Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப். 17) நடந்தது. காலை முதலே சென்னையில் பரவலாக மழை இருந்ததால், ஆட்டத்தின் இடையிலும் மழை குறுக்கிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். உடல்நலம் சரியில்லாததால் கடைசி நேரத்தில் ஷிகர் தவாண் விலகியதை அடுத்து, அந்த இடத்தில் ரஹானே சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்ந்தன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 5 ரன்களில் அவுட் ஆனார். அவருக்குப் பிறகு வந்த கேப்டன் விராட் கோஹ்லி, மனீஷ் பாண்டே ஆகியோர் ரன் ஏதுமின்றி Ôடக்Õ அவுட் ஆகினர். சிறிது நேரமே தாக்குப்பிடித்த ரோஹித் ஷர்மா 28 ரன்களில் திருப்தி அடைந்து வெளியேறினார். கேதர் ஜாதவ் மட்டும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் தன் பங்குக்கு 40 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 87 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 200 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஆபத்பாண்டவர்களாக களமிறங்கிய ஹர்டிக் பாண்ட்யாவும், விக்கெட் கீப்பர் தோனியும் இந்திய அணியை கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜாம்பாவின் ஒரே ஓவரில் ஹர்திக் பாண்ட்யா, ஒரு பவுண்டரியும், 3 சிக்சர்களும் தொடர்ச்சியாக பறக்க விட்டார். அதன்பிறகே ஆட்டத்தில் பரபரப்பும் கூடியது. அவர் 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆகும் வரை நிதானமாக ஆடிய தோனி அதன்பிறகு அவரும் ஏதுவான பந்துகளை அடித்து ஆடினார். அவர் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக இருந்த புவனேஸ்வர்குமார் 32 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

மழையால் பாதிப்பு: அடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்க இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் பத்து ஓவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியா வீரர்கள் கட்டுக்கோப்புடன் விளையாடினர். ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழலில் அந்த அணி ஒட்டுமொத்தமாக நிலை குலைந்தது.

சாஹல் 5 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 21 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

83 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தாவில் வரும் 21ம் தேதி நடக்கிறது.