உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் பட ஷூட்டிங்கால் சேலம் திருச்சி மெயின ரோட்டில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது.
நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்
தற்போது “மாமன்னன்” என்ற
புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்
நாயகியாக நடிக்கிறார்.
வடிவேலு, பகத் பாசில்
ஆகியோரும் நடிக்கின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய
படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ்,
இந்தப் படத்தை இயக்குகிறார்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்
படத்தை தயாரிக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கிறார்.
”மாமன்னன்” படத்துக்காக
கடந்த இரு மாதத்திற்கும் மேலாக
சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில்
பல இடங்களில் செட் அமைத்து
முக்கிய காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம், அண்ணா பூங்கா அருகே
உதயநிதி மோட்டார் சைக்கிளில்
வேகமாகச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.
இந்தக் காட்சி, சமூக ஊடகங்களில்
அப்போது வேகமாக பரவியது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு
சேலம் அரசு கலைக்கல்லூரியிலும்
செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை (மே 7)
காலை 7 மணி முதல் சேலம் குகை திருச்சி
மெயின் ரோட்டில் ”மாமன்னன்”
படப்பிடிப்பு நடந்து வருகிறது.
குறுகலான மற்றும் வாகன போக்குவரத்து
அதிகமுள்ள இந்த சாலையை இருபுறமும் அடைத்து,
படப்பிடிப்பு நடத்தப்பட்டதால்
வாகனப் போக்குவரத்து முடங்கியது.
படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்க
பொதுமக்கள் கூடியதால், நடந்து செல்லக்கூட
முடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த திடீர் அசவுகரியத்தால் வெகுமக்கள்
கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து பாஜகவின் சேலம் தாதகாப்பட்டி கிளையின் முன்னாள் தலைவர் சிவராமன் கூறுகையில், ”சேலம் திருச்சி மெயின் ரோட்டில் சூப்பர் மார்க்கெட்டுகள், சாலையோர காய்கறி கடைகள், தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சி மண்டல அலுவலகம், மாநகராட்சி மருத்துவமனை மட்டுமின்றி நெருக்கமான குடியிருப்புகளும் உள்ளன. இதனால் எப்போதும் இந்த சாலையில் இயல்பாகவே வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.
மேலும், திருச்சி மெயின் ரோடு செண்டர் மீடியன் இல்லாத மிகவும் குறுகலான சாலை ஆகும். இந்த நிலையில், சேலம் திருச்சி மெயின் ரோட்டில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் என்ற படத்திற்கான படப்பிடிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை முதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது சிபிஎஸ்இ
பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.
திடீரென்று படப்பிடிப்பிற்காக
சாலையின் இருபுறமும் அடைக்கப்பட்டதால்
பள்ளி வாகனங்களும், மாணவ, மாணவிகளை
ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மற்றும்
பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து
வாகனங்கள் செல்ல முடியாமல்
கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
நோயாளிகளை சிகிச்சைக்காக
கொண்டு செல்லும் 108 ஆம்புலன்ஸ்
வாகனங்கள் தடையின்றி செல்ல முடியாமல்
சாலையிலேயே ஸ்தம்பித்து நின்றன.
அலுவலகங்களுக்கு செல்லும் இருசக்கர
வாகன ஓட்டிகளும் போக்குவரத்து
நெரிசலால் தடுமாறினர்.
குறுக்கு சந்துகளில் புகுந்து செல்லலாம் என்றால்,
பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும்
கேபிள்கள் பதிக்கும் பணிகளுக்காக
சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால்,
வாகன ஓட்டிகள் ரொம்பவே
சிரமத்துக்கு உள்ளாகினர்.
தாதகாப்பட்டியில் இருந்து ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் வரை சாலையின் இருபுறமும் ஒரு கி.மீ. தூரத்திற்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும்
காட்சிகள் படமாக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
நடிகர், நடிகைகள் மட்டுமின்றி
திரைத்துறையினருக்கும்
சமூகப் பொறுப்புணர்வு அவசியம்.
கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல்
சாலையை ஆக்கிரமித்து படப்பிடிப்பு
நடத்துதல் கூடாது. இதுபோன்ற
பணிகளுக்கு மாநகராட்சி, காவல்துறை
நிர்வாகமும் அனுமதி
வழங்கி இருத்தல் கூடாது.
போக்குவரத்து நெரிசல் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று வாய்மொழியாக புகார் அளித்தும் இரவு வரை போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவில்லை ,” என்றார்.
குகையைச் சேர்ந்த மருந்து கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், ”ஹீரோயின் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகளுக்கான கேரவன் எனப்படும் சொகுசு வாகனங்கள், மினி பேருந்துகள் என படப்பிடிப்பு தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. ஒருபுறம் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது,” என்றார்.
இது குறித்து சேலம் மாநகர
காவல்துறை தரப்பில் விசாரித்தபோது,
”மாமன்னன் படத்திற்காக ஷூட்டிங் நடத்த
படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில்
முறையான அனுமதி பெற்றுள்ளனர்.
போக்குவரத்து காவல்துறையினர்
போக்குவரத்து சீரமைப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்,” என்றனர்.
எனினும், சேலம் – திருச்சி மெயின் ரோடு
போன்ற நெரிசல் மிகுந்த, குறுகலான சாலைகளில்
படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி
வழங்கியிருக்கக் கூடாது என்பதே
பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
அத்துடன், முதல்வரின் மகன்
நடிக்கும் படம் என்பதால், விதிகளை மீறி
சாலையை ஆக்கிரமித்து படப்பிடிப்பு
நடத்தப்பட்டதாகவும் பலரும்
அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
– பேனாக்காரன்