Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

தண்ணீர் மற்றும் தண்ணீரைச் சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றியும், சமகால அரசியல்வாதிகளின் உள்மனப்போக்கையும் தோலுரிக்கும் படமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இன்று (பிப்ரவரி 23, 2018) வெளியாகி இருக்கிறது கேணி.

கதைக்கரு:

தமிழ்நாடு – கேரளா ஆகிய இரு மாநில எல்லைகளிலும் சரிபாதியாக அமைந்திருக்கும் ஒரு வற்றாத கிணறும், அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடும் தமிழக எல்லையோர கிராம மக்களின் போராட்டங்களும்தான் படத்தின் ஒரு வரி கதை.

நடிகர்கள்:

ஜெயபிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனு ஹாசன், ரேகா, பார்வதி நம்பியார், ‘தலைவாசல்’ விஜய், எம்.எஸ். பாஸ்கர், பசுபதி, சாம்ஸ், ‘பிளாக்’ பாண்டி மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு:

ஒளிப்பதிவு: நவ்ஷத் செரீப்; இசை: ஜெயச்சந்திரன்; பின்னணி இசை: சாம் சி.எஸ்.; எடிட்டிங்: ராஜா முஹமது; தயாரிப்பு: ஃபிராகிரன்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்; இயக்கம்: எம்.ஏ.நிஷாத்

திரைமொழி:

இந்திராவின் கணவர், கேரளா மாநில அரசின் உயர் பதவியில் இருக்கிறார். அரசியல் சதி காரணமாக அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அம்மாநில அரசு சிறையில் அடைக்கிறது. சிறைக்குள்ளேயே அவர் மரணம் அடைந்துவிடுகிறார்.

கணவரின் விருப்பத்திற்கிணங்க, அவருடைய மனைவி இந்திரா, கேரளா எல்லையோரத்தில் இருக்கும் ஒரு தமிழக கிராமத்திற்கு வருகிறார். இந்திரா தன்னுடன், முஸ்லிம் தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட ஓர் இளைஞனின் காதலியையும் உடன் அழைத்து வருகிறார்.

சொந்த ஊர் மக்கள் கடும் வறட்சியால் குடிக்கவே தண்ணீரின்றி கஷ்டப்பட்டு வருவதும், தனக்குச் சொந்தமான கிணற்றில் வற்றாத கேணி இருப்பதும் தெரிய வருகிறது. அந்தக் கிணற்றில் இருந்து, தண்ணீரின்றி வாடும் தன் சொந்த ஊர் மக்களுக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்கிறார் இந்திரா. அதற்கு கேரளா – தமிழ்நாடு ஆகிய இரு மாநில அரசுத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இதற்காக இந்திரா, ஊர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம மக்களுடன் போராட்டத்தை தொடங்குகிறார். அந்தப் போராட்டத்தில் இந்திரா வெற்றி பெற்றாரா? வறட்சியால் வாடும் தமிழக எல்லையோர மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பதை அரசியல் பொறி பறக்கும் வசனங்களுடனும், போராட்டக் கனலுடனும் சொல்லியிருக்கிறது கேணி.

செவ்வணக்கம்:

படத்தை இயக்கியது ஒரு மலையாளி. தயாரிப்பாளரும்கூட மலையாளிதான். ஆனால், படத்தின் முடிவு தமிழகத்திற்க சாதகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி ஒரு கிளைமேக்ஸ் காட்சியை வைத்ததற்காகவே இயக்குநர், தயாரிப்பாளருக்கு செவ்வணக்கம் வைக்கலாம்.

கேணி என்ற குறுநிலப்பரப்பிலான தண்ணீரை வைத்துக்கொண்டு, முல்லை பெரியாறு பிரச்னையைப் பற்றியும் கூட பூடகமாக பேசுகிறதோ என்றும் தோன்றுகிறது.

வாள் சுழற்றும் வசனம்:

படத்தின் ஒரு வரி கதை எந்தளவுக்கு வலிமையானதோ அந்தளவுக்கு வலிமையானது கேணியில் வரும் வசனங்கள். கூர்மையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு சில…

”ராக்கெட் விடுறோம். ஏவுகணை தயாரிக்கிறோம். ஆனா இன்னும் மனுஷன் பேண்டத மனுஷன்தானே அள்ளிட்டுருக்கான். அதை என்னிக்காவது பேசியிருக்கோமா…?”

”பத்து நடிகன்… 20 அரசியல்வாதி… 30 விளையாட்டு வீரன்… இவனுக அம்பது அறுபது பேர் மட்டும்தான் இந்தியாவா? 125 கோடி பேரு இருக்கான. அவனுங்கள பாருங்க…”

”நடிகை குழந்தை பெத்துக்கிட்டா அவ புருஷன் சந்தோஷப்படாம பக்கத்து வீட்டுக்காரனா சந்தோஷப்படுவான்? அதையெல்லாம் செய்தியாக்குறீங்களே…”

தாஸ் ராம்பாலாவின் வசனங்கள் பல இடங்களில் சமகால அரசியல் களத்தையும், ஊடக அரசியலையும்கூட போகிற போக்கில் பகடி செய்கின்றன. கனல் தெறிக்கின்றன.

குறிப்பாக, மனிதக்கழிவு அகற்றும் மனிதர்கள் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அரசுகளுக்கு இதுபோல் மூலைக்கு மூலை நின்று கூப்பாடு போட்டாலும் காதில் வாங்கிக் கொள்ளாது இருப்பதுதான் ஆச்சர்யமே.

அசத்தல் பாத்திரங்கள்:

இந்திரா, பாத்திரத்தோடு ரொம்பவே ஒன்றிப்போயிருக்கிறார் ஜெயபிரதா. நாற்பதைக் கடந்த ரசிகர்களுக்கு ஜெயபிரதா என்றாலே ‘நினைத்தாலே இனிக்கும்’தான். இப்போதும் அப்படித்தான். தண்ணீர் உரிமைக்காக அவருடைய போராட்டங்கள், வெளிப்படுத்தும் உணர்வுகளை பார்வையாளர்களுக்கும் எளிதாக கடத்தி விடுகிறார்.

மாவட்ட ஆட்சியராக சில காட்சிகளில் வந்தாலும் ரேவதி, அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஊர் பஞ்சாயத்து தலைவராக வரும் பார்த்திபனுக்கு, வழக்கம்போல் இந்தப் படத்திலும் நையாண்டி வசனங்கள் உள்ளன. இந்திராவுடன் பார்த்திபன், நாசர் ஆகியோரும் கைகோத்து தண்ணீருக்காக போராடுகின்றனர். நாசர், தன் அனுபவத்தால் அசத்துகிறார்.

கிராமத்துப் பெண் பாத்திரத்தில் ஒன்றிப்போக எவ்வளவுதான் முயற்சித்தாலும் அனுஹாசனுக்கு அந்தப் பாத்திரம் எடுபடவில்லை. வட்டார வழக்கும் வரவில்லை. ‘தலைவாசல்’ விஜய், கிணற்றை ஆக்கிரமிக்க துடிக்கும் மோசமான அமைச்சர்.

ரேகா, நீதிபதியாக வந்து போகிறார். டீக்கடை பெஞ்சில் அரசியல் பேசுவதற்கு பிளாக் பாண்டி, சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் அவரவர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

மயக்கும் இசை:

படத்தின் துவக்கத்தில், ஜெயச்சந்திரனின் இசையில் வரும் ‘அய்யாச்சாமி…’ பாடலை கே.ஜே.யேசுதாசும், எஸ்பி.பாலசுப்ரமணியமும் மிக நீண்ட இளைவெளிக்குப் பிறகு சேர்ந்து பாடியிருக்கின்றனர். எல்லா தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் அந்தப்பாடல். சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் படத்துக்கு ரொம்பவே பலம் சேர்த்திருக்கிறது.

எடுபடாத பாத்திரங்கள்:

மூத்த கலைஞர்கள் பலர் இருந்தும் ஜெயபிரதா, பார்த்திபன், நாசர் போன்ற சிலரின் பாத்திரங்களே நினைவில் நிற்கின்றன. படத்தின் ஒரே இளம் நடிகர் என்றால் பார்வதி நம்பியார் மட்டும்தான்.

அவருடைய பாத்திரமும் முழுமையாக வீணடிக்கப்பட்டு உள்ளது. ரியாஸ் என்ற முஸ்லீம் தீவிரவாதியை கைது செய்யும் காவல்துறை, அதற்குப் பிறகு அந்த பாத்திரம் என்னானது என்பதை விவரிக்காமலேயே மறந்து விட்டார் இயக்குநர்.

ஒளிப்பதிவு அபாரம்:

பச்சை வயல்வெளிகள், எங்கும் பசுமை என கேரளாவின் எழில்மிகு தோற்றத்தை பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது, நவ்ஷத் செரீஃப்பின் கேமரா. அதே அளவுக்கு, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் நிலவும் வறட்சி, வறண்ட வயல்வெளிகள், காய்ந்த பூமியையும் அதன் சூட்டையும் கேமரா வழியாக ரசிகர்களை உணர வைக்கிறார்.

தமிழகம் எத்தகைய மோசமான வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் நவ்ஷத் சமரசமின்றி அற்புதமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

கத்தரி போட்டிருக்கலாம்:

தமிழ், மலையாளம் ஆகிய இருமொழி படமாக வெளியாகியிருக்கிறது. இரு மாநில எல்லையோர பிரச்னை என்பதால் அப்படி படமாக்கப்பட்டிருக்கலாம். முதல் பாதியில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேலாக மலையாளத்திலேயே வசனங்கள் இடம்பெறும் அளவுக்கு காட்சிகள் நிரம்பியிருக்கின்றன.

மோகன்லால் நடித்த ‘புலிமுருகன்’ படத்தை நேரடி மலையாள படமாகவே தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். என்றாலும், கேணியில் வரும் முதல் பாதி காட்சிகளை அந்தளவுக்கு மொழி புரியாத ரசிகர்களால் ரசிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கலைக்கு, மொழி எல்லையே கிடையாது என்றாலும், தமிழில் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும்.

அதேபோல் கிளைமேக்ஸ் காட்சி முடிந்த பின்னரும், நாசர் நீளமான வசனம் பேசும் காட்சிகள் தேவையா? இதுபோல் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதைக்களம், சமகால அரசியலை துணிச்சலுடன் பேசியிருக்கும் ‘கேணி’யை தமிழ்நாட்டு ரசிகர்கள் தயக்கமின்றி கொண்டாடலாம். கொண்டாடப்பட வேண்டும்.

 

– வெண்திரையான்.