Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சோகத்துடன் கூறினர். பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் போனால், இத்தேர்வை எதிர்கொள்வதே சவாலானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் போட்டித்தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மதியம் 1 மணி வரை நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

அதேபோல, வினாத்தாள் தாமதாக வந்தது, மொழி மாறி வந்த வினாத்தாள், பதிவெண் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.

சேலம் மெய்யனூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியும் நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்திற்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் எல்லாமே ஹிந்தி மொழியில் இருந்தது. இதனால் தேர்வு ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் இந்த மையத்திற்கு வரவழைக்கப்பட்டது.

காலை 11.30 மணிக்கு மேல்தான் உரிய வினாத்தாள் கட்டுகள் இம்மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நீட் தேர்வு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. தேர்வு துவங்கிய நேரத்தில் இருந்து மூன்று மணி நேர அவகாசமும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.

 

வினாத்தாள் குறித்து தேர்வர்கள் கூறியது:

அகஸ்டின் (பாலக்கோடு):

நான் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுகிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன.

 

கோகுல்ராஜ் (ஆடையூர்):

உயிரியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. இயற்பியல் பகுதி மிகக் கடினம். இந்த முறை மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நிறைய வினாக்கள் வந்திருந்தன. என்றாலும் சிபிஎஸ்இ பாடப்பகுதியில் இருந்துதான் அதிகளவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

 

நபீனா (ஊத்தங்கரை):

நான் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். நீட் தேர்வுக்காக அரசு வழங்கிய உண்டு உறைவிட பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கடினமாகத்தான் இருக்கும் என்று முன்பே சொன்னார்கள். அதுபோலவே இன்று நடந்த தேர்விலும் இயற்பியல் பகுதி கடினமாக இருந்தது. அந்தப்பகுதியில் மொத்தம் 45 வினாக்கள் கேட்கப்பட்டது.

அதில் 30க்கும் மேற்பட்ட வினாக்கள் கணக்கீடு (பிராப்ளம்) ரீதியாக இருந்தது. அந்த வினாக்களுக்கு எல்லாம் தனியாக தாளில் ‘ஒர்க் அவுட்’ செய்து பார்த்தால்தான் விடையளிக்க முடியும். அதனால் கூடுதல் நேரமும் ஆகியது. மற்ற பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன.

‘மக்-அப்’ மூலம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்பதை நீட் போட்டித்தேர்வு உடைத்திருக்கிறது. அந்த வகையில் நீட் தேர்வை வரவேற்கலாம். அதேநேரம், நீட் தேர்வுக்கான நடைமுறைகளில் குளறுபடிகள் உள்ளதால் அதை முழுமயை£கவும் ஏற்க முடியவில்லை.

 

தமிழரசி (காரிமங்கலம்):

நான் முதல்முறையாக நீட் தேர்வு எழுதினேன். இயற்பியல் பாடப்பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தது. இந்தப் பகுதியில் இருந்து நிறைய கணக்குகள் கேட்கப்பட்டதால் நேரம் போதவில்லை. ஒரு மாதம்தான் நான் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சிக்கு சென்று வந்தேன். கோச்சிங் சென்றால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

 

மதன்குமார் (தர்மபுரி):

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அதிகளவில் வினாக்கள் வந்திருந்தன. அதுமட்டுமின்றி என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் இருந்தும் நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. மாநில பாடத்திட்டத்தில் 25 சதவீத வினாக்கள் வந்திருந்தன. கோச்சிங் சென்று இருந்தால்தான் என்சிஇஆர்டி புத்தக வினாக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். வீட்டில் இருந்தே படிப்பவர்களுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்காது.

 

சோபிகா, ஸ்ரீபிரீத்தி, மஞ்சுபாஷினி (சேலம்):

நாங்கள் இங்கிலீஷ் மீடியத்தில் படித்தோம். நீட் தேர்வுக்கு நாங்கள் கோச்சிங் சென்றோம். கோச்சிங் செல்லாவிட்டால் இத்தேர்வை எதிர்கொள்வதே கடினம்தான். இன்று நடந்த தேர்வில் இயற்பியல் பகுதி மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது.

 

மாணவிக்கு அனுமதி மறுப்பு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி, இன்று காலை 9.30 மணியளவில் சேலம் சவுடேஸ்வரி கல்லூரிக்கு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்தார். அவர் தாமதமாக வந்ததாகக் கூறி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முதலில் மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர்.

பின்னர் அவரிடம் இருந்த ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்தபோது அந்த ஹால்டிக்கெட்டில் இருந்த பதிவெண், 6 இலக்க எண்களுடன் இருந்தது. மேலும், அந்த பதிவெண் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதேநேரம் ஜீவிதா என்ற பெயரில் மற்றொரு மாணவி, சவுடேஸ்வரி கல்லூரியில் தேர்வு எழுதி வருவதும் தெரிய வந்தது. அவர் அவருக்குரிய ஹால் டிக்கெட் வைத்திருந்தார். இதனால் ராசிபுரம் மாணவி ஜீவிதா பெருத்த ஏமாற்றத்துடன் தேர்வு எழுதாமலேயே கண்ணீருடன் திரும்பிச் சென்றார். தான் இந்தத் தேர்வை எழுதியிருந்தால் தன்னால் கண்டிப்பாக டாக்டராகி இருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கண்ணீருடன் கூறினார்.

அவருக்கு ஆதரவாக பெற்றோர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். என்றாலும் அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

 

– பேனாக்காரன்.