Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் அது. டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம் குறித்து கமல்ஹாஸன் ட்விட்டர் பக்கங்களில் ஆளுங்கட்சியை காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு ஆளும் தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது.

”ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்தால் போதாது. துணிச்சல் இருந்தால் களத்திற்கு வரட்டும்” என அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கமல்ஹாஸனை சீண்டிக்கொண்டே இருந்தனர். நேற்றைய தினம், கமல்ஹாஸன் புதிய கட்சியை தொடங்கி, எல்லோரையும் அதிரடித்துவிட்டார்.

நேற்றைய தினம் கமல்ஹாஸன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லலாம். காலை 7.45 மணிக்கு துவங்கிய பயணம் இரவு 10 மணிக்குதான் முடிந்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அவருடைய நினைவிடம், சொந்த ஊரான பரமக்குடி விஜயம், பிறகு மதுரை மாநாடு என புயலாகச் சுழன்றடித்துள்ளார். கமல், சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுகூட இதுபோல பயணத்தில் இருந்திருக்க மாட்டார்.

மதுரையில் கமல்ஹாசன் இளைப்பாற, தங்கம் பாரடைஸ் ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலுக்கு கமல் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பார்க்கும் ஆவலில் சில ரசிகர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் காரை பின்தொடர்ந்து வேகமாக வந்துள்ளனர். அதை கவனித்துவிட்ட கமல், ஹோட்டலுக்குச் சென்றதும், தனது நற்பணிமன்ற நிர்வாகிகளை உடனடியாக அழைத்துள்ளார்.

”காருக்கு பின்னாடியே ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது விபத்து நடந்து போச்சுன்னா இந்த ஊர்க்காரங்க என்னத்தானே வைய்வாங்க. அதுக்காக நான் உங்கள வைய்ய முடியுமா…? மக்களிடம் நம்ம கட்சியை கொண்டுபோய் சேர்க்கறதுலதான் நாம் வேகத்தைக் காட்ட வேண்டும். காரை துரத்துவதில் அல்ல,” என்று முன்னெச்சரிக்கையாக சில அறிவுரைகளையும் வழங்கினாராம்.

மாநாட்டில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக நற்பணி மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கலாம் என்கிறது காவல்துறை தரப்பு. ஒருவேளை, இதே மாநாட்டை ஞாயிற்றுக்கிழமையில் நடத்தியிருந்தால் மதுரையே குலுங்கியிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

பணம், மதுபானம் போன்ற இத்யாதிகளைக் கொடுத்து கூட்டத்தை கூட்டி வரக்கூடாது என்று நற்பணி இயக்க தலைமை, முன்பே கடுமையாக சொல்லிவிட்டதால், வாகனம் மற்றும் உணவு ஏற்பாடுகளை மட்டும் மன்ற நிர்வாகிகள் செய்து கொடுத்துள்ளனர்.

மாநாடு முடிந்து களைந்து சென்ற பின்னர் திடலில் காலி மதுபான பாட்டில்கள் தென்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்துள்ளனர். ஆனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைமையின் உத்தரவையும் மீறியுள்ளனர்.

எனினும், கூச்சலோ குழப்பங்களோ, கலாட்டாக்களோ இன்றி சிறப்பாக முடித்திருக்கிறது கமல்ஹாஸனின் கட்சி தொடக்க விழா.

தொடக்க விழாவான நேற்று கட்சிக்கு உயர்மட்டக் குழு நிர்வாகிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். மன்ற பொறுப்பாளர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் மட்டும் அளித்து ஆனந்தப் படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

இதை பலரும், கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட் டுவிட்டதாக தவறாக புரிந்து கொண்டதாக இயக்க பொறுப்பாளர்கள் கூறினர். கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் இனிமேல்தான் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.

உயர்மட்டக் குழுவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கமலின் உற்ற நண்பரும், நடிகருமான நாசரின் மனைவி கமீலாவுக்கும் இடம் வழங்கப்பட்டு உள்ளது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ”ஊழல் வேண்டுமானால் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடுங்க. தரமான கல்வி, தடையில்லா மின்சாரம், நேர்மையான நிர்வாகம் வேண்டும் என்றால் கமல்ஹாஸனுக்கு ஓட்டு போடுங்கள்,” கமல் உடனான முதல் மேடையிலேயே அவருக்காக வாக்கு கேட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டுப் போனார்.

உலகளவில் கூகுளில் கமல் கட்சி தொடங்கியது குறித்துதான் அதிகம்பேர் தேடியுள்ளனர். உலகளவில் அதிகம் தேடிப்பட்ட சேதிகளில் மக்கள் நீதி மையம் ஆறாவது இடம் பிடித்துள்ளது.

கொடியில் உள்ள ‘லோகோ’, ஒரு தொண்டு நிறுவனத்தின் லோகோ சாயலில் இருப்பதாகவும், தபால் துறை ஊழியர் சங்க சின்னம் போல் இருப்பதாகவும், சிங்கப்பூர் தேசியதின பேரணியின் அடையாளம்போல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாநாட்டு திடலில் கட்சிக் கொடி ஏற்றப்படும்வரை நற்பணி மன்ற தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குக்கூட கட்சி, பெயர், லோகோ குறித்து கமல் தரப்பு ரகசியம் காத்து வந்திருப்பதாகவே சொல்கின்றனர்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் ட்விட்டரில் தனியாக கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இணையதள பக்கமும் செயல்படுகிறது.

கட்சியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அதன் பக்கத்தில் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். அதற்கு உடனடியாக நன்றி தெரிவித்தும், உறுப்பினர் எண் வழங்கியும், இணைந்து செயல்படுவோம் என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பதில் அளிக்கப்படுகின்றன.

மாற்றுக்கட்சிகளில் இருந்து மக்கள் நீதி மய்யத்திற்கு வந்தால் சேர்த்துக்கொள்ள தயாராகவே இருக்கிறார்களாம்.

ஆனால், கவுன்சிலர் முதல் பெரிய பொறுப்புகளில் வகித்தவர்கள் வந்தால் மட்டும் அவர்களின் சொத்து விவரம், குற்ற வழக்குகள், முறையாக வருமான வரி செலுத்துகிறாரா?, குடும்பப் பின்னணி ஆகிய விவரங்களை ரகசியமாக விசாரித்து அறிக்கை அளிக்கவும் தலைமையிடம் இருந்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாய்மொழியாகச் சொல்லப்பட்டுள்ளதாம்.

இதுவரை தமிழகத்தில் உருவான கட்சிகளின் பெயர்களில் பெரும்பாலும் திராவிடம், கழகம், கட்சி ஆகிய சொற்கள் ஒட்டிக்கொண்டே இருக்கும்.

திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம், அதிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம், விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் என நீளும் அந்தப் பட்டியல்.

திராவிட சிந்தனை வேரூன்றிய மண் என்பதால், கட்சிப் பெயர்களில் சித்தாந்தத்தையும் சேர்த்துக் கொண்டனர். ஆனால் கமல்ஹாசன் தொடங்கிய புதிய கட்சியின் பெயர், ‘மக்கள் நீதி மய்யம்’. பெயர் சூட்டலில் அவர் வழக்கமான மந்தைப் போக்கை கடைப்பிடிக்கவில்லை. மையம் என்பதைக்கூட, பெரியாரின் சீர்திருத்த எழுத்தைப் பின்பற்றி ‘மய்யம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்திற்கான கொடியில் வெள்ளை நிறப் பின்னணியில் ஆறு கைகள் இணைந்த நிலையில், அதனை கருப்பு நிறம் ஒன்றிணைக்கும் மையமாகவும், அதன் மையத்தில் வெள்ளை நிறத்தில் நட்சத்திரமும் கொண்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆறு கைகளில் மூன்று வெள்ளை நிறத்திலும், மூன்று சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன.

ஆறு கைகளும் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களையும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களையும் குறிக்கும் என்று கமல்ஹாஸன் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு நிறம் திராவிடத்தையும், சிவப்பு நிறம் உழைப்பையும், வெள்ளை நிறம் தூய்மையையும் குறிக்கும் என்றும் கூறியுள்ளார். தென்னிந்தியாவைக் கடந்து கட்சியை விரிவாக்கப் போவதில்லை என்பதை கமல்ஹாசன் முன்பே திட்டமிட் டுவிட்டாரோ என்னவோ.

கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 17ம் தேதி ‘புதிய அகராதி ஆன்லைன் மீடியா’ வெளியிட்ட ஒரு கட்டுரையில் , ‘கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்’ என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சித்தாந்தத்தைதான் இப்போதும் கமல் முன்மொழிந்திருக்கிறார்.

திராவிட கொள்கைகளை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதை கமல்ஹாஸன் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். அந்த முன்னெச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடுதான் மக்கள் நீதி மய்யக் கொடியின் உள்கூறுகள்.

கமல்ஹாஸன் வெளிப்படையாக, ஆளும் அதிமுகவை விமர்சித்து வரலாம். உண்மையில், அரசியல் களத்தில் அவருடைய எதிரி, திமுகதான்.

அரசியல் களத்தில் கமல்ஹாசன் என்பவர் ஒரு சுயம்புவா? அல்லது கார்ப்பரேட் கும்பலின் முகவரா? என்பது தெரியாது. ஆனால், இனி கமல்ஹாஸன் வீசும் ஒவ்வொரு பந்தும் யார்க்கராக இருக்கும் என்றே தெரிகிறது.

அது, இந்த மண்ணின் மொழி, திராவிட கொள்கைகளை மையப்படுத்தியதாகவே இருக்கும். அந்த அஸ்திரமே மறைமுகமாக திமுகவின் வாக்கு வங்கியையும் மெல்ல மெல்ல கபளீகரம் செய்யும் என்பதோடு, சிறுபான்மையினரின் வாக்குகளையும் ஈர்த்துவிடும் என்பதுதான் கமல்ஹாஸன் போட்டு வைத்திருக்கும் கணக்கு.

மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த மாநாடு வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் சண்டியர்.

 

– பேனாக்காரன்.