Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைக் காட்டிலும் அதில் மெச்சத்தக்கது வேறேதும் இல்லை என்பது என்னளவிலான புரிதல். ஏப்ரல் 18, 2019ல் நடக்க இருக்கும் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க, தமிழக வாக்காளர்கள் இந்நேரம் மனதளவில் தயார் படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வாக்குச்சாவடிக்குள் நீங்கள் செல்வதற்குள்ளாவது நான் உங்களுடன் பேசி விட வேண்டும் என்ற உந்துதலாலேயே இப்போது பேச விழைகிறேன்.

இந்தியத் தேர்தல் அமைப்பு முறை, இந்த தேசத்தின் குடிமக்களை வெறும் வாக்காளன் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போகச் செய்துவிட்டதுதான், இந்திய ஒன்றியத்தில் நாம் கண்ட மக்களாட்சி தத்துவம். சொல்லப்போனால், இப்போதுள்ள தேர்தல் நடைமுறைகள், அரசியல் களத்தில் இருந்து சாமானிய மக்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டது எனலாம். உடனே நீங்கள், காளியம்மாக்களும், பொன்னுத்தாய்களும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றிருக்கும்போது சாமானியர்களை விலக்கி விட்டதாக எப்படிச் சொல்ல முடியும்? என்றெல்லாம் வினா எழுப்புவது வீண் வாதம்.

 

இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய ஐந்து கட்சிகளின் சார்பில் 39 தொகுதிகளிலும் 195 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 52 பேர் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் சொத்துள்ளவர்கள். ஏனைய 143 வேட்பாளர்களும் ஒரு கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள்.

 

இவர்களிலும் 20 கோடி மற்றும் அதற்கு மேலும் சொத்துள்ளவர்கள் 30 பேர் இருக்கிறார்கள். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹெச்.வசந்தகுமார் 417 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். தென் சென்னையில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 237.56 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாம் இடமும், பொள்ளாச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் 173.32 கோடியுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

 

கல்வித்தந்தைகளாக வலம் வரும் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து உடையார், ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், தம்பிதுரை மற்றும் கனிமொழி, அன்புமணி ராமதாஸ், எல்.கே.சுதீஷ், ஏ.கே.பி.சின்னராஜ், கவுதம சிகாமணி என கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் நீள்கிறது. முதல் 30 இடங்களில், மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக தயாநிதிமாறன் இல்லை என்பதுதான் வேடிக்கை. வழக்கம்போல் இடதுசாரி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களில் யாருமே கோடீஸ்வரர்கள் பட்டியலில் இல்லை.

உதாரணமாக, சேலம் மக்களவை தொகுதியில் 1800 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி எல்லைக்குள்ளும் தலா ஒரு தேர்தல் அலுவலகத்தை கட்சிகள் திறக்கின்றன. ஒரு முன்னணி கட்சி, வாக்குச்சாவடிக்கு தலா 20 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறது. இந்தக்குழுதான் வாக்குப்பதிவு நாளில், தவறாமல் கண்ணும்கருத்துமாக வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும். ஏனெனில் இவர்கள் மூலம்தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் உன்னதமான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம் தவிர, இந்தக்குழுவினரின் தேர்தல் கால செலவுகளுக்காகவே (உணவு, மது, குடிநீர் இத்யாதிகள்) முன்னணி கட்சிகள், தங்கள் தரப்பில் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை செலவழிக்கின்றன. இந்த வகையில் மட்டுமே முன்னணி கட்சிகளுக்கு 18 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதன்பிறகு, வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வழங்குகின்றன. அதாவது, அதிகபட்சமாக 500 ரூபாய்க்குள் ஒரு வாக்காளனை விலை கொடுத்து கட்சிகள் வாங்கி விடுகின்றன.

 

முன்னணி கட்சிகள் சராசரியாக
60 சதவீத வாக்காளர்களுக்கு
பணப்பட்டுவாடா செய்வதை
இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.
ஒரு வாக்குக்கு தலா 300 ரூபாய்
எனக்கொண்டாலும், சேலம் தொகுதியில்
உள்ள 15 லட்சம் வாக்காளர்களில்
9 லட்சம் பேருக்கு
(அதாவது 60 சதவீதம் பேர்)
27 கோடி ரூபாயை இரண்டே
நாளில் காதும் காதும் வைத்ததாற்போல்
பட்டுவாடா செய்து விடும்.
இதே தொகையை பிரதான
போட்டியாளரும் செலவிடுவார்.
ஆக, பிரதான கட்சிகளின் சார்பில்
போட்டியிடும் ஒருவர், தேர்தல்
களத்தில் இறங்கவே குறைந்தபட்சம்
45 கோடி ரூபாய்க்கு மேல்
செலவழிக்க வேண்டிய
நிலை இருக்கிறது.

 

இப்படியான சூழலில் வெற்றி பெற்று வரும் அந்த வேட்பாளர், எந்தெந்த வகையில் மக்களைச் சுரண்டலாம் என சிந்திப்பாரா? அல்லது மக்களவையில் நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பாரா? என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

 

சோழர் காலத்திலேயே குடவோலை முறையில்மிகச்சிறப்பாக தேர்தல்களை நடத்திக் காட்டிய தமிழினம், இப்படி 200க்கும் 300க்கும் விலைபோகும் அளவுக்கு சிந்தனையில் முடக்குவாதம் ஏற்பட்டது எதனால்? எப்போது இருந்து?

ஏன் பெரிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழவில்லையா? ஏனெனில், சுரண்டல்பேர்வழிகளைப் பார்த்துப்பார்த்து நொந்துபோன வாக்காளன், தேர்தல் நாளன்று கிடைக்கும் விடுமுறையைக் கொண்டாடத் தயாராகிவிட்டான். அவனை வாக்குச்சாவடிக்கு எப்பாடுப்பட்டாவது இழுத்து வர வேண்டும். இல்லாவிட்டால், வாக்குப்பதிவு 40 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து போகும் அபாயம் இருக்கிறது. அப்படி வாக்குப்பதிவு அதலபாதாளத்திற்குச் சென்றால், நம் ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை மீது அய்யம் எழும். அதற்கு ஒரேவழி, கோடீஸ்வரர்களையே போட்டியிட வைப்பது; வாக்கிற்கு பணம் கொடுப்பது; அதற்கு தேர்தல் ஆணையமும் துணை நிற்பது. இவை எழுதப்படாத விதிகள்.

 

சினிமா நட்சத்திரங்களை வைத்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து பரப்புரை செய்து வரும் தேர்தல் ஆணையம், ஏன் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என்று பகிரங்கமாக பரப்புரை செய்ய மறுக்கிறது?

 

பரவலாக நடத்தும் சோதனைகள்
மூலம் தேர்தல் ஆணையம் தங்களை நடுநிலையான
அமைப்பாக காட்டிக்கொள்ளும். உண்மையில்,
முதலாளியவாதிகளுக்கு, மையப்படுத்தப்பட்ட
ஆதிக்கவாதிகளுக்கு முற்றாக
துணை போவது தேர்தல் ஆணையமும்தான்.
நோட்டாவை ஏன் ஒரு வேட்பாளராக
அறிவிக்க மறுக்கிறது? நோட்டா சின்னம்
அதிக வாக்குகளைப் பெறும்பட்சத்தில்
அந்த தொகுதிக்கு மறுதேர்தலை
நடத்தட்டுமே? ஆனால், இதுவரை
அப்படியான சட்டத்திருத்ததை
கொண்டு வராதபோது தேர்தல்கால
ஊழல்களுக்கு தேர்தல் ஆணையமும்
துணை போகிறது என்றுதானே பொருள்?

இப்படி பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே மோதிக்கொள்ளும் தேர்தல் களத்தில் சாமானிய வாக்காளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதே ஆகப்பெரும் சாதனைதான்.

 

இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு பெரிய கட்சிகளிடையேதான் போட்டி நிலவுகிறது. எனில், இரு கட்சிகளும் வேறு வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளா? என்றால் அதுதான் இல்லை. இரண்டுமே, ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். இவற்றில் ஒன்று, வலியில்லா மரணத்தைக் (யுதனேஷியா) கொடுக்கக்கூடியது; இன்னொன்று, துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லக்கூடியது.

 

காங்கிரஸ் கட்சி, ஒன்றை தொடங்கி வைக்கும். பாஜக, வெற்றிகரமாக முடித்து வைக்கும். ஜிஎஸ்டியை காங்கிரஸ் கொண்டு வர துடித்தது. பாஜக நிறைவேற்றியது. ஆதார் திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆதார் மூலம் அம்பானி கூட தனி மனிதனின் அந்தரங்கத்தை வேவு பார்க்கும் அளவுக்கு முடித்து வைத்தது பாஜக. ஒருபுறம், காங்கிரஸ் சீக்கியர்களைக் கொல்லும்; இன்னொருபுறம் மாட்டுக்கறி தின்றாலே ஓட ஓட வெட்டி காவு வாங்கும் பாஜக.

 

சிங்களவர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை நிகழ்த்த காங்கிரஸ், இந்திய ராணுவத்தையே அனுப்பி வைக்கும்; இன அழிப்புக்குப் பிறகும், ராணுவ உதவிகளை பாஜக தொடர்ந்து வழங்கும். ஈழத்தில் இனப்படுகொலைக்கு துணை நின்றது, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் என்று ராஜபக்சே சொன்னபோதும், அதையும் ஒரு சேதியாகவே நாம் கடந்து போய்விடுகிறோம்.

 

காங்கிரஸ் கட்சி, தனக்கு ஒத்துப்போகாத மாநிலக் கட்சிகளை கேள்வியே கேளாமல் 356வது பிரிவின்கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கலைத்து இருக்கிறது. பாஜக, வெறும் இரண்டு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து விடுகிறது. பெருங்கூட்டமே எதிர்த்து வாக்களிக்கும்போது, வெறுமனே இரண்டு இடங்களைப் பிடித்த கட்சி எப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிகிறது? அப்படியெனில் இதை எப்படி சமத்துவ ஜனநாயகம் எனக்கூற முடியும்?

 

மிசா, தடா, பொடா என கருப்புச்சட்டங்களின் கிடங்காக காங்கிரஸ் அரசுகள் திகழ்ந்தன என்றால், ஊபா மற்றும் செடிஸன் போன்ற கருப்புச்சட்டங்களால் எதிர்த்துப் பேசுபவரின் குரல்வளையை நெரித்து விடுகிறது பாஜக. உச்சக்கட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தவும், மனிதனை உயிர்க்கேடயமாக பயன்படுத்தவும்கூட தயங்குவதில்லை, சங்கிகள்.

 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்
1.85 லட்சம் கோடி ரூபாய் ஊழல்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.75 லட்சம்
கோடி ரூபாய் ஊழல், வக்பு வாரிய
நில மோசடியில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல்,
காமன்வெல்த் விளையாட்டில்
3500 கோடி ரூபாய் ஊழல்,
ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில்
70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்,
டில்லி விமான நிலைய கட்டமைப்பில்
1.63 லட்சம் கோடி ரூபாய் ஊழல்
என காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
ஊழல்கள் தாண்டவமாடியது.

 

தொடர்ந்து இரண்டாவது முறையாக
(2009 – 2014) ஆட்சிக்கு வந்த
காங்கிரஸின் ஐமுகூ அரசு,
அதுவே கடைசி அரசியல் களம் என்று
கருதியதோ என்னவோ.
இந்த ஊழல்களில் படு கேவலமானது
ஆதர்ஷ் ஊழலைச் சொல்லலாம்.
போரில் உயிர்நீத்த வீரர்களின்
குடும்பங்களுக்கு சலுகை விலையில்
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரும்
திட்டம்தான் அது. அந்தத் திட்டத்தில்கூட
அப்போதைய மகராஷ்டிரா முதல்வர்
அசோக் சவான் மற்றும் அதிகாரிகள்
ஊழல் செய்திருந்தனர்.
எப்படி டான்சி நிலத்தை
ஜெயலலிதா வாங்கினாரோ அதேபோல.
ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான
குடியிருப்பு எனத்தெரிந்தும்
முதல்வர் அசோக் சவானும்
தன் பெயரில் வீடுகளை
ஒதுக்கிக்கொண்ட திருடன் அவர்.

 

மூன்றாவது முறையாகவும்
திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
அமைத்திருக்கும்பட்சத்தில்,
இந்தியாவில் எஞ்சியிருக்கும்
வளங்களையும் சூறையாடியிருப்பார்கள்.

 

அதற்காக, பாஜக அதி உத்தமமான கட்சி என்று சொல்லி விட முடியாது. அவர்கள் காங்கிரஸ், திமுகவினர் போல நேரடியாக சுரண்ட மாட்டார்கள். ஆனால் சுரண்டல்பேர்வழிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள். இப்போது தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜன் தேர்தலில் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழிக்காமல் போகலாம். ஆனால், ஊழல்வாதிகளான அதிமுகவினரைக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி விடும் வேலைகளைத்தானே செய்து வருகிறது?

பெரு முதலாளிகளிடம் இருந்து நீண்ட காலமாக வராத 3.50 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது பாஜக. காங்கிரஸைப் பார்த்து ஸ்பெக்ட்ரம், ஆதர்ஸ், நிலக்கரி ஊழல் என கூச்சல் போடும் பாஜக, பெரு முதலாளிகளின் 3.50 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் இன்னொரு ஊழலைத்தானே செய்திருக்கிறது? சவப்பெட்டிகளை வாங்கியதிலும் ஊழல் செய்த காலிகள்தான் பாஜக. காங்கிரஸ் மீது போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் பாஜக மீது ரபேல் போர் விமான ஊழல் கறையும் படிந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஜிஎஸ்டி வரியால் 1.50 லட்சம் சிறுதொழில்கள் முடங்கியது, குறிப்பிட்ட சில முதலாளிகளின் நலன்களுக்காக பணமதிப்பிழப்பு செய்தது என எல்லாவற்றிலும் பாஜக அரசு தோற்றுப்போய் இருக்கிறது.

 

ஹிட்லரின் நாஸிசம் என்பது,
ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே சித்தாந்தம்தானே?
ஹிட்லரின் கொள்கைகளுக்கும் பாஜக,
ஆர்எஸ்எஸ் கும்பலின் கொள்கைகளுக்கும்
சிறு வித்தியாசமும் இல்லையே.

 

ஆரியர்களே அறிவானவர்கள்;
ஆரியர்கள்தவிர அழகானவர்கள்
யாரும் இல்லை என்பதும் நாஸிஸத்தின்
உள்ளடக்கம். அதே ஆரியவாதத்தைதான்
எல்லா அடுக்குகளிலும் பாஜகவும் புகுத்துகிறது.
ஹிட்லரைப்போல் இந்தியாவில்
மோடி அரசு, இன அழிப்பில் ஈடுபடவில்லை.
என்றாலும், போராடும் சொந்த மக்கள் மீது
கொலைவெறித் தாக்குதல்
நடத்தவும் தயங்கியதில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
நமக்கு அதை நினைவுபடுத்துகிறது.
இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை
பாஜக தொடர்ந்து சிதைத்து வருகிறது.

 

ஆனால், எங்கெல்லாம் அதீத அடக்குமுறை உருவாகிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடித்தே தீரும் என்பதுதான் உலக வரலாறுகள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

 

இப்போது சொல்லுங்கள்… பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டில் எது நல்ல கட்சி? உங்களுக்குள்ளாகவே சமரசம் செய்து கொள்ளாமல் இவ்வினாவுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

 

தேர்தல் ஜனநாயகத்திற்குள் வந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவற்றில் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 11 ஆண்டுகள் பாஜகவும் இந்த நாட்டை ஆண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும் விவசாயிகளின் நலன், வறுமை ஒழிப்பு பற்றி இரு கட்சிகளுமே பேசுகின்றன. ஆனால், இன்றும் மூன்றில் ஒருவர் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்லும் அவலம் இந்த நாட்டில் நீடிக்கிறது. வறுமை ஒழிந்தபாடில்லை.

 

தாங்கள் வெற்றி பெற்றால் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்கிறது, காங்கிரஸ். எனில், இந்த திட்டத்தை நிறைவேற்ற ஐந்து ஆண்டுகளில் 18 லட்சம் கோடிகள் தேவைப்படும். இந்த நிதியைக்கொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் ஏழைகள் நிரந்தரமாக வறுமையில் இருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. அப்படி வறுமை ஒழிந்துவிட்டால், இரு தேசிய கட்சிகளும் தொடர்ந்து இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். மீண்டும் மீண்டும் தேசிய கட்சிகள், மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பாவிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

இன்னொரு அதிர்ச்சிகரமான ஆனால் நம்பக்கூடிய சேதியும் ஒன்று இருக்கிறது. உலகில் வேறெங்கிலும்விட இந்தியாவில்தான் நாட்டின் பெரும்பகுதி வளங்கள் ஒரே இடத்தில் குவிந்து வருகின்றன. ஆமாம். இந்த நாட்டின் 77 சதவீத சொத்துகள் 10 சதவீத கோடீஸ்வரர்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. வளர்ச்சி வளர்ச்சி எனக் கூறும் அரசுகள், யாருடைய வளர்ச்சிக்காக இத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டு வந்துள்ளன என்பதை இதன்மூலம் அப்பட்டமாக நாம் உணர்ந்து கொள்ள முடியும். கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த வளர்ச்சி, வெறும் பாஜக ஆட்சியில் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதைத்தான் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

 

கார்ப்பரேட்டுகளுக்காகவும், திடமான வாக்கு வங்கியாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும் மட்டுமே இந்த அரசுகள் கவனம் செலுத்துகின்றன. 13.60 கோடி ஏழைகள் இன்னும் முழுமையான சுகாதார வசதிகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் இன்றி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஒட்டுமொத்த தேசத்திற்கும் இலவச சுகாதார சேவைகள், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இருந்தால் போதுமானது. இது, முகேஷ் அம்பானி குவித்து வைத்திருக்கும் 2.80 லட்சம் கோடிகளைக் காட்டிலும் குறைவானதுதான்.

 

எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இங்கே காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு அரசுகளுமே உழைக்கும் வர்க்கத்தை முற்றாக புறந்தள்ளுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவர்களை வெறும் 300 ரூபாய்க்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு விட முடியும் என நம்புகின்றன. அதில் கணிசமாக வெற்றியும் பெறுகின்றன.

 

இங்கே, மக்களை நேரடியாக சந்திக்காத ஒருவர் பிரதமராக (உதாரணம்: மன்மோகன் சிங்) முடியும் எனில்… இங்கே, மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் ராஜாங்க அமைச்சராக முடியும் எனில், இந்தியா எப்படி மக்களாட்சி நாடாக இருக்க முடியும்?. மாற்றத்தை விரும்பியதால்தான் 1967ல் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முடிந்தது. மாற்றத்தை முன்னெடுத்ததால்தான் டெல்லியில் துடைப்பம்கூட அரியணையேற முடிந்தது. ஆனால் அதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது பேரழிவை ஏற்படுத்தும்.

 

காங்கிரஸையும், பாஜகவையும் நீங்கள் சம தொலைவில் வைத்துதான் பார்க்க வேண்டும். புதியவர்களுக்கு, மாற்று சிந்தனையாளர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

 

உழைக்கும் மக்களின் கரங்களில் அதிகாரம் கிடைக்கும்போதுதான் உண்மையான மக்களாட்சி தத்துவம் கொண்ட நாடாக இந்தியா மிளிர முடியும். போலி ஜனநாயகவாதிகளுக்கு வாக்களிப்பதும் வர்க்க அரசியலுக்கு துணை போவதும் ஒன்றுதான்.

 

– பேனாக்காரன்

பேச: 9840961947