Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப். 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார்.

இதையடுத்து, உள்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டுமெனில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஏறக்குறைய ஒரு மாதம் ஆன நிலையில், அதைப்பற்றி ஆளும் தரப்பு கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக, ‘ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே? செய்வீர்களா?’ என்ற தலைப்பில் கடந்த 16ம் தேதியன்று, ‘புதிய அகராதி’ இணைய ஊடகத்தில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நாங்கள் யாரும் அம்மாவை நேரில் பார்க்கவே இல்லை. இட்லியும் சாப்பிடவில்ல. சட்னியும் சாப்பிடவில்லை’ பகிரங்கமாக திரியை கொளுத்திப் போட்டார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்ததுடன், சிபிஐ விசாரணை தேவை என்றும் கூறினர். ஆனால் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை முதல்வர் உள்பட ஆளும் தரப்பில் ஒருவரும் ரசிக்கவில்லை.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார். எனினும், விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணையை ஏற்க மாட்டோம். சிபிஐ போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி

தேவைப்பட்டால் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிடுவோம் என்று தினகரன் தரப்பினர் சொல்லி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்தால், அதில் பிரதமர், ஆளுநர், எய்மஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே உள்பட அனைவருமே குற்றவாளிகளாக்கப்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழலில் விசாரணை ஆணையம் வெறும் பெயரளவுக்கு மட்டுமே இயங்கும். அல்லது பெயரளவிலான அறிக்கையை சமர்ப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply