Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

வர்த்தகத்தின் முதல் நாளான
இன்று (பிப். 22) இந்திய
பங்குச்சந்தைகள் சரிவுடன்
வணிகத்தைத் தொடங்கின.

பகல் 1.50 மணி நிலவரப்படி,
சென்செக்ஸ் அதிகபட்சமாக
1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து
49971 புள்ளிகளும், நிப்டி 251
புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்)
14741 புள்ளிகளிலும்
வர்த்தகம் ஆகின.

 

நிப்டி காலையில் 14999
புள்ளிகளுடன் வர்த்தகத்தை
தொடங்கியது. அதிகபட்சமாக
15010 புள்ளிகளை தொட்டது.
குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள்
வரை சரிந்தது. காலையில் 50910
புள்ளிகளுடன் வர்த்தகத்தை
தொடங்கிய சென்செக்ஸ்,
அதிகபட்சமாக 50986 புள்ளிகள்
வரையிலும், குறைந்தபட்சமாக
49860 புள்ளிகள் வரையிலும்
சென்றன.

மருந்து தயாரிப்பு துறைகள்,
நிதிச்சேவை துறைகளின் பங்குகள்
பெருமளவு வீழ்ச்சி கண்டதே
சந்தையின் சரிவுக்கு காரணமாக
சொல்லப்படுகிறது. இரண்டு
சந்தைகளும் முதல் செஷனிலேயே
கிட்டத்தட்ட 1 சதவீதத்திற்கு
மேல் சரிவு கண்டிருந்தன.

 

அதேநேரம்,
பங்குகளின் விலைகள் குறைந்தபோது
சில்லரை முதலீட்டாளர்கள் பலரும்
பங்குகளை கணிசமாக
வாங்குவதும் நடந்தது. அந்நிய
முதலீட்டாளர்கள் (எப்ஐஐ)
தொடர்ந்து இந்திய
பங்குச்சந்தைகளில் கணிசமான
முதலீடுகளை செய்தனர்.

 

”அமெரிக்காவில் பத்து
ஆண்டுகால அரசு கடன்
பத்திரங்களின் வளர்ச்சி
1.36 மடங்கு மட்டுமே பலன்
தரக்கூடும் என்ற அறிவிப்பும்,
ஜோ பிடனின் 1.9 ட்ரில்லியன்
டாலர் நிதி திரட்டும் புதிய
பணக்கொள்கையும் கடுமையான
பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும்
என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் தாக்கம் உலகளாவிய
பங்குச்சந்தைகளிலும் சரிவை
ஏற்படுத்தும்,” என்கிறார் ஜியோஜித்
நிதிச்சேவை நிறுவனத்தின்
முதலீட்டுப்பிரிவு முதன்மை
ஆலோசகர் வி.கே.விஜயகுமார்.

 

மேலும் அவர்,
”மஹாராஷ்டிராவில் புதிய
வகை கொரோனா தாக்கம்
மீண்டும் அதிகரித்து வருவதும்
உள்நாட்டு பங்குச்சந்தைகளின்
வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்,”
என்றும் சொல்கிறார்.

 

அமெரிக்காவின் புதிய
பணக்கொள்கையால்
ஜப்பான் நாட்டு பங்குச்சந்தையிலும்
சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது.
என்றாலும், இன்றைய வர்த்தகத்தின்
பிற்பகுதியில் 1.0 சதவீதமும்,
கொரியா சந்தைகள் 0.4 சதவீதமும்
மெதுவாக ஏற்றம் கண்டன.
ஆனாலும், சீன பங்குச்சந்தைகள்
1.2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.

 

நிப்டியில் ஜேஎஸ்டபுள்யூ,
ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல்,
ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி
ஆகிய பங்குகள் ஓரளவு ஏற்றம்
கண்டிருந்தன. அதேநேரம்,
எம் அண்டு எம், டெக் மஹிந்திரா,
டாக்டர் ரெட்டி, ஆக்ஸிஸ் வங்கி,
இண்டஸ்இந்த் வங்கி பங்குகள்
3 முதல் 5 சதவீதம் வரை
சரிவை சந்தித்தன.

 

பங்குச்சந்தையில்
ஏற்பட்ட திடீர் சரிவால்
முதலீட்டாளர்கள் கவலை
அடைந்துள்ளனர்.
இந்த சரிவு நிலை மேலும்
சில நாள்கள் வரை தொடரக்கூடும்
என்கிறார்கள் சந்தை
ஆய்வாளர்கள்.

 

– ஷேர்கிங்