Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குண்டர் சட்டம்: ஜனநாயக குரல்வளையை நசுக்கும் ஆயுதம்!

சமூக விரோதிகள்,
ரவுடிகளை ஒடுக்குவதற்காகக்
கொண்டு வரப்பட்ட குண்டர்
தடுப்புக்காவல் சட்டம்
(GOONDAS ACT), அரசுக்கு
எதிராக போராடுவோர் மீது
பாயும் போக்கு
அதிகரித்துள்ளதற்கு
மனித உரிமை ஆர்வலர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.

 

இந்தியா, ஆங்கிலேயர்களின்
காலனிய ஆதிக்கத்தில்
இருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு
எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும்
இந்தியர்களை ஒடுக்குவதற்காக
தடுப்புக் காவல் சட்டத்தைப்
பயன்படுத்தினர்.
நாடு விடுதலை அடைந்த
பிறகும், பாகிஸ்தான்
பிரிவினையால் ஏற்பட்ட
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை
கட்டுக்குள் கொண்டுவர,
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த
தடுப்புக் காவல் சட்டத்தை
இந்திய அரசும் அப்படியே
பின்பற்றி வந்தது.

 

 

இந்திரா காந்தி பிரதமராக
இருந்தபோது கொண்டு
வந்த ‘மிசா’ (MISA) சட்டத்தின் கீழ்,
நாடு முழுவதும் 110806 பேர்
எந்தவித காரணமுமின்றி
கைது செய்யப்பட்டு,
சிறையில் அடைக்கப்பட்டனர்.
தடுப்புக்காவல் சட்டம் எப்படி
எல்லாம் பயன்படுத்தக்கூடாது
என்பதற்கு மிசா நடவடிக்கைகளைச்
சொல்லலாம். அதன்பிறகு
தடா, பொடா, தேசிய பாதுகாப்பு
சட்டம் போன்ற தடுப்புக்காவல்
சட்டங்களும் அமல்படுத்தப்பட்டது.
இதில் தடா மட்டும்
நீக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தில்,
1982ம் ஆண்டு, எம்ஜிஆர்
முதல்வராக இருந்தபோது
குண்டர் (Goondas) தடுப்புக்காவல்
சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதில் இரண்டு முக்கிய
பிரிவுகள் உள்ளன.
ஒன்று, தொழில்முறை திருடர்கள்,
கொள்ளை, கொலை, விபச்சாரம்
உள்ளிட்ட குற்றங்களில்
ஈடுபடுவோரை அடக்குவதற்காக
‘குண்டாஸ்’ பிரிவின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

 

 

இன்னொன்று, பூட்லக்கர்ஸ் (BOOTLEGGERS). சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், பதுக்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல், பதுக்குதல், விற்பனை செய்தல் போன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது ‘பூட்லக்கர்ஸ்’ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது; ஓராண்டு வரை தடுப்புக்காவலில் இருந்தாக வேண்டும். இவை இரண்டும் முக்கிய அம்சங்கள்.

 

தடுப்புக் காவல் சட்டம், கடந்த 35 ஆண்டுகளில் மேலும் சில புதிய பரிணாமங்களை அடைந்துள்ளது. எப்படியெனில், அரிசி கடத்தல், மணல் கடத்தல், நிலம் அபகரிப்பு, கனிமம் கடத்தல், திருட்டு டிவிடி மற்றும் இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் குண்டாஸ் பாயும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மூன்று முறையாவது ஒருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தால்தான், அவரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரே ஒருமுறை குற்றத்தில் ஈடுபட்டாலும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

 

வளர்மதி

 

அண்மைக்காலங்களில், தொழில்முறை குற்றவாளிகளைவிட அரசுக்கு எதிராக போராடுவோரை ஒடுக்குவதற்காகவே குண்டர் தடுப்புக்காவல் சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் மணல் மாஃபியா வைகுண்டராஜன், கிரானைட் சுரண்டல் மன்னன் பிஆர்பி மீதோ பாயாத தடுப்புக்காவல் சட்டம், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் திருமுருகன் காந்தி, நெடுவாசல் பிரச்னையை முன்னெடுக்கும் வளர்மதி போன்றோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது.

தொழில்முறை குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்வதை வெகுசன மக்களும் வரவேற்கின்றனர். அல்லது, அதைப்பற்றி சட்டை செய்வதில்லை. அதேநேரம், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்கள், ஹைட்ரோகார்பன், கூடங்குளம் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை குண்டாஸில் அடைக்கும்போது, சாமானிய மக்களும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

 

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற நாட்டுப்புற பாடல் மூலம் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த கோவன், உச்சபட்சமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது போன்ற சூழ்நிலைகளில்தான் குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டங்களை நாம் ‘தடா’ (Terrorist and Disruptive Activities (Prevention) Act) சட்டத்தின் பிரதி பிம்பமாக கருத வேண்டியிருக்கிறது.

 

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தனது 2014ம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு வகையான தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் 3237 பேர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதில், தமிழக அரசால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் மட்டும் 1892 பேர். அதாவது, ஒட்டுமொத்தத்தில் தமிழகத்தின் பங்கு மட்டும் 58 சதவீதம். இவர்களில் 37 பேர் பெண்கள்.

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவோரில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிறது மற்றோர் ஆய்வு. பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியவர்கள்தான் அதிகளவில் இத்தகைய சட்டத்தில் சிக்குவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

“ஜாமீனில் வெளிவர முடியாது
என்ற ஒரே காரணத்துக்காக
இத்தகைய சட்டத்தின் கீழ்
காவல்துறையினர் கைது
நடவடிக்கை எடுக்கின்றனர்.
குறைந்தபட்சம் ஓராண்டாவது
சிறையில் அடைப்பட்டிருக்க
வேண்டும். குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் அதிகளவில்
கைது செய்யும் போலீசாருக்கு
சுழற்கேடயம் கொடுத்து
கவுரவிக்கப்படுவதாகக்கூட
கேள்விப்படுகிறேன். போலீசார்,
இந்த சட்டத்தை கொஞ்சம்
மெத்தனமாக கையாள்கிறார்களோ
என்றுகூட தோன்றுகிறது.
அதனால்தான் இதற்கென உள்ள
ஆலோசனை வாரியத் தலைவர்
பதவி வாய்ப்பு வந்தபோது கூட
நான் அதை மறுத்துவிட்டேன்,”
என்கிறார் ஓய்வு பெற்ற
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்.

 

தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் சேலம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் அசோகன், நிகழ்கால குண்டர் சட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாகவே பேசினார்.

 

வழக்கறிஞர் அசோகன்

 

”முன்பெல்லாம் நொட்டோரியஸ் கிரிமினல்கள் (Notorious Criminals), தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீதுதான் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இப்போது அரசை எதிர்ப்பவர்கள் மீதுதான் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றவர்கள் மீது அரசியல் உள்நோக்கத்துடன்தான் குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 

இதை எதிர்த்து ஒரு பொது நல வழக்கு தொடர வேண்டும் என்று இருக்கிறோம். அரசின் இந்தப் போக்கு பாகுபாடாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக பேசுபவர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக மட்டுமல்ல; மக்களுக்காக போராடும் ஒருவர் மீது இவ்வாறு குண்டர் சட்டத்தை ஏவுவதன் மூலம், மற்றவர்கள் யாரும் அதுபோல் போராட்டக் களத்திற்கு வந்துவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காகவே குண்டாஸ் போடப்படுகிறது. என்னதான் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டாலும், அவரை சில மாதங்கள் வரை ‘உள்ளே’ வைத்திருப்பதன் மூலம், போராடத் துணிபவர்களின் வீ¦ரியத்தை ஒடுக்குவதுதான் காவல்துறையினரின் திட்டம்.

 

சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பயமுறுத்துவதும்கூட சித்ரவதைதான். நியாயமான போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தைக் காட்டி பயமுறுத்துவதும் சித்ரவதைதான். ஐ.நா. உடன்படிக்கையை மீறித்தான் தமிழக அரசு நடந்து கொள்கிறது. ஐ.நா. அவையில் இதுபற்றி நிச்சயம் அழுத்தம் கொடுக்கப்படும். குண்டர் சட்டம் வேண்டும். ஆனால், அதை தவறுதலாக பயன்படுத்தக்கூடாது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அட்வைசரி போர்டு மூலம் நிவாரணம் பெறலாம். ஒருவர் மீது குற்றமில்லை என்று அப்பட்டமாகவே தெரிந்தாலும், அவர் விடுதலை ஆக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகிவிடுகிறது. அரசோ, காவல்துறையோ இதன்மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டதாகத்தான் கருத வேண்டும்,” என்கிறார் வழக்கறிஞர் அசோகன்.

 

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட செலவினங்களுக்காக அரசு கணிசமாக நிதி ஒதுக்குகிறது. தடுப்புக் காவல் சட்டத்தின்படி ஒருவரை கைது செய்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அரசு வழங்குவதாகவும், அதற்காக க்கூட சிலர் தங்கள் இஷ்டத்திற்கு குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் உண்டு என்கிறார், முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கையை வைத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் திறமையை நாங்கள் எடைபோடுவதும் உண்டு என்கிறார் அவர்.

 

குற்றச் செய்கைகளில் ஈடுபடும் நபர்களைத் தவிர மற்றவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது எனில் அதற்கு முழு காரணம் அரசியல் உள்நோக்கம் மட்டும்தான். நான் பணியில் இருந்தபோது, மேலிடத்தில் இருந்து எனக்கு அதுபோல் பலமுறை உத்தரவுகள் வந்திருக்கின்றன. அப்போது திமுகவைச் சேர்ந்த பலரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தோம். இதெல்லாமே அரசியல் பின்னணியோடுதான் நடந்தது என்று மனம் திறந்தார் அந்த அதிகாரி.

 

ஈரோடு மாவட்ட எஸ்.பி. சிவக்குமாரிடம் கேட்டபோது, ”பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, தொடர் குற்றத்தில் ஈடுபட்டாலோ அல்லது இருவேறு மதம், சாதிகளுக்கு இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் நடந்து கொண்டாலோகூட குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யலாம். வன குற்றங்களில் ஈடுபட்டாலும் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

 

பேச்சு அல்லது செய்கைகளின் மூலமும்கூட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முடியும் என்பதால்தான் அரசுக்கு எதிராக போராடுபவர்கள், பேசக்கூடியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அதற்காக எல்லா சூழ்நிலைகளிலும் குண்டர் சட்ட நடவடிக்கையை நான் ஆதரிப்பதாக கருத வேண்டாம். எனினும், குண்டர் தடுப்பு சட்டம் இருப்பது நல்லதுதான். அந்த சட்டத்தால் விளையக்கூடிய நன்மை, தீமை என்பது அதைக் கையாளும் காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தது.

 

சிவகுமார், எஸ்.பி.

 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் முழு தண்டனைக் காலமான ஓராண்டிற்குள்ளாகவே விடுதலை ஆகிவிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர், அட்வைசரி போர்டு மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்தும் முறையிட முடியும்,” என்றார்.

 

மனித உரிமைகள் ஆர்வலர்கள், குண்டர் சட்டம் செல்லாது என்று ஒருவர் விடுவிக்கப்படும்போது, அதுநாள் வரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததற்காக பாதி க்கப்பட்ட நபருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். அதேநேரம், பொய்யாக வழக்கை ஜோடித்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்கிறார்கள்.

 

‘நானே எல்லாம்; நானே இந்த நாடு’
என்ற எண்ணம்
தலைக்கேறும்போதுதான்
ஜனநாயக குரல்வளைகள்
எந்தவித தார்மீக அறமுமின்றி
நெரிக்கப்படுகின்றன. பேரறிஞர்
அண்ணாவின் மொழியில்
மொழிவதானால்,
”அதிகமாக முறுக்கேற்றப்பட்ட
கயிறு அறுந்து போகும்,” என்பதை
இந்த அரசு புரிந்து கொள்ள
வேண்டும்,” இணைப்பு.

 

– பேனாக்காரன்