் அவருடைய காமெடி பெரிதும் பேசப்பட்டது.
குறிப்பாக கடந்த
2000 – 2010 காலக்கட்டத்தில்
தமிழ் திரையுலகில் விவேக்
தவிர்க்க முடியாத காமெடி
நடிகராக வலம் வந்தார்.
சமூக அவலங்களை
நகைச்சுவையாக பகடி
செய்வதும், மூடநம்பிக்கைகளை
கேலி, கிண்டலான வசனங்களால்
களைய முற்பட்டதுமான
பரீட்சார்த்த முயற்சிகள்
எல்லாமே அவர் 2000ம்
ஆண்டுகளில்தான்
மேற்கொண்டார்.
அதற்கு ரசிகர்களிடம்
பெரிதும் வரவேற்பும்
கிடைத்தது.
ஒருபுறம் ‘குஷி’, ‘மின்னலே’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தன்னுடைய பங்கையும் குறிப்பிடும்படியாக சேர்த்துக் கொண்டார் விவேக். அதேநேரம், ‘திருநெல்வேலி’, ‘பாளையத்து அம்மன்’, ‘கோட்டை மாரியம்மன்’, ‘நாகேஸ்வரி’ ஆகிய படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு விவேக்கின் காமெடி காட்சிகள்தான் காரணம் என்றால் மிகையாகாது. இப்படங்களில் விவேக்கிற்கென தனியாக காமெடி டிராக் அமைக்கப்பட்டு இருந்தது.
‘திருநெல்வேலி’ படத்தில்
ஒருவரின் மீசையைப்பற்றி
இன்னொருவர் தவறாக
பேசியதால் ஜாதிக்கலவரம்
மூள்வதையும்,
மைல் கற்களைக்கூட
சிவப்பு துண்டு போர்த்தி
சாமியாக கும்பிடும்
மக்களின் கண்மூடித்தனமான
கடவுள் நம்பிக்கையையும்,
‘ஏன்டா… உள்ளுக்குள்ள
இருக்கற 300 ஸ்பேர்
பார்ட்ஸால ஓடாத லாரிதான்
இத்துனூண்டு எலுமிச்சம்
பழத்தால ஓடுதாடா…’ என
மக்களின் மூடத்தனங்களையும்
பகடி செய்த நகைச்சுவை
காட்சிகள் இப்போதும் மக்கள்
மனதில் நீக்கமற
நிறைந்திருக்கின்றன.
விக்ரம் நடித்த ‘சாமி’ படத்தில்,
சாதிய ரீதியில் ஒரு
சிறுவனுக்கு அட்மிஷன்
தர மறுக்கும் பள்ளிகளை
போகிற போக்கில்
விமர்சனம் செய்திருப்பார்.
நடிகர் விவேக்,
நகைச்சுவை மூலம் சமூக
சீர்திருத்தக் கருத்துகளை
விதைப்பதில் கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனை
ஒத்திருந்தாலும், உடல்மொழி
மற்றும் மூடத்தனங்களை
பகடி செய்வதில் அவர்
முற்றாக எம்.ஆர்.ராதாவையே
உள்வாங்கியிருந்தார்
என்றே கருதுகிறேன்.
கிராமங்களை விடவும்
படித்த மற்றும் நகர்ப்புற
ரசிகர்களிடையே விவேக்கின்
காமெடி வெகுவாக எடுபட்டது.
சக போட்டியாளரான
வடிவேலுடன் பல படங்களில்
இணைந்து நடித்து,
திரைத்துறையில் உள்ள
போட்டி மனப்பான்மையை
தகர்த்தவர் விவேக்.
போட்டியாளராக இருந்தாலும்
திறமை உள்ளவர்களை
பாராட்ட அவர்
தயங்கியதே இல்லை.
தமிழ்த்திரையுலகின்
தவிர்க்க இயலாத
ஆளுமை நடிகர் விவேக்.
மண் உள்ளவரையிலும்,
மரங்கள் உள்ள வரையிலும்
அவரும் நம்முடன் இருப்பார்.
அவருக்கு ‘புதிய அகராதி’
வீரவணக்கம் செலுத்துகிறது.
– பேனாக்காரன்