Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

தீபாவளி பண்டிகையையொட்டி,
சேலம் ஆவின் நிறுவனம்
புதிய முயற்சியாக
ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை
அறிமுகம் செய்திருக்கிறது.
தித்திக்கும் இதன் சுவை,
மனிதர்களின் சுவை
உணர்வை மேலும்
பரவசமாக்குகிறது.

தமிழ்நாட்டில் 17 இடங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் இயங்கி வரும் ஆவினுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. தினமும் 5 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்கிறது. நேரடி பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், டெட்ரா பால், நறுமணப்பால், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் விற்பனையும், கணிசமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருக்கிறது.

தீபாவளி
பண்டிகையையொட்டி
ஆண்டுதோறும்
இனிப்பு வகைகளை
தயாரித்து விற்பனை
செய்து வருகிறது.
இந்தாண்டு புதிய
முயற்சியாக சேலம்
ஆவின் நிறுவனம்,
ஸ்பெஷல்
கேரட் மைசூர்பா என்ற
இனிப்பு வகையை
அறிமுகம் செய்திருக்கிறது.
ஆவின், தரத்தில் சமரசம்
செய்து கொள்ளாது என்பது
ஊரறிந்தது. சுத்தமான நெய்,
பால் ஆகியவற்றைக்
கொண்டே கேரட்
மைசூர்பாவை
தயாரித்திருக்கிறார்கள்.

இதற்காகவே மெனக்கெட்டு,
உழவர் சந்தைகளில் இருந்து
கிட்டத்தட்ட ஒரே மாதிரி
அளவிலான கேரட்டுகளை
தேர்ந்தெடுத்து கொள்முதல்
செய்திருக்கின்றனர்.
கேரட்டுகளின் மேல்
தோலை அகற்றிவிட்டு,
மைசூர்பா தயாரிக்கப்பட்டு
உள்ளது. ஆவின் தயாரிப்புக்
கூடத்தில் மைசூர்பா மற்றும்
இதர இனிப்பு வகைகள்
தயாராகும் செயல்முறைகளையும்
பார்த்தோம். கேரட்
மைசூர்பாவை சுவைக்காமல்
வருவோமா என்ன…
கொஞ்சமே கொஞ்சமாக பிட்டு,
நாக்கில் வைத்தோம்.
வைத்த சுவடு தெரியவில்லை…
கரைந்து போனது.
அத்தனை தித்திப்பு.
அதன் சுவையில் நாமும்
கரைந்து போனோம்
என்றும் சொல்லலாம்.
கேரட் மைசூர்பா,
சுவைஞர்களின் உணர்வை
மேலும் பரவசமாக்கும்
எனலாம்.

இப்போதைக்கு, ‘லிமிடெட் எடிஷன்’ என்பார்களே அதுபோல ஒன்றரை டன் அளவுக்கு மட்டுமே ஸ்பெஷல் கேரட் மைசூர்பா தயாரிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோரிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, வரும் காலங்களில் இதன் உற்பத்தி அளவு கூடலாம். ஆண்டு முழுவதும் சுவைத்து மகிழவும் வாய்ப்பு இருக்கிறது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மைசூர்பா இனிப்புக்கென்றே பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தமுறை சேலம் ஆவினின் கேரட் மைசூர்பா அதனுடன் மல்லுக்கட்டலாம்.

 

கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ‘ஏ’ சத்துகள் உள்ளன. ஆனால் மைசூர்பா வடிவத்தில் தின்றால் அந்த சத்துகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

கேரட் மைசூர்பாவுடன்
வழக்கம்போல் பால் கோவா,
நெய் லட்டு, ஸ்பெஷல்
முந்திரி கேக், மில்க் கேக்,
ஸ்பெஷல் நெய் அல்வா,
சாதாரண மைசூர்பா,
ஸ்பெஷல் மைசூர்பா,
சோன் பப்டி ஆகியவையும்
உண்டு. ஆவின் இனிப்புகள்
மத்தியில் ஒரே ஒரு
கார வகையாக ஸ்பெஷல்
மிக்சர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அனைத்து இனிப்பு
வகைகளுமே 250 கிராம்,
500 கிராம், ஒரு கிலோ
ஆகிய எடைகளில்
கிடைக்கும்.

வணிக நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்துவதில் சேலம் ஆவின் கவனமாக இருந்திருக்கிறது. ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் மிக்சருக்குத் தேவையான மூலப்பொருள்களை விநியோகம் செய்ய தனியாரை அனுமதிக்கவில்லை. அதேநேரம், முக்கிய மூலப்பொருள்களான கடலை மாவு, மைதா மாவு, சூரியகாந்தி எண்ணெய், சர்க்கரை, கார வகைக்குத் தேவையான மசாலா பொருள்களை பொன்னி கூட்டுறவு நிறுவனத்திடமே கொள்முதல் செய்துள்ளது. பால், நெய் ஆகியவற்றைப் பொருத்தவரை எப்போதும் ஆவினின் சொந்தத் தயாரிப்புதான்.

தரமான பொருள்களைக்
கொடுத்தாலும்
விளம்பரப்படுத்துவதில்
ஆவின் எப்போதும்
கோட்டை விட்டு விடும்.
ஆனால், இந்தமுறை
சந்தைப்படுத்துவதிலும்
கவனம் செலுத்தி
இருக்கிறார்கள்.
வாகனங்கள் மூலம்,
ஆவின் தீபாவளி
ஸ்பெஷல் இனிப்பு வகைகள்,
பால் பொருள்களை
ஒரு வார காலத்திற்கு
விளம்பரப்படுத்தத்
தொடங்கியிருக்கிறது.
‘மைசேலம்’ என்ற
கூகுள் அப்ளிகேஷன்
மூலமும் விளம்பரம் செய்ய
இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

”கடந்த ஆண்டு சேலம் ஆவின் நிறுவனம், தீபாவளி பண்டிகைக்காக 24 டன் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்தது. இந்தமுறை 40 டன் அளவுக்கு இனிப்புகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறோம். ஆவினுக்கு 600 நேரடி சில்லரை விற்பனை மையங்கள் உள்ளன. அந்த மையங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்திருக்கிறோம். இதற்கு முக்கிய மூலப்பொருளே கேரட்தான் என்பதால், அதை தரமானதாக பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கிறோம். எல்லா இனிப்பு வகைகளுமே ஆவினில் தயாரிக்கப்பட்ட சுத்தமான நெய், பால் ஆகியவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட்டு உள்ளன. எப்போதும்போல் தரம், சுவையை உறுதிப்படுத்தி இருக்கிறோம். அக்மார்க் தரம் மட்டுமின்றி ஹலால் செய்யப்பட்டது.

 

எங்களது நேரடி விற்பனை மையங்கள் மட்டுமின்றி, யாராவது முகவர்கள் ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கும் மொத்த விலையில் வழங்க தயாராக இருக்கிறோம். அனைத்து அரசு அலுவலகங்கள், கூட்டுறவு அமைப்புகளில் இருந்து வழக்கமான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன,” என்கிறார் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு.

 

இனிப்பு வகைகள், மிக்சர் ஆகியவை விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கின்றன. திங்கள்கிழமை (அக். 21, 2019) முதல் ஆவின் நேரடி விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிறார், ஒப்பந்ததாரர் ரவி.

 

விலைப்பட்டியல்: (250 கிராம்)

 

பால் கோவா – 110 ரூபாய்

ஆவின் நெய் லட்டு – 125 ரூபாய்

ஸ்பெஷல் முந்திரி கேக் – 175 ரூபாய்

மில்க் கேக் – 110 ரூபாய்

ஸ்பெஷல் நெய் அல்வா – 120 ரூபாய்

மைசூர்பா – 95 ரூபாய்

ஸ்பெஷல் மைசூர்பா – 120 ரூபாய்

ஸ்பெஷல் கேரட் மைசூர்பா – 130 ரூபாய்

ஸ்பெஷல் மிக்சர் – 85 ரூபாய்

சோன் பப்டி – 120 ரூபாய்

 

– பேனாக்காரன்
கருத்துகளுக்கு: 9840961947 / selaya80@gmail.com