(பூவனம்)
மதுரையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தானம் அறக்கட்டளை, ஓர் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை லாபநோக்கமின்றி செய்து வருகிறது. தானம், ஓர் இணை அரசாங்கத்தையே நடத்தி வருகிறது என்பதே சாலப்பொருந்தும்.
இதன் ஓர் அங்கமான சேலம் மண்டல களஞ்சியம், அக்டோபர் 2, 2018ம் தேதியன்று, ‘புதிய வானம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. வறுமை, கந்துவட்டி, மது உள்ளிட்ட சமூகக் கேடுகளில் இருந்தும், சமூக துயரங்களில் இருந்தும் மீண்ட 50 குடும்பத் தலைவிகளின் வெற்றிக்கதைகளை, ‘புதிய வானம்’ நூலில் பதிவு செய்திருக்கிறது, களஞ்சியம்.
வெற்றிக்கதைகளில் இருந்து சில…
சில ஆண்டுகள் முன்புவரையிலும்கூட, விசைத்தறிக் கூடங்களில் வாரம் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரை, இன்றைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வைத்திருக்கிறார் குடும்பத் தலைவி, இலஞ்சியம்.
களஞ்சியம் மூலமாக வங்கிக்கடனுதவி பெற்று, விசைத்தறி இயந்திரங்களை வாங்கி, இன்றைக்கு இலஞ்சியம் குடும்பமே சுயதொழில்முனைவோராக மாறி இருக்கிறது.
”இன்றைக்கு நாங்கள் சாப்பிடும் சோறு, எங்களுக்குக் களஞ்சியம் கொடுத்தது,” என்று உள்ளம் நெகிழ்ந்து சொல்லும் அம்சவள்ளி, சமூகத்தில் இழந்துபோன தன் கணவரின் செல்வாக்கை களஞ்சியம் மீட்டுக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்.
”சுயமாகத் தொழில் பண்ணலாம்னு
முடிவெடுத்தோம்.
களஞ்சியம் மூலமாக
2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம்.
அத்துடன் கொஞ்சம் நகைகளை அடமானம் வெச்சி,
புதிதாக ஹைட்ராலிக் டிராக்டர் வாங்கினோம்.
மரக்கட்டைகளை உடைத்துத் தரும்
பணிகளைச் செய்து வருகிறோம்.
ஒரு மணி நேரத்துக்கு 700 வாடகை வாங்குறோம்.
எல்லா நாளும் வேலை இருக்காது.
ஆனாலும், இதன்மூலமாக
மாசத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேல
சம்பாதிக்கிறோம்,”
என்கிறார் தனலட்சுமி.
இப்படி கறவை மாடு வளர்ப்பு, செங்கல் சூளை, பிளாஸ்டிக் குழாய் விற்பனை, உணவகம், தேநீர் விடுதி, மளிகைக்கடை என அடுப்படியில் இருந்து மீண்டு கணவருடனோ, சுயமாகவோ சுயதொழில் செய்து வரும் பெண்மணிகளைப் பற்றி விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் இளையராஜா.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மா.ப.வாசிமலை, ”சமூகப்புரட்சியைச் செய்வதில் ஆண்களைவிட பெண்களே இரண்டடி முன்வந்து செயல்பட முடியும் என்று சொல்லும் வினோபாவின் கூற்றினை மெய்யாக்கி இருக்கின்றனர் களஞ்சியப் பெண்கள்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒரு பரிமாணத்தை நமக்கு தெளிவாக்குகின்றது. செய்யும் தொழிலை மேம்படுத்தி வெற்றி கண்டவர்கள்; புதிய தொழிலைத் தொடங்கி அதில் மேம்பட்டவர்கள்; புதிய திறமையை வளர்த்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்தியவர்கள் என ஒவ்வொருவரின் அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைத் தருகின்றது,” என பதிவு செய்துள்ளார்.
இருண்மையில் இருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்ந்த… வானத்தையே இலக்காகக்கொண்டு கட்டற்ற வெளியில் சுதந்திரப்பறவையாய் பறக்கின்ற…. சுயதொழில் மூலம் தான் மட்டுமின்றி குடும்பம், சமூகத்திற்கும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற பெண்களின் மனநிலையை அழகாகச் சித்தரிக்கிறது, நாகேந்திரராஜனின் அட்டைப்படம்.
நேர்த்தியான வடிவமைப்புடன், உயர்தர வழுவழுப்பான தாளில், மதுரையைச் சேர்ந்த பட்டறிவு பதிப்பகம் நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
நூல் : புதிய வானம்
வெளியீடு: பட்டறிவு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்
பக்கங்கள்: 120
கிடைக்குமிடங்கள்:
பட்டறிவு பதிப்பகம்
1ஏ, வைத்தியநாதபுரம் கிழக்கு,
கென்னட் குறுக்குத்தெரு,
மதுரை – 625016, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 0452 2302566
மற்றும்
களஞ்சியம்,
15/491, டாக்டர் ராமநாதன் தெரு,
முள்ளுவாடி கேட் அருகில்,
சேலம் – 636001
தொடர்புக்கு: 9943999755, 70944 56666
– பேனாக்காரன்.