Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

காக்கி உடைக்குள் இப்படியும் ஒரு கவிஞனா? என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார், மதுரையைச் சேர்ந்த முனைவர் ஆ.மணிவண்ணன். ‘வான் தொட்டில்‘ கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றுகிறார். நூல் வெளியீடு, வானதி பதிப்பகம்.

காவல்துறை அதிகாரி என்பதால் துறை சார்ந்த முன்னாள், இந்நாள் உயரதிகாரிகளிடம் வாழ்த்துரை பெற்றிருக்கிறார். டிஜிபி கி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து மடலில், ‘பகலில் காவலராகவும் இரவில் கவிஞராகவும் பரிணமித்திருக்கிறார்’ என சுட்டியுள்ளார்.

‘வான் தொட்டில்’ நூல், அறம், சட்டத்தை மதித்தல், குடும்பம், கடமை, ஆன்மீகம் ஆகியவற்றைப் பேசுகிறது. செலவில்லாமல் கிடைப்பதும், மதிக்கப்படாமலே போவதும் எதுவென்றால் இரண்டுக்கும் ஒன்றேதான் பதிலாக அமையும். அது, அறிவுரைகள். பொருள் சார்ந்து இயங்கும் இன்றைய உலகில் அறிவுரைகள் சொல்பவர்கள்கூட அருகிவிட்டனர். தான் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக இளைஞர்களுக்கும், வெகுசனங்களுக்கும் இந்த நூல் வாயிலாக நிறையவே போதிக்கிறார், நூலாசிரியர். பல இடங்களில் அனுபவங்கள் பேசுகின்றன. சில இடங்களில், துறை ரீதியாக தனக்கு ஏற்பட்ட அநீதிகளை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் என்றே உணர முடிகிறது.

”அரசே
சில தனியார் மருத்துவமனைகள் முன்பு
பதிவு அலுவலகம் துவக்கவும்;
எங்கள் சொத்தை
அந்த மருத்துவமனைகளுக்கு
எழுதிக்கொடுத்து
சொந்தங்களைக் காப்பாற்றுகிறோம்”

என தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையை ஒருவித எள்ளலுடன் பாடியிருக்கிறார்.

ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் போலிருக்கிறது. எனினும், கடவுளும் ஓரவஞ்சனை செய்கிறார் என்பதை,

”ஆயிரத்தெட்டு தடவை
போற்றிப்பாடிய
என்னை விடுத்து
‘ஆடி’ காரில்
வந்தவரை முதலில்
அழைத்தவரே

என்னைவிட உனக்காக
அலகு குத்தி
பறவைக் காவடியில்
தொங்கிய பக்தனை அழைத்திருந்தால்
உன்னைப் பாராட்டி இருப்பேன்”

என்று முறையிடுகிறார். ‘கால்கடுக்கப் / பொது தரிசனத்தில்/ நிற்கும் எங்களைக் / காப்பாற்று’ என்று சமநீதி கோருகிறார். ஆசாமிகள் செய்யும் குற்றங்களுக்கு சாமிதான் என்ன செய்யும்?

சில இடங்களில் மிக வித்தியாசமான கோணங்களிலும் சிந்தித்து எழுதியிருக்கிறார். உதாரணமாக, ‘அங்காடி பெண்கள்’ என்ற கவிதையில்,

”குடும்பச் சூழ்நிலையில்
சில தங்கங்கள்
நகைக்கடைகளில்
பணிப்பெண்களாய்…”

என பெண் பிள்ளைகள் பற்றி நயமாகச் சொல்கிறார். கவிதை நயத்திற்கு இன்னோர் உதாரணம்…

”நீர் சிற்பியால்
செதுக்கப்பட்ட
சிற்பங்கள்
கூழாங்கற்கள்”

என்கிறார். சக அதிகாரி ஒருவரின் தந்தைக்கான இரங்கற்பாவில்,

”அந்தக் குடை
தாங்கிய மழையின் அளவு
நமக்குத் தெரியாது
இடிதாங்கியாய்
தாங்கிய
இடியும், மின்னலும்
நாமறிய நியாயமில்லை”

என்கிறார். இந்த வரிகளை வாசிக்கும் ஒவ்வொருவரின் நினைவலைகளிலும் ஒரு கணமேனும் அப்பாக்கள் வந்து செல்வார்கள். கவிதைகளுக்கான படங்களை கூகுளில் இருந்து எடுக்காமல், ஓவியரைக் கொண்டு வரைந்து பதிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நூல்: வான் தொட்டில்
பக்கம்: 192 விலை: ரூ.125.
தொடர்புக்கு: 9443208519.

-பேனாக்காரன்.
E-mail: selaya80@gmail.com
………………..