Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

கொரோனா தொற்று
சமூக பரவலாக மாறும்
அபாயம் இருப்பதால்,
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக
சேலம் மாவட்டத்தில்
நாளை (ஏப். 25), மற்றும்
நாளை மறுநாள் (ஏப். 26)
ஆகிய இரு நாள்களும்
முழுமையான ஊரடங்கு
அமல்படுத்தப்படும் என்று
மாவட்ட ஆட்சியர் ராமன்
தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு, அரசு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.

 

இதற்கிடையே, சேலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஏப். 23) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வகையில் ஏப். 25 மற்றும் 26 ஆகிய இரு நாள்களிலும் சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியது:

 

ஊரடங்கு நாள்களில்
சேலம் மாநகராட்சி,
4 நகராட்சிகள்,
33 பேரூராட்சிகள் மற்றும்
அனைத்து ஊராட்சி பகுதிகள்
என சேலம் மாவட்டத்திற்கு
உட்பட்ட அனைத்து
பகுதிகளிலும் உள்ள
சிறு கடைகள் முதல்
பெரும் கடைகள், மளிகை
கடைகள், உணவகங்கள்,
பேக்கரி கடைகள் உள்ளிட்ட
அனைத்து வகையான
கடைகளும், காய்கறி
சந்தைகள், வார சந்தைகள்,
உழவர் சந்தைகள் உள்பட
மொத்த மற்றும் சில்லரை
விற்பனை கடைகள் முழு
ஊரடங்கின்போது முழுமையாக
மூடப்பட வேண்டும்.

 

ஆடு, மாடு, பன்றி, கோழி,
மீன் உள்ளிட்ட அனைத்து
வகையான இறைச்சி கடைகளும்
சனிக்கிழமை (ஏப். 25),
ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26)
ஆகிய இரு நாள்களிலும்
எக்காரணம் கொண்டும்
திறக்கப்படக் கூடாது.

ஆட்சியர் ராமன்

முழு ஊரடங்கு நாள்களில்
பொதுமக்கள் யாரும் வெளியில்
வர வேண்டாம். இத்தடையை
மீறி காலை, மாலை நேரங்களில்
நடைப்பயணம் மேற்கொள்ளவோ,
வாகனங்களில் வெளியில்
சுற்றுபவர்களோ கண்டறியப்பட்டால்
அவர்கள் மீது வழக்குப்பதிவு
செய்யப்படும். வாகனங்களும்
பறிமுதல் செய்யப்படும்.
வழக்குப்பதிவு செய்யப்படும்
நபர்கள் கண்டிப்பாக
தனிமைப்படுத்தப்பட்டு,
கொரோனா தொற்று குறித்த
மருத்துவப் பரிசோதனை
மேற்கொள்ளப்படும்.

 

வரும் திங்கள்கிழமை
(ஏப். 27) முதல் அத்தியாவசிய
தேவைகளுக்காக வெளியே
வருபவர்கள் கட்டாயம்
முகக்கவசம் அணிய வேண்டும்.
அவ்வாறு முகக்கவசம்
அணியாதவர்கள் கண்டறியப்பட்டால்
அவர்கள் முதல் முறையாக
இருந்தால் 100 ரூபாய் அபராதமும்,
இரண்டாம் முறையாக இருந்தால்
500 ரூபாய் அபராதமும்
விதிக்கப்படும். அதே நபர்
மூன்றாம் முறையாகவும்
முகக்கவசம் அணியாமல்
வந்திருந்தால், தொற்றுநோய்கள்
தடுப்பு சட்டம் 1897,
பிரிவு 2ன் கீழ் கைது
செய்யப்படுவர்.

 

காய்கறிகள், பழங்கள்,
பால் மற்றும் அத்தியாவசிய
பொருள்கள் பொதுமக்களுக்கு
எளிதில் கிடைப்பதற்காக
மாவட்டம் முழுவதும்
200க்கும் மேற்பட்ட நடமாடும்
வாகனங்கள் மூலம் விற்பனை
செய்ய ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன.

 

சேலம் மாவட்டத்தில்
பட்டங்கள் பறக்க விடுவதற்கு
தடை செய்யப்பட்டு உள்ளது.
குழந்தைகள், இளைஞர்கள்,
பெரியவர்கள் உள்ளிட்டோர்
ஊரடங்கு காலத்தில் பட்டங்கள்
பறக்க விடக்கூடாது. பட்டங்கள்
பறக்க விடுவதால் மின்வயரில்
சிக்கி மின்தடை ஏற்படுகிறது.
பட்டம் பறக்க விடும் நபர்கள்
மீதும் கைது நடவடிக்கை
எடுக்கப்படும்.

 

மாவட்டம் முழுவதும் எந்த ஒரு பகுதியிலும் சலூன் கடைகள் திறக்கப்படக்கூடாது. பொதுமக்களும் சலூன் கடைகளிலோ, கிராமங்களில் தனியாகவோ சென்று முடிதிருத்தம், சவரம் செய்து கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா தொற்றுக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுத்திடவும், நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சேலம் மாவட்டத்தில் ஏப். 25, 26 ஆகிய இரு நாள்களிலும் அனைத்து வகையான கடைகள், சந்தைகள் முழுமையாக மூடப்படுவதால் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

இம்முழு ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைப்போர், தேவையின்றி வெளியே நடமாடுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.