Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற ஊடகமாக வாட்ஸ்ஆப் செயலியின் சேவை உருப்பெற்று உள்ளது. நாள்தோறும் இதன் சேவையை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் சராசரியாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.3 பில்லியனாக அதிகரித்துள்ளது.

நாள்தோறும் 55 பில்லியன் செய்திகள், இதன்மூலமாக பகிரப்படுகிறது. ஒரு பில்லியன் படங்களும் தினமும் பகிரப்பட்டு வருகின்றன.

வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டுக்கு வந்த புதிதில் சந்தையில் விற்கப்பட்ட 75 சதவீத மொபைல் போன்களின் இயங்குதளங்கள் பிளாக்பெர்ரி, நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது. இயங்குதளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போதுள்ள மொபைல் போன்களில் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளங்களே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதற்கேற்றாற்போல் வாட்ஸ்ஆப் செயலியின் இயங்குதளமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதனால், டிசம்பர் 31ம் தேதியுடன் குறிப்பிட்ட இயங்கு தளங்களைக் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நோக்கியா சிம்பியன் எஸ்60 மொபைல் போன்களில் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

புதிய அட்டவணைப்படி, பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, ஆண்டிராய்டு 2.1 மற்றும் 2.2 பதிப்புகள், விண்டோஸ் 7, ஐபோன் 3 ஜிஎஸ் / ஐஓஎஸ் 6 ஆகிய மொபைல் போன்களில் வரும் 31ம் தேதிக்குப் பிறகு, அதாவது 1.1.2018 முதல் வாட்ஸ்ஆப் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த ஓஎஸ் கொண்ட மொபைல் போன்களின் விற்பனை என்பது இப்போது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.