Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

தொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன.

இயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட முற்றாக குணப்படுத்தி விட முடியும்; அந்தளவில் இந்த தொழில்நுட்பம் வரவேற்கக் கூடியதுதான் என்றனர்.

ஆனால், குளோனிங் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடியில்லை.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் நரம்பியல் அறிவியல் தொழிநுட்ப மைய ஆய்வகம், குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டு குரங்கு குட்டிகளை உருவாக்கியுள்ளது.

சோங் சோங், ஹூவா ஹூவா என அவற்றுக்குப் பெயரிடப்பட்டு உள்ளன. சோங் சோங், 8 வாரங்களுக்கு முன்பும், ஹூவா ஹூவா 6 வாரங்களுக்கு முன்பும் இந்த பூவுலகுக்கு வந்த விருந்தினர்கள்.

குளோனிங் என்பது கலவியில்லா இனப்பெருக்கம் என்று வரையறுத்து விடலாம். ஆனாலும், புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலான கோட்பாடுகளைக் கொண்டதன்று. கம்ப சூத்திரமோ, கமல்ஹாசனின் ட்வீட் போன்ற அளவிற்கோ கூட கடினமானது இல்லை.

ஜீன் குளோனிங், இனப்பெருக்க குளோனிங், சிகிச்சைமுறை குளோனிங் என மூன்று வழிகளில் இந்த தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. ஜீன் குளோனிங் என்பது ஜீன்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளை மட்டும் நகலெடுப்பது. இனப்பெருக்க குளோனிங் என்பது ஒரு விலங்கை அப்படியே நகலெடுக்கும் வேலை. சிகிச்சைமுறை குளோனிங் என்பதுதான் இப்போது பரவலாக நடைமுறையில் உள்ளன.

இனப்பெருக்க குளோனிங் குறித்து அறிவியலாளர்கள் இப்படிச் சொல்கிறார்கள்:

குளோனிங் செய்யப்பட வேண்டிய விலங்கில் இருந்து இரண்டு செல்கள் எடுக்கப்படும். ஒன்று, முதிர்ந்த சோமாட்டிக் மரபணு (Matured Somatic Cell). இன்னொன்று, டிஎன்ஏ மூலக்கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் (DNA removed Egg cell).

இதில் சோமாட்டிக் உயிரணுவில் இருக்கும் டிஎன்ஏ மூலக்கூறுகள் முட்டை செல்லில் செலுத்தப்படும். இது, மரபணு ஒத்த தாய் விலங்கினுள் உட்செலுத்தப்படும். அந்த விலங்கு பிரசவிக்கும் குட்டி, இரண்டு செல்கள் தானமாக வழங்கிய விலங்கைப் போல் இருக்கும். இப்படி விவரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குளோனிங் குரங்குகள் உருவாக்கப்பட்ட பின்னர், இதே தொழில்நுட்பத்தில் மனிதனை உருவாக்கும் முயற்சியிலும் சீனா ஈடுபடக்கூடும் என்று பல தரப்பிலும் ஒருவித அச்சம் கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் சீனாவுக்கு குளோனிங் தொழிற்சாலை என்ற பெயரும் உண்டே.

லண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது மற்றும் திறனற்றது என்கிறார்.

அதேநேரம், கெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்துக் கொள்ள பயன்படும் என்கிறார். ஆனாலும், குளோனிங் குறித்த நெறிமுறைகளை வடிவமைப்பதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது என்றும் சொல்கிறார்.

‘புதிய அகராதி’ திங்கள் இதழ் தொடங்கியபோது முதல் இதழில், ‘அதிகரித்து வரும் மலட்டுத்தன்மை’ குறித்து ஒரு கட் டுரை எழுதியிருந்தேன். அதுதான், முகப்புக் கட்டுரையும்கூட. ‘இக்ஸி’ முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம்தான் மலட்டுத்தன்மைக்கு தீர்வு என்பதாக முடித்திருந்தேன். அப்போது மருத்துவர்களிடம் வழக்கம்போல் ஆர்வ க்கோளாறில், ”ஐக்யூ அதிமாக உள்ள ஓர் ஆண் மற்றும் பெண்ணின் உயிரணுக்களை வைத்து ‘இக்ஸி’ முறையில் ஒரு டிஸைன் பேபியை உருவாக்க முடியாதா?” என்று கேட்டேன்.

அதற்கு மருத்துவர்கள் என்னை ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஒருவேளை என்னிடம் இருந்து அத்தகைய கேள்வியை எதிர்பார்க்கவில்லையே என்னவோ. ஆனால், டிஸைன் பேபியை உருவாக்குவது இயற்கைக்கு முரணானது அல்லது மனித குலத்திற்கு ஆபத்தானதும்கூட என்று வெவ்வேறு கருத்துகளைச் சொன்னார்கள்.

குளோனிங் குரங்குகள் உருவாக்கத்தின் பின்னரும் அதேபோன்ற அச்சம் சமூக செயல்பாட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் போயாலைஃப் ஆய்வகம்கூட, குளோனிங் மனிதனை உருவாக்கும் சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.

வரட்டும் பார்க்கலாம்.

 

– பேனாக்காரன்.

Leave a Reply