Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை ஆசிரியர் பிணையில் விடுதலை; பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பதால் பாலியல் புகாரில் சிக்க வைக்கப்பட்ட உதவி பேராசிரியரை பிணையில் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் இன்று (மே 5) உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலையில்

வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக

பணியாற்றி வருபவர் பிரேம்குமார் (32).

இவர் மீது எம்.ஏ., இறுதியாண்டு

படித்து வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த

பட்டியலின மாணவி ஒருவர்,

பாலியல் புகார் அளித்தார்.

 

இது குறித்து, சேலம் சூரமங்கலம்

மகளிர் காவல்நிலைய காவல்துறையினர்

பிரேம்குமார் மீது பாலியல் சீண்டல், மிரட்டல்,

பெண்கள் வன்கொடுமை, சாதி வன்கொடுமை

ஆகிய 4 பிரிவுகளில்

வழக்குப்பதிவு செய்தனர்.

 

இதையடுத்து அவர்,

முன்பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில்

மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த

உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில்

நேரில் சரணடையுமாறும், உரிய நீதிமன்றம்

முன்பிணை மனுவை அதே நாளில்

பரிசீலிக்கும்படியும் உத்தரவிட்டது.

 

அதையடுத்து,

கடந்த ஏப். 22ம் தேதி,

சேலம் மாவட்ட முதன்மை

நீதிமன்றத்தில் பிரேம்குமார் சரணடைந்தார்.

மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு

முன்னிலையில் முன்பிணை மனு

விசாரணைக்கு வந்தது.

 

பிரேம்குமார் தரப்பில்

வழக்கறிஞர் மாசிலாமணி,

புகார் அளித்த மாணவி தரப்பில்

அரசு சிறப்பு வழக்கறிஞர் இசையமுதன்

ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

 

 

வழக்கில் 7 சாட்சிகளிடம்

மட்டுமே விசாரணை நடத்தி

முடிக்கப்பட்டு உள்ளது என்றும்,

இந்த புகார் இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில்

இருப்பதாலும், மெட்டீரியல் விட்னஸ்கள்

மீதான விசாரணை நிலுவையில் இருப்பதாலும்

முன்பிணை மறுக்கப்படுவதாக

அப்போது நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரேம்குமார்,

சேலம் மத்திய சிறையில்

அடைக்கப்பட்டார்.

 

கணவரை பொய் புகாரில்

சிக்க வைத்ததையும், அவருக்கு முன்பிணை

மறுக்கப்பட்டதையும் அறிந்து

நிறைமாத கர்ப்பிணியான பிரேம்குமாரின்

மனைவி உமாமகேஸ்வரி நீதிமன்ற

வளாகத்திலேயே கதறி அழுதார்.

 

பிரேம்குமார் மீது புகார் அளித்த மாணவி,

அவருக்கு முன்பிணை வழங்க அப்போது

ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை.

மேலும், பிரேம்குமார் மீது கூறப்பட்டுள்ள

புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றும்,

அனைத்தும் பொய்யானது என்றும்

புகார்தாரர் உடன் படித்து வரும்

பட்டியலின மாணவிகள் இருவர்

வாக்குமூலமும் அளித்திருந்தனர்.

 

இப்படியான நிலையிலும்,

ஏப். 22ம் தேதி அவருக்கு முன்பிணை

மறுத்து உத்தரவிட்டது அப்போது

பல தரப்பிலும் சலசலப்பை

ஏற்படுத்தியது.

 

 

மீண்டும் பிரேம்குமாருக்கு

பிணை கேட்டு, ஏப். 29ம் தேதி நீதிமன்றத்தை

அணுகியபோது, அன்றைய தினம்

புகார்தாரர் வரவில்லை எனக்கூறி

விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில்,

பிரேம்குமார் பிணை மனு, வியாழக்கிழமை

(மே 5) நீதிபதி குமரகுரு முன்னிலையில்

விசாரணைக்கு வந்தது.

 

மனுதாரர் தரப்பில்

இந்த முறை மூத்த வழக்கறிஞர் ராஜசேகரன்

ஆஜராகி வாதாடினார்.

 

நீதிபதி குமரகுரு,

புகாரளித்த மாணவியிடம் ஏதேனும்

ஆட்சேபனை உள்ளதா? என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி,

”நான் அளித்த புகார் அனைத்தும் உண்மை.

பிரேம்குமாருக்கு பிணை வழங்கக்கூடாது,”

என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

 

மாணவி தரப்பில் ஆஜரான

அரசு சிறப்பு வழக்கறிஞர் இசையமுதன்,

உதவி பேராசிரியர் பிரேம்குமார்,

”புகார்தாரரிடம் தன்னிடம் செல்போனில்

தனியாக பேசு என்றும், பத்தாவது மட்டும்

படித்த ஒருவரை ஏன் திருமணம் செய்தாய்?,”

என்றும் குற்ற நோக்குடன் பேசி இருக்கிறார்.

அதனால் அவருக்கு பிணை

வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

 

பிரேம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராஜசேகரன்,

”ஏற்கனவே உயர்நீதிமன்ற

உத்தரவின்பேரில்தான் மனுதாரர்

இந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பல்கலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகியாக

அவர் சில கருத்துகளை தெரிவித்தார்.

அதை மனதில் வைத்துக்கொண்டு

பல்கலை நிர்வாகம் அவர் மீது பொய்

புகார் அளிக்க வைத்துள்ளது.

 

பல்கலைக்கு எதிராக கருத்து

சொன்னதற்காக ஏற்கனவே பல்கலை

நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

அவர் மீதான பாலியல் புகாரில் உண்மை இல்லை

என்று புகார்தாரர் குறிப்பிட்ட

இரண்டு மாணவிகள் வாக்குமூலம்

அளித்துள்ளனர். மனிதநேய அடிப்படையில்

அவரை பிணையில் விடுதலை

செய்ய வேண்டும்,” என்ற வாதிட்டார்.

 

இது தரப்பு வாதங்களையும்

கேட்டுக்கொண்ட நீதிபதி குமரகுரு,

உதவி பேராசிரியரை பிணையில்

விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அல்லது நாளை (மே 6)

அவர் சேலம் மத்திய சிறையில் இருந்து

விடுதலை செய்யப்படுவார்.

 

பிரேம்குமாரின் மனைவி உமா மகேஸ்வரி,

பிரசவ சிகிச்சைக்காக திருவாரூரில்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதனால் பிரேம்குமாரை திருவாரூரில்

தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும்

நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. எனினும்,

அதுகுறித்த விவரங்கள்

இன்னும் தெரியவில்லை.

 

– பேனாக்காரன்