Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுவே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். அதில் உங்களிடம் உள்ள கைபேசிகளும் (மொபைல் போன்) விதிவிலக்கு அல்ல. நான், உங்களை அச்சமூட்டுவதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால், உலகளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அடிமைகளைப் பற்றியே சொல்ல விழைகிறேன்.

 

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கைபேசிகளின் வழியே, உலகத்தை உங்களின் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. ஆனால், அதுவே உங்களை சக மனிதர்களிடம் இருந்து பல மைல் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தூண்டப்படும் விளம்பரங்கள், பெருகி வரும் நுகர்வு கலாச்சாரம், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் இன்றைக்கு குறைந்தபட்சம் நான்கு  மொபைல் ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன.

இதன் விளைவு, குடும்ப உறுப்பினர்களேகூட வாட்ஸ்அப் வழியே உரையாடிக் கொள்ளும் அவலத்தை உருவாக்கி இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடுவதையும் கிட்டத்தட்ட நிறுத்தி வைத்திருக்கின்றன கைபேசிகள்.

என்னுடைய அண்மைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு, அப்படியே அவருடைய தங்கையின் திருமணம் பற்றி சென்றது. தங்கை என்ன படித்திருக்கிறார்? என்று கேட்டுவிட்டேன். அவ்வளவுதான் அந்த நண்பர், பதில் சொல்ல ரொம்பவே திணறிப்போனார். ஏனெனில் தங்கை என்ன படித்திருக்கிறார் என்று அவர £ல் சொல்லத் தெரியவில்லை. உடன்பிறந்த தங்கை, ஒரே வீட்டில் வசிக்கும் ஒரு நபரைப்பற்றி அவர் தெரிந்து வைத்திருந்த தகவல் அந்தளவுதான் இருந்தது. அதேநேரம் அவர் கைபேசியில், யூடியூப் வழியே பாலிவுட் பாடல்கள் முதல் அண்மைய ‘பிகில்’ படம் வரை ரசித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த உதாரணத்தை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு கைபேசிகள் சக மனிதர்களுடனான நேசத்தையும், உரையாடலையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன என்பதற்காகவே சொல்கிறேன்.

தொழில்நுட்பம் மற்றும் இணைய அடிமை குறைபாடுகள் இன்றைக்கு உலகளவில் பெரும் குறைபாடாக உருவெடுத்திருக்கிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது இந்தியர்கள்தான். இணைய அடிமை குறைபாடுகள் போன்ற வரையறை செய்யப்பட்ட நோய்கள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன.

இன்னும் ஒரு நண்பர் இருக்கிறார். கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். அவரோ கண்கள் வீங்கிப்போகும் அளவுக்கு வாட்ஸப் தளத்தில் உரையாடிக் கொண்டே இருப்பார். மற்றொரு பேராசிரியர் நண்பரோ, தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கைபேசியும் கையுமாகவே நடமாடுவார். உடனே நீங்கள், கல்லூரியில் பாடம் நடத்தும்போது அந்த பேராசிரியர் என்ன செய்வார் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

கைபேசிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும், கைபேசி இல்லாதபோது ஒருவித பதற்றம், பீதி, அச்சம், சமூகத்தின் மீதான பயம் போன்ற குணங்கள் தென்பட்டால் அது நிச்சயமாக ‘நோமோபோபியா’ குறைபாடாக இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம். அவ்வளவு ஏன்… கைபேசியை சற்று நேரம் பிரிந்து இருந்தாலோ அல்லது நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோகூட உடனடியாக உடலில் ஒருவித நடுக்கம், அதிகப்படியான வியர்வை சுரப்பு, கிளர்ச்சி, மிகையான இருதயத்துடிப்பு, சுவாசித்தலில் சீரற்ற நிலை ஆகியவையும் ஏற்படும் என்கிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாமோ நோமோபோபியாவின் அறிகுறிகள்தான் என்கிறது, இந்திய குடும்ப நல மருத்துவர்களுக்கான இதழ்.

‘நோ மொபைல் போன் போபியா’ (NO MObile PHOne phoBIA) என்ற சொல்லின் சுருக்கமான வடிவம்தான், ‘நோமோபோபியா’ என்கிறார் மருத்துவர் சுதீப் பட்டாச்சார்யா.

”547 மருத்துவ
மாணவர்களிடம் நடத்திய
ஆய்வில், 23 சதவீதம்
பேருக்கு நோமோபோபியா
குறைபாடு இருப்பது
கண்டறியப்பட்டு உள்ளது.
64 சதவீதம் பேர்,
நோமோபோபியா
குறைபாட்டை நெருங்கிக்
கொண்டிருப்பதும்
தெரிய வந்தது.
77 சதவீத மருத்துவ
மாணவர்கள் ஒரு
நாளைக்கு சராசரியாக
35 முறை தங்களது
கைபேசிகளில் அழைப்பு,
அல்லது குறுந்தகவல்கள்
ஏதேனும் வந்திருக்கிறதா
என சோதித்துப் பார்த்து
விடுவதும் ஆய்வில்
தெரிய வந்துள்ளது,’
என்கிறார்
சுதீப் பட்டாச்சார்யா.

யதார்த்த உலகில் இருந்து
மெய்நிகர் உலகத்திற்குள்
அதிகமாக சஞ்சாரம்
செய்யத் தொடங்கியதன்
விளைவுதான் இதுபோன்ற
புதுப்புது குறைபாடுகள்
தோன்றக் காரணமாகின்றன.
தங்கள் கைபேசியில்
அழைப்பு வராதபோதும்,
வந்ததுபோன்ற மாயையை
உருவாக்குகிறது.
உங்களுடன் பேசும்
ஒருவர், அழைப்போ,
குறுந்தகவலோ வராதபோதும்
அடிக்கடி அவருடைய
கைபேசியை எடுத்துப்
பார்த்தபடி இருப்பதை
நீங்களும் கவனித்திருக்கலாம்.
அல்லது, உங்கள் கைபேசி
அழைப்பு மணி அடிக்கும்போது
உங்களுடன் இருப்பவரும்
தன் கைபேசியை எடுத்துப்
பார்த்திருப்பதையும்
அவதானித்திருக்கலாம்.
அதெல்லாமே நோமோபோபியா
குறைபாட்டின்
அடையாளங்கள்தான்.

உலகளவில் இந்தக்
குறைபாடு இருப்பினும்,
இந்தியாவில் ஆண்களில்
58 சதவீதம் பேருக்கும்,
பெண்களில் 47 சதவீதம் பேருக்கும்
நோமோபோபியா குறைபாடு
இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டு
உள்ளதாக கூறுகிறது,
இந்திய குடும்பநல
மருத்துவர்களுக்கான இதழ்.

இன்னும் ஒரு பிரிவினர், தன் வீட்டில் காலையில் எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான நிகழ்வுகளை வாட்ஸ்அப், பேஸ்புக் பக்கங்களில் குறிப்புகளாகவோ, தன் முகத்தையோ பதிவேற்றம் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு காலத்தில் வீட்டில் டைரியில் ரகசியமாக எழுதப்பட்டவை எல்லாமே இன்றைக்கு பட்டவர்த்தனமாக பேஸ்புக்கில் பதிவிடும் நிலைக்கு தமிழ்ச்சமூகமும் மாறியிருக்கிறது. மனைவிக்கு முத்தமிடும் காட்சியைக்கூட அப்பட்டமாக பதிவிடுகிறார்கள். அத்தகைய போக்கு சந்தேகமே இல்லாமல், பேஸ்புக் அடிமை அல்லது நோமோபோபியா குறைபாடுதான் என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.

இக்குறைபாடு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைந்து காணப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கைபேசிகளை தொடர்புபடுத்தி
இன்னும் சில குறைபாடுகளை
மருத்துவ உலகம்
கண்டறிந்திருக்கிறது.
அதாவது, ‘டெக்ஸ்டாபெர்னியா’
(Textaphrenia). கைபேசிகளில்
குறுந்தகவல்கள், வாட்ஸ்அப்களில்
தகவல்கள் எதுவும் வராதபோதும்
வந்ததுபோன்ற தோற்றத்தை
ஏற்படுத்தும் குறைபாடுதான்,
டெக்ஸ்டோபெர்னியா. ஒருவேளை,
அவர்களுக்கு நாள் முழுவதும்
ஒரு பயல்களும் குறுந்தகவல்கள்
அனுப்பவில்லை எனில்
அத்தகைய குறைபாடு
உள்ளவர்களும்
ஒருவித பயமும், படபடப்பும்
கொள்வார்களாம்.

என்னுடைய நண்பர் ஒருவர் மயக்கவியல் மருத்துவர். அவர் சொல்வார், ”பாஸ்… முன்னாடிலாம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் பரிசோதித்துவிட்டு டாக்டர்கள் கூறும் ஆலோசனைக்கு ஏற்ப நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் சிகிச்சைக்கு வருபவர்களே கூகுளில் எதையாவது அரையும்குறையுமாக படித்துவிட்டு, அவர்களே இந்த நோயாக இருக்கலாமா? அல்லது அதுவாக இருக்கலாமா? இந்த நோய்க்கு இந்த மருந்துதானே கொடுக்க வேண்டும் என்று பிதற்றுவது அதிகரித்து விட்டது. நாங்கள் அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது,” என்று புலம்பினார்.

உண்மையில்,
கூகுள் தேடியந்திரத்தின்
ஊடாக சில மருத்துவ
அறிகுறிகளைப் படித்துவிட்டு,
அது தனக்கும் வந்துவிட்டதாக
நினைப்பதும்கூட ஒருவித
குறைபாடுதான் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
அதற்கு மருத்துவ உலகம்
வைத்த பெயர், சைபர்காண்டிரியா (Cyberchondria)
அல்லது கம்ப்யூகாண்டிரியா
என்றும் சொல்லாம்.

ஆக, நான் திரும்பவும் முதல் பத்தியில் சொன்ன சங்கதிக்கே மீண்டும் வருகிறேன். எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ அதுவே, உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். கைபேசிகள் எத்தகைய ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என கருதுகிறேன்.

நோமோபோபியா போன்ற இணைய அடிமை குறைபாடுகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கவும், நம்மை மீளுருவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. இதுபோன்ற குறைபாடுகளில் இருந்து விடுபட, மனிதர்களுடனான நேரடி உரையாடலை வளர்த்துக் கொள்வதே ஆகச்சிறந்த தீர்வாகவும் அமையும். சக மனிதர்களுடன் கைகுலுக்குவதில் தொடங்கி அவர்களை நாடிச்சென்று பேசுவதும், விவாதிப்பதன் மூலம் நம்மை சக்திமிக்கவராக மீட்டெடுத்து விட முடியும்.

நம் குழந்தைகளை வீடியோ கேம்களில் இருந்து விடுவித்து கோயில் விழாக்கள், சுற்றுலா தலங்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதில் மூலம் இளைய தலைமுறையினரையும் நோமோபோபியா பாதிப்பில் இருந்து மீட்பதோடு, அவர்களை புதிய சிந்தனைக்குள் ஆட்படுத்த முடியும். இப்படி செலவில்லாத வழிமுறைகள் ஏராளமாய் இருக்கின்றன. ஆக்கப்பூர்வமான குழு உரையாடலும் அவசியம்.

அதேநேரம், டிராய் போன்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI), குழந்தைகள் கைபேசிகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதேபோல் பள்ளி, கல்லூரிகளில் கைபேசிகளுக்கு கட்டாயத்தடை விதிப்பதும் அவசியம்.

இது தொடர்பாக உளவியல் நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.

”போட்டி நிறைந்த
உலகத்தில், எங்கே நாம்
சமூகத்தின் பார்வையில்
இருந்து விடுபட்டுப் போய்
விடுவோமோ (Fear Of Missing Out) என்ற
அச்ச உணர்வு பலருக்கும்
இருக்கிறது. இளம்
தலைமுறையினரிடம்
அதிகமாகவே இருக்கிறது.
அப்படியான பயமும்கூட
ஒருவித குறைபாடுதான்.
அதற்கு ஃபோமோ (FOMO) என்று
சொல்கிறோம்.
அதுபோன்ற உணர்வு
மேலோங்குவதால்தான
பலரும் தங்களை
தற்பெருமைப் படுத்திக்கொள்ளும்
படங்களையும், செயல்களின்
விவரங்களையும் விளம்பர
நோக்கில் சமூகவலைத்தளங்களில்
பதிவேற்றம் செய்கின்றனர்.

ஃபோமோ குறைபாடு
உள்ளவர்கள், சமூக
வலைத்தளங்களில்
மற்றவர்களின் சிறப்பான
வாழ்க்கைப்படங்களை
காணும்போது இந்த
அச்ச உணர்வு மேலும்
அதிகரிக்கவும் கூடும்.
பேஸ்புக் பதிவுகளுக்கு
விழக்கூடிய லைக்குகள்
பலரிடம் பொறாமை
உணர்வை ஏற்படுத்துவதாக,
பேஸ்புக் நிறுவனமும்
ஒப்புக்கொண்டுள்ளது.
அதனால் விரைவில்,
லைக்குகளின் எண்ணிக்கையை
மறைக்கவும் பேஸ்புக்
நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமும்
அறிவித்துள்ளது,”
என்கிறார்.

 

– பேனாக்காரன்