Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று (பிப்ரவரி 2, 2018) வெளியாகி இருக்கிறது, ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. திரையரங்குகள் முன்பு, பெரிய அளவில் கட்-அவுட் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது அவருடைய ரசிகர்கள் பட்டாளம்.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, டேனியல், விஜி சந்திரசேகர், ராஜ்குமார், ரமேஷ் திலக் மற்றும் பலர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன்; ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்; படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்; இயக்கம்: ஆறுமுககுமார்.

கதை என்ன?:

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ளது எமசிங்கபுரம். அங்கே, எமகுலம் என்ற பழங்குடியினர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களுக்கு எமதர்மன்தான் குலதெய்வம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் எமனிடம் வாக்கு கேட்டுவிட்டு அதன்படி நடப்பதுதான் எமசிங்கபுரத்தின் வழக்கம்.

அந்த ஊரின் எமகுல தலைவியாக இருக்கிறார் விஜி சந்திரசேகர். அவருடைய மகன் விஜய் சேதுபதிதான் எமகுல இளவரசன். அந்த இன மக்களுக்குள் ஒரு கொள்கை இருக்கிறது.

ஒருபோதும் பெண்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தக் கூடாது என்பது அவர்களின் கோட்பாடு. நேர்மையாக திருடி பிழைக்க வேண்டும் என்பதும் அவர்களின் மற்றொரு கொள்கை. அங்கே பெண்களுக்கு பதிலாக ஆண்கள்தான் கழுத்தில் தாலி கட்டிக்கொள்வது மரபு.

சுழற்சி முறையில் நாட்டுப்புறத்திற்குள் சென்று நேர்மையாக திருடி வரும் பொருள்களை அவர்கள் பங்கிட்டு வாழ்ந்து வருகின்றனர். அந்த சுழற்சி அடிப்படையில் விஜய் சேதுபதியும் அவருடைய நண்பர்களான ராஜ்குமார், ரமேஷ் திலக் ஆகியோருடன் நாட்டுக்குள் நுழைகிறார்.

திருடச் செல்லும் வீட்டில் கதாநாயகி நிஹாரிகாவின் புகைப்படம் இருப்பதை பார்த்தவுடன், ஏற்கனவே செய்து கொடுத்த ஒரு சத்தியத்திற்காக அவரை கடத்திச்செல்ல தீர்மானிக்கிறார் விஜய்சேதுபதி. எல்லோரும் எதிர்பார்த்தபடியே விஜய் சேதுபதி கூட்டாளிகளுடன் கதாநாயகியை தனது இருப்பிடத்திற்கு கடத்திச் சென்று விடுகிறார்.

ஆனால், அங்கே சென்றதும்தான் நிஹாரிகா கல்லூரியில் படித்து வரும் சீனியர் மாணவரான கவுதம் கார்த்திக்கை காதலித்து வருவது தெரிய வருகிறது. காதலி கடத்தப்பட்டதை அறிந்து, கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பர் டேனியலும் எமசிங்கபுரத்திற்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் சில எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

அந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் மீண்டார்களா? கதாநாயகியை மீட்டார்களா? விஜய் சேதுபதி, கதாநாயகியை எதற்காக கடத்தினார்? போன்ற கேள்விகளுக்கு ஜாலியும் கேலியுமான திரைக்கதையால் கலகலப்புடன் சொல்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார்.

எமசிங்கபுரம், எமகுலம், நேர்மையாக திருடுவது, ஆண்களுக்கு தாலி போன்ற அம்சங்களே இது ஒரு ஃபேண்டஸி வகை படம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறது. ரசிகர்களை ஆரம்பக் கட்டத்திலேயே ஈர்த்துக்கொள்வதற்கு இந்த உத்தி பெரிதும் பயன்பட்டிருக்கிறது. படம் முழுக்க ‘லகலக’ ரகம். அதுவும், விஜய்சேதுபதியின் ‘ஒன்லைனர்’ காமெடிகளுக்கு கரவொலி அள்ளுகிறது.

ஓரிடத்தில் விஜய்சேதுபதி தனது பின்னணி குறித்து பேசும் நீளமான வசனத்திற்கு விசில் பறக்கிறது. அந்த வசனங்கள் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறது; வலியையும் உணர வைக்கிறது. வழக்கம்போல் விஜய்சேதுபதி அசத்தல்தான். படத்தில் ஏழெட்டு ‘கெட்-அப்’களில் பின்னியிருக்கிறார். அவருடைய நண்பர்களான ராஜ்குமார், ரமேஷ்திலக் செம காமெடி கூட்டணி.

இவர்கள் அலப்பறை இப்படியென்றால், மற்றொருபுறம் கவுதம் கார்த்திக்கும், அவருடைய நண்பரான டேனியலும் சேர்ந்து செய்கிற அத்தனை அலப்பறைகளும் சிரிப்பலைகளை அள்ளுகிறது. கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே கவுதம் கார்த்திக்கை பாராட்டலாம்.

கவுதமும், டேனியலும் தேடித்தேடிச்சென்று அடி வாங்கும் இடங்கள் எல்லாமே செம ரகளை. டேனியல், தவிர்க்க முடியாத காமெடியனாகி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

எமசிங்கபுரத்தில் எமகுல பெண்ணாக வரும் காயத்ரி, விஜய்சேதுபதியை காதலிக்கிறார். காட்டுக்குள் இருந்து கதாநாயகியை தப்பிக்க வைக்க உதவும்போது ரசிகர்களை ரொம்பவே ஈர்க்கிறார் காயத்ரி. நாயகி நிஹாரிகாவைப் பொருத்தவரை, தன்னை விஜய் சேதுபதி எதற்காக கடத்தினார் என குழப்பத்திலேயே சிக்கித் தவிக்கிறார். நம்பிக்கைக்கு உரிய புதுவரவு எனலாம்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஒரு பாடல் தேறுகிறது. ஆனாலும், பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். எமசிங்கபுரம் காட்டுப்பகுதியில் இரவில் படமாக்கப்பட்ட காட்சிகளும், நகரில் கல்லூரியில் நடக்கும் காட்சிகளையும் வித்தியாசமாக காட்டி கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மர்ம முடிச்சின் பின்னணியில் ஏதோ பெரிய அளவில் ஒன்று இருக்கிறது என்று எதிர்பார்க்க வைத்துவிட்டு சப்புனு முடித்தது மட்டுமே ஒரு குறையாகச் சொல்லலாம். ஆனாலும், வேறு ஒரு கோணத்தில் முயற்சிக்கப்பட்ட முழு நீள காமெடி படம் என்ற வகையில் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கலாம். அறிமுக இயக்குநர் ஆறுமுககுமாருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என நம்பலாம்.

 

– வெண்திரையான்.