கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பொறி வைத்துப்பிடித்து, கைது செய்தனர்.
கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், கணபதி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் உறுப்புக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு சுரேஷ் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அந்த பணியில் சேர வேண்டுமானால், தனக்கு ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி பேரம் பேசியுள்ளார். இறுதியில், 30 லட்சம் ரூபாய்க்கு பேரம் முடிந்துள்ளது.
இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், மீதத்தொகையை பின்தேதியிட்ட காசோலைகளாகவும் வழங்குமாறும் துணைவேந்தர் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, லஞ்சம் கொடுத்து வேலையைப் பெற விரும்பாத சுரேஷ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறையினரின் வியூகங்கள்படி, இன்று ரொக்கம் மற்றும் காசோலைகளுடன் சுரேஷ், துணைவேந்தர் கணபதியை பார்க்க அவருடையை வீட்டிற்குச் சென்றார்.
அவரிடம் காசோலைகளைக் கொடுக்கும்போது, ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் துணைவேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இன்று காலை 9 மணியில் இருந்து இந்த விசாரணை நடந்து வருகிறது. பணியில் இருக்கும் துணைவேந்தர் ஒருவர், லஞ்ச வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த நிகழ்வால், உயர்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
LAST UPDATE: முறைகேடான பணி நியமனங்களில் உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
துணை வேந்தர் கணபதிக்கு, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டிலும் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.