திரிபுரா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
திரிபுரா மாநிலம் மேற்கு மாவட்டம் கோவாய் பகுதியில் இன்று (செப். 20) இரு பிரிவினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர், கலவரமாக வெடித்தது. இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஒரு பத்திரிகையாளரை, மர்ம கும்பல் படுகொலை செய்துள்ளது. எனினும், கொலையுண்ட பத்திரிகையாளர் யார் என்ற முழு தகவலும் வெளியாகவில்லை. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
தொடரும் துயரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை செய்தி ஆசிரியரான கவுரி லங்கேஷ், கடந்த 5ம் தேதி அவருடைய வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களுக்குள், பீஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்தி நாளிதழின் செய்தியாளர் பங்கஜ் மிஸ்ரா என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தையும் மர்ம நபர்கள் அப்போது கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்நிலையில், இன்று திரிபுரா மாநிலம் மேற்கு மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.