Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன.

2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும்.

ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்தே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதையும் மறுத்துவிட முடியாது. ஒருபுறம் இந்தியாவின் சந்தை வாய்ப்புகளையும், இன்னொருபுறம் வாக்கு வங்கியையும் பாஜக குறி வைத்திருப்பது பட்ஜெட் உரை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரிசனம் காட்டுவதில் காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் பாஜகவே வேகமாக செயல்படுகிறது. அதனால்தான், பெரு முதலாளிகள் பாஜவுக்கு தேர்தல் நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பாஜக, 488.94 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 86.65 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இதெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. ஆனால், கணக்கில் வராதது பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதுதான் நிதர்சனம்.

அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே கார்ப்பரேட்டுகள் மீது பாஜகவுக்கு அளப்பரிய பாசம் அதிகம். இப்போதும்கூட ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்குள் ‘டர்ன் ஓவர்’ செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 25 சதவீதமாக குறைத்து, முதலாளிகளுக்கு விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் அருண்ஜெட்லி.

பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலமாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், அதற்கான கலால் வரியை 2 சதவீதம் குறைத்திருக்கிறது.

இதனால் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும் என்று எண்ணி, நாம் புளகாங்கிதம் அடைந்து விட முடியாது. காரணம், செஸ் வரியை 6ல் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது. ஆக, கச்சா எண்ணெய் சும்மாவே கிடைத்தாலும் இந்தியாவில் எரிபொருள் விலை என்பது இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. மக்களவை பொதுத்தேர்தலின்போது வேண்டுமானால் குறைய வாய்ப்பு இருக்கிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஐ.மு.கூ. ஆட்சியில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பாஜக, அதை செய்யும் என்ற நம்பிக்கை வெகுவாக இருந்து வந்தது. இன்றைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இல்லாதுபோக, சம்பளம் பெறும் நடுத்தரவர்க்கத்தினர் ரொம்பவே அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த அதிருப்தியை ஈடுகட்டுவதற்காக போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை செலவுகளை 40 ஆயிரம் வரை திரும்பப் பெறலாம் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டாலும், அரசு ஊழியர்கள் மத்தியில் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே தெரிகிறது.

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததன் மூலம், இந்தியர்களின் வருமானம் உயரவே இல்லை என்பதும் புலனாகிறது.

இதைவிட நகைப்புக்குரியது என்னவெனில் ஈக்விட்டி ஷேர்கள் மீதான நீண்டகால முதலீட்டுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதைச் சொல்லலாம். இதைக் கேள்விப்பட்ட நிலையிலேயே பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில், இறக்குமதி பொருள்களின் மீதான சுங்க வரியை உயர்த்தி இருப்பதாக பாஜக சமாளிக்கப் பார்க்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், மேக் இன் இந்தியா திட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடைபெறாத நிலையில், காலம்போன காலத்தில் இப்படியெல்லாம் பேசி வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் சில இனங்களுக்கு 7.5%ல் இருந்து 15% ஆகவும், சிலவற்றுக்கு 15%ல் இருந்து 20% ஆகவும் சுங்க வரி உயர்த்தி இருக்கிறது. இதன் விளைவாக, எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்கள், அவற்றின் உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், காலணிகள் ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும்.

இந்த விலை உயர்வு நேரடியாகவே நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதிக்கக்கூடியது. எனினும் மருந்துகள், சோலார் மின்தகடுகளின் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் 1.5 மடங்கு கூடுதலாகக் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பாஜக, கடந்த நான்கு ஆண்டுகளாக அதைச் செயல்படுத்ததாது ஏனென்று தெரியவில்லை.

பாஜக ஏற்கனவே சொல்லிவந்த ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் பற்றியெல்லாம் பட்ஜெட்டில் மூச்சு விடவே இல்லை. ஒருவேளை, சாமானியர்களை பக்கோடா விற்கச் சொல்லிவிட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். ஒரே இடத்தில் செல்வம் குவிவது என்பது நீடித்த, ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடையாளமாகச் சொல்ல முடியாது.

அதனால்தான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ’பிரைன் இந்த பட்ஜெட்டை, ‘சூப்பர் ஃபிளாப்’ பட்ஜெட் என்று கிண்டலடித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த பட்ஜெட், சாமானியர்கள் மீதான தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளது. ப.சிதம்பரம், ஒட்டுமொத்தமாக பாஜக ஆட்சி, எல்லா நிலையிலும் தோற்றுப்போய் உள்ளதையே இந்த பட்ஜெட் பிரதிபலிப்பதாக கூறுகிறார்.

அதேநேரம், 50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக்காப்பீடு என்பது ரொம்பவே வரவேற்கக் கூடியது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ திட்டத்தை செயல்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும். அதேபோல், ஒவ்வொரு மூன்று மக்களவை தொகுதியிலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்பதும் கவனம் ஈர்க்கிறது.

எனினும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது கதையாக, கடந்த நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் இதுபோன்ற கவர்ச்சிகரமான பேச்சுகளை மக்கள் எவ்வளவோ கேட்டுவிட்டார்கள். ஏட்டில் இருப்பது மக்களின் கரங்களில் கிடைக்கும்போது மட்டுமே பேச்சு, செயல்வடிவம் பெற்றதாக கருத முடியும்.

 

– பேனாக்காரன்.