Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

கடும் எதிர்ப்புக்கு இடையே, பங்குச்சந்தையில் களமிறங்கிய எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) பெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு வரை கூடுதலாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

 

இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை.

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம்

ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட

இந்திய அரசு உத்தேசித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு

வெளியீடு (ஐபிஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ

சந்தைகளில் மே 4ம் தேதி தொடங்கியது.

 

ரஷ்யா – உக்ரைன் போர்,

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு

உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசுக்கும்

இந்த வெளியீடு வெற்றி பெறுமா என்ற

சந்தேகம் இருந்தது. ஆனால்,

முதலீட்டாளர்களிடம் கிடைத்த

வரவேற்பால் மத்திய அரசு உற்சாகம் அடைந்துள்ளது.

முதல்கட்டமாக 21 ஆயிரம் கோடி

ரூபாய்க்கு முதலீடுகளைத் திரட்ட

ஐபிஓ பங்குகளை வெளியிட்டுள்ளது.

 

பங்குகள் கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் மே 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி முடிவடைந்தது. பங்கு முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்ஐசி பங்குகள் மீது ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 6 நாள்களில் மொத்தம் 43933.50 கோடி ரூபாய்க்கு பங்குகள் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதாவது வெளியீட்டு அளவை விட இது 2.95 மடங்கு அதிகம் ஆகும்.

 

பொதுப்பங்கு வெளியீட்டில் மொத்தம் 16.20 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முதலீட்டாளர்களிடம் இருந்து 47.82 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீட்டு

விலையைக் காட்டிலும் 60 ரூபாய் தள்ளுபடி

சலுகை வழங்கப்பட்டது. அதனால்

பாலிசிதாரர்களும் போட்டிப்போட்டு

விண்ணப்பித்துள்ளனர். பாலிசிதாரர்களிடம்

இருந்து மட்டும் 6.12 மடங்கு வரை,

அதாவது 12034 கோடி ரூபாய்க்கு

பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

”இந்தியாவின் மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பாலிசிதாரர்கள் அதிகளவில் எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். இதுபோன்ற சிறு நகரங்களில் எல்ஐசி முகவர்கள், பாலிசிதாரர்களுடன் ஆழமான உறவு வைத்திருப்பதையே காட்டுகிறது,” என்கிறார் ஃபன்ட்ஸ் இண்டியா நிறுவனத்தின் சிஇஓ கிரிராஜன் முருகன்.

 

சில்லரை முதலீட்டாளர்கள்

12456 கோடி ரூபாய்க்கு பங்குகள் கோரி

விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட

அளவைக் காட்டிலும் 1.99 மடங்கிற்குக்

கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு பொதுப்பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 45 ரூபாய் தள்ளுபடி சலுகை அளித்து உள்ளது. எல்ஐசி ஊழியர்கள் ஒருபுறம் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினாலும் கூட, மறுபுறம் ஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் 4.4 மடங்கு பங்குகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

 

பங்குத்தரகு முதலீட்டாளர்களிடம் (கியூஐபி) இருந்து 2.83 மடங்கும், அமைப்பு ரீதியற்ற நிறுவன முதலீட்டாளர்களிடம் (என்ஐஐ) இருந்து 2.91 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, அவர்களிடம் இருந்து முறையே 10635 கோடி ரூபாய்க்கும், 8180 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

 

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டில்

ஒரு பங்கின் விலை 902 – 949 ரூபாய் ஆக

நிர்ணயிக்கப்பட்டது. இதன் அதிகபட்ச

விலையில் (949 ரூபாய்) பங்குகள் விற்பனை

செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

பங்கு ஒதுக்கீட்டுப் பணிகள் மே 12ம் தேதி மேற்கொள்ளப்படும். ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு அவர்களின் முதலீட்டுத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு எத்தனை லாட் பங்குகள் ஒதுக்கப்பட்டன என்பது மே 16ம் தேதி தெரிய வரும். மே 17ம் தேதியன்று, எல்ஐசி ஐபிஓ, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது.

 

– ஷேர்கிங்