Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

மேட்டூர் அணை
இன்று (செப். 7)
மதியம் 1.09 மணியளவில்
முழு கொள்ளளவை
எட்டியது. 43வது முறையாக
அணை முழுவதும்
நிரம்பியுள்ளது விவசாயிகள்,
பொதுமக்களிடையே
மகிழ்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த அணை நிரம்பினால், காவிரி படுகையையொட்டி உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனினும் இந்த அணையின் நீர் இருப்பு என்பது, கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர் கொள்ளளவைப் பொருத்தும், அந்த மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தும் அமைந்துள்ளது.

இந்நிலையில்,
கடந்த ஆகஸ்ட் மாதம்
13ம் தேதி நிலவரப்படி,
மேட்டூர் அணை 100 அடியை
எட்டியது. அதையடுத்து,
டெல்டா பாசனத்திற்காக
அணையை, முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
அன்று திறந்து வைத்தார்.
அடுத்த ஓரிரு நாள்களில்
அணை முற்றிலும் நிரம்பி
விடும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், கர்நாடகா
மாநிலத்தில் மழைப்பொழிவு
குறைந்தது.

 

ஒருகட்டத்தில் அணைக்கு நீர் வரத்தைக் காட்டிலும், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், இந்த ஆண்டு அணை முழுவதும் நிரம்புமா என்ற பேச்சும் எழுந்தது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின. அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது அதிகரித்துள்ளது.

தற்போது கபினியில் இருந்து வினாடிக்கு 22692 கனஅடி வீதமும், கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 52807 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. அங்கிருந்து ஒகேனக்கல் காவிரி வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இன்று (செப். 7) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75499 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.34 அடியாக இருந்தது.

 

இந்நிலையில்,
மதியம் 1.09 மணிக்கு,
மேட்டூர் அணை அதன்
முழு கொள்ளளவான
120 அடியை எட்டியது.
43வது முறையாக அணை
முழு கொள்ளளவை
எட்டியுள்ளது. அணையின்
நீர் இருப்பு 93.4 டிஎம்சி
ஆக உள்ளது. அணை
முழுவதும் நிரம்பியதால்
கடல்போல் காட்சி அளித்தது.
காலை நிலவரப்படி
அணையில் இருந்து
பாசனத்திற்காக 32500
கனஅடி வீதமும்,
கிழக்கு மேற்கு கால்வாய்
வழியாக 700 கனஅடி
வீதமும் தண்ணீர்
திறந்து விடப்பட்டு
இருந்தது.

தற்போது அணை
முழுவதும் நிரம்பியுள்ள
நிலையில், 16 கண் மதகுகள்
வழியாகவும் தண்ணீர்
வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், அணைக்கு வரும்
மொத்த நீருமே காவிரியில்
திறந்து விடப்படும் எனவும்
அதிகாரிகள் தரப்பில்
கூறப்பட்டது.

 

முற்றிலும் நிரம்பிய அணையை, ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அணைக்கரை ஓரம் நின்று கொண்டு அலைபேசிகளில் சுயபடம் எடுக்கவோ, கரையோரப் பகுதிகளில் குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அணையையொட்டி தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த குடும்பத்தினரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக நேற்று இரவே தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.