Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கியூபா தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.

இறந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1, 2018) அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட்

ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்தா டயஸ்&பாலார்ட். அவருக்குப் பிறந்த ஒரே மகன்தான், இப்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டியஸ்-பாலார்ட். இவர், ‘ஃபிடலிட்டோ’ என்றும் அந்நாட்டு மக்கள் அழைத்து வந்தனர்.

ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.

கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘கிரான்மா’, ”கடந்த பல மாதங்கங்களாகவே டியஸ்-பாலார்ட் மன அழுத்தத்திற்கான சிகிச்சையை பெற்று வந்தார்,” என்று தெரிவித்துள்ளது.

தாயாருடன்…

இது மட்டுமின்றி, மருத்துவமனையில் புறநோயாளியாக அண்மையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அந்த நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

டியஸ்-பாலார்ட், கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.

புரட்சியாளரும் மற்றும் உலகிலேயே அதிக காலம் அரசியல் பணியாற்றியவருமான இவருடைய தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு, தனது 90வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.