Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

சந்திரயான் விண்கலம்
நிலவில் கால் பதித்ததை
கொண்டாடும் அதே இந்திய
ஒன்றியத்தில்தான்,
இன்னும் மலக்குழிகளில்
மனிதர்களை இறக்கி
விடப்படும் அவலங்களும்
தொடர்கின்றன என்ற
கூக்குரல்களும்
ஓங்கி ஒலிக்கத்
தொடங்கி இருக்கின்றன.

 

இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis – NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

 

ஏனெனில், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இறக்கும் சம்பவங்களை, எந்த ஒரு மாநில அரசும் முழுமையாக இந்திய அரசுக்கு தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. சொல்லப்போனால் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களை நம் அரசுகளோ, பொதுமக்களோ சக மனிதனாகவே பார்ப்பதில்லை என்பதுதான் ஆகப்பெரிய சோகம்.

 

ஊரையே தூய்மைப்படுத்தும் அத்தகைய தொழிலாளர்களைப் பற்றிய பிரக்ஞை எவர்க்குமே இல்லை. வேலை முடிந்தால், அவர்களுக்கான கூலியைக் கொடுத்து விடுவதோடு எல்லா கணக்குகளும் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதிக் கொள்கிறோம்.

கடந்த பிப்ரவரி மாதம், உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி, ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை நீரால் கழுவிவிட்டு வணங்கியது, அப்போது ட்விட்டர் தளத்தில் ரொம்பவே பிரபலமானது. நாம்கூட ‘புதிய அகராதி’ இணைய இதழில், ‘கால்களைக் கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். மனிதக்கழிவு அகற்றும் மனிதர்களின் துயரங்களை வெளிக்கொணர்வதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதிலும் ‘புதிய அகராதி’ தனித்த அக்கறையுடன் செயல்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை தொடர்ந்து இங்கே பதிவிட்டு வருகிறோம்.

 

இந்நிலையில், தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையமானது, கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களை தடை செய்வதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது. அதற்காக நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம், 1993ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 817 சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கிடைத்தது.

 

அதன்பின், கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், 1993ம் ஆண்டில் இருந்து பலியான சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

 

தேசிய துப்புரவு
தொழிலாளர்கள் ஆணையம்
நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்த ஓர் அறிக்கையில்,
‘தூய்மை இந்தியா திட்டத்தின்
கீழ் இந்திய அரசு,
கழிப்பறைகளைக் கட்டுவதில்
முனைப்பு காட்டுகிறதே
தவிர, மனிதக்கழிவு
அகற்றும் தொழிலாளர்களை
தடை செய்வதிலோ,
அவர்களுக்கு மறுவாழ்வு
அளிப்பதிலே கவனம்
செலுத்தவில்லை,’ என்று
பட்டவர்த்தனமாக பதிவு
செய்திருந்தது. நாட்டிலேயே
இந்திய ரயில்வே துறைதான்,
மனிதக்கழிவு அகற்றும்
தொழிலாளர்களை அதிகளவில்
கொண்டிருப்பதாகவும்
குட்டு வைத்திருந்தது.

 

சில வாரங்களுக்கு முன்,
மக்களவையில் இந்திய
ஒன்றியத்தின் சமூகநீதி
மற்றும் அதிகாரமளித்தல்
அமைச்சகம், ‘மனிதக்கழிவு
அகற்றும் பணிகளில்
மனிதர்களை ஈடுபடுத்திய
குற்றத்திற்காக இதுவரை
ஒருவரும்
தண்டிக்கப்படவில்லை,’
என்று பகிரங்கமாக
ஒப்புக்கொண்டது.

 

இதற்கிடையே, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம், 1993ல் இருந்து பலியான 817 சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் என்பதும்கூட நாழு முழுவதும் சேகரிக்கப்பட்ட தகவல் அல்ல; அந்த பலிகள் 20 மாநிலங்களில் நடந்தவை என்றும் தெரிவித்து இருக்கிறது.

 

அந்த ஆணைய
தரவுகளின்படி, அதிகபட்சமாக
தமிழ்நாட்டில் 210 பேரும்,
மோடியின் குஜராத்
மாநிலத்தில் 156 பேரும்,
உ.பி.,யில் 77,
ஹரியானாவில் 70 பேரும்
பலியாகி உள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில்
பலியான துப்புரவு
தொழிலாளர்களில் 75 சதவீதம்
குடும்பத்தினருக்கு
10 லட்சம் ரூபாய் நிவாரண
உதவி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, குஜராத்தில்
30 சதவீத குடும்பங்களுக்கு
இந்த நிவாரண
நிதி தரப்பட்டுள்ளது.

 

மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளர்கள் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம், 2013ன் படி, சாக்கடை அள்ளும் தொழிளாளர்கள் விஷ வாயு தாக்கி அல்லது பணியின்போது வேறு விபத்துகளில் இறக்க நேரிட்டால் அதற்கு அந்தந்த மாநில அரசு முகமைகள், உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்களே கூடுதல் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கும்படி, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் சலா (Zala), சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் மீது ரொம்பவே கரிசனம் காட்டுகிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. அண்மையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘சாக்கடைக்குழிகள், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை முற்றிலும் இயந்திரமயமாக்கல் செய்ய வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகள் முதலீடு செய்யப்படாத வரை சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் மரணங்கள் நிறுத்தப்படாது.

 

அதேநேரம், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு சாக்கடைக்குழிக்குள் தொழிலாளர்கள் இறங்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. என்றாலும், அத்தகைய பணிகளில் ஒரு தலித் தொழிலாளி ஏன் முதலில் இறங்க வேண்டும்?,’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கடந்த 2017 முதல், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் குறித்த, சில மாநிலங்களில் அவ்வப்போது வெளியாகும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது, ஒவ்வோர் ஐந்து நாளுக்கும் ஒரு துப்புரவு தொழிலாளி விஷ வாயு தாக்கியோ அல்லது இன்னபிற விபத்துகள் மூலமோ பணியின்போது இறக்கிறார் என்று கூறியுள்ளது.

 

எனினும், இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற துல்லியமான தரவுகள் நம்மிடம் இல்லை என்பதுதான் வேடிக்கையே. 13 மாநிலங்களில் 12742 மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற ஒரு புள்ளிவிவரம் இருக்கிறது.

 

அதேநேரம், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாடு முழுவதும் 740078 வீடுகளில் மனிதக்கழிவுகளை மலம் அள்ளும் தொழிலாளர்களை வைத்துதான் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

 

அதேநேரம், 2011ம் ஆண்டின், சாதிவாரியான சமூக பொருளாதார கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 182505 குடும்பங்கள் மனிதக்கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நிலவில் மனிதர்களை
இறக்கிவிடும் தொழில்நுட்பத்தில்
இந்தியா வளர்ந்துவிட்டது;
சந்திரயான் நிலவில்
கால் பதித்த தருணத்தைக்
கொண்டாடும் அதேவேளையில்,
மலக்குழிகளுக்குள் இறங்கும்
மனிதர்களை மீட்பதற்கான
தொழில்நுட்பம் மட்டும்
இல்லாதிருப்பதுதான்
இந்த நாட்டை பீடித்திருக்கும்
ஆகப்பெரும் கேடுகளில் ஒன்று.
ஏழைத்தாயின் மகன்
இவர்களின் துயரங்களையும்
களைவாராக.

 

– பேனாக்காரன்.