Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.

 

அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

 

பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 11, 2018ம் தேதி நடக்கிறது. மாநிலம் முழுவதும் சென்னை, சிதம்பரம், கோவை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, காரைக்குடி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

 

டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகளை இதுவரை மூன்று முறைக்கும் குறைவாக எழுதியவர்களுக்கும், பட்டியல் வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், முதல்நிலைத் தேர்வுக்கு 150 ரூபாய் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

 

விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். தேர்வுக்கட்டணம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் செலுத்தலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலமும் தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். வரும் செப்டம்பர் 9ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள், 11-9-2018.

பதிவுத்துறை சார்பதிவாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகவும், புரபஷனரி அலுவலர் (சிறைத்துறை) பணிக்கு 22 ஆகவும், புரபஷனரி அலுவலர் (சமூக பாதுகாப்புத்துறை) பணிக்கு 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

போட்டித்தேர்வு பொதுத்தமிழ் (பத்தாம் வகுப்பு தரத்திலானது) பகுதியில் இருந்து 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு, உளவியல் பாடப்பிரிவுகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். குறைந்தப்பட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு, www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

முக்கிய தேதிகள்:

 

அறிவிப்பு வெளியீடு: 10-8-2018

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-9-2018

தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11-9-2018

போட்டித்தேர்வு நடக்கும் நாள்: 11-11-2018