Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

சேலத்தில் அங்கன்வாடி மையத்தில் பூச்சி, வண்டுகளால் செல்லரித்துப்போன தானியங்களால் குழந்தைகளுக்கு உணவு சமைத்துப்போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 2696 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் வழக்கமான கலவை சாதத்துடன், முட்டையும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் உணவும், மூக்குக்கடலை சுண்டலும், வெள்ளிக்கிழமைகளில் பச்சைப்பயறு சுண்டலும் வழங்கப்படுகிறது.

இந்த மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என நம் சோர்ஸ்கள் தரப்பில் சொல்லப்பட, ஒரு பானை சோற்றுக்கு பதம் கணக்காக, சேலம் குமாரசாமிப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றோம். 15 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட ஒரே அறை. மொத்தம் 15 குழந்தைகள் படித்து வருவதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாம் சென்ற நாளில் எட்டு குழந்தைகள் மட்டுமே வந்து சென்றதாக பதிவாகி இருந்தது.

வரி ஏய்ப்பு மோசடி புகாரில் சிக்கிய கிறிஸ்டி ஃபுட் கிராம் நிறுவனம்தான் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் முட்டைகள், சத்து மாவு பாக்கெட்டுகளை சப்ளை செய்து வருகிறது. சத்துமாவு மூட்டைகளை அடுக்கி வைக்கும் கிடங்காகவும் இந்த குழந்தைகள் மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இந்த மையத்தில் குழந்தைகளுக்கான ஆசிரியை நியமிக்கப்படாததால், ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார். அவருக்கோ, குழந்தைகளுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் என்றாலும் தகவல் கொடுக்கும் வசதி இல்லை. மாற்றுப்பணியாளரையும் உடனடியாக அழைக்க முடியாத அவல நிலையில் அந்த மையம் செயல்பட்டு வருகிறது.

இவை மட்டுமே பிரச்னைகள் அல்ல. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பருப்பு வகைகளை பார்வையிட்டோம். பச்சையப்பயறு, துவரம் பருப்பு, மூக்குக்கடலை ஆகியவை அனைத்துமே வண்டுகள் வைத்து இருந்தன. பூச்சிகள் தின்றதால் பருப்புகள் சல்லடை போல் ஓட்டைகள் விழுந்து, குப்பைக்கு போகும் நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனோம். அந்த பருப்பை சமைத்தால் நிச்சயம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படக்கூடும்.

 

நமக்கு தகவல் அளித்த ‘மக்கள் முன்னேற்றம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜலிங்கம் நம்மிடம் பேசினார்.

”இந்த மையம் அமைந்துள்ள சுற்றுப்புறத்தை நீங்களே பாருங்கள்… மழை பெய்துவிட்டால் பாம்புகள், தேள்கள் எல்லாமே ஊர்ந்துகொண்டு அங்கன்வாடி மையத்திற்குள் சென்றுவிடும். நாங்களே பலமுறை கொடிய விஷமுள்ள நண்டுவாக்கலிகளை அடித்திருக்கிறோம். பாதுகாப்பற்ற இந்த இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டால் பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை சேர்க்க முன்வருவார்கள்? பக்கத்தில் உள்ள சமையல் அறையில் உணவு சமைக்கும்போதுகூட, வகுப்பில் குழந்தைகளை தனியாக இருப்பார்களே என்று அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு விடுவார் இங்குள்ள பெண் ஊழியர்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் சேரும் சகதியுமாக மாறிக்கிடக்கும். இந்த இடத்திலேயே கால்களை வைக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி சுகாதாரமான குழந்தையாக வளர்த்து எடுக்க முடியும்? ஆசிரியை ஒருவரை நியமிக்கும்படி பலமுறை சொல்லியும் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் இதே வளாகத்தில் மாநகராட்சி நிர்வாகம் புதிதாக நுண்ணுயிர் உரக்கிடங்கு வேறு கட்டி வருகிறது. இதனால் இன்னும் சுகாதாரம் சீர்கேடு அடையும்,” என்றார் ராஜலிங்கம்.

 

கெட்டுப்போன பருப்புகளை கீழே கொட்டாமலிருப்பது குறித்து அங்கன்வாடி பெண் ஊழியரிடம் கேட்டபோது, ”இப்போது நீங்கள் பார்த்த வண்டுகள் வைத்த பருப்பு வகைகளை குப்பையில்தான் கொட்ட வேண்டும். அப்படி கொட்டிவிட்டால் அதற்கும் அதிகாரிகள் வந்து கணக்கு கேட்பார்கள். என்ன காரணம் சொன்னாலும் எங்கள் மீதே திருட்டுப்பட்டம் கட்டுவார்கள். நீங்களாக வந்தீர்கள்… படம் பிடித்தீர்கள். எங்களைப் போன்ற ஊழியர்கள் பத்திரிகைகளிடம் பேசினால்கூட, எங்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள். அப்படியான நிச்சயமற்ற சூழ்நிலையில்தான் வேலை செய்கிறோம்,” என்று புலம்பினார்.

இது தொடர்பாக ஐசிடிஎஸ் திட்டத்தின் சேலம் மாவட்ட திட்ட அலுவலர் பரிமளாதேவியிடம் செல்போனில் பேசினோம்.

 

”அங்கன்வாடி மையங்களுக்கு
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ்
கிடங்குகளில் இருந்துதான்
அரிசி, பருப்பு, எண்ணெய்
ஆகியவை சப்ளை செய்யப்படுகிறது.
இதர மளிகை பொருள்களை
பொன்னி கூட்டுறவு அங்காடியில்
கொள்முதல் செய்கிறோம்.
சிவில் சப்ளைஸ் கிடங்கில்
இருந்தே காலதாமதாகத்தான்
எங்களுக்கு உணவுப்பொருள்களை
அனுப்பி வைக்கின்றனர்.

 

அதனால் அங்கன்வாடி
மையங்களுக்கு வந்திறங்கிய
சில நாள்களில் வண்டுகள்
வைத்து விடுகின்றன.
இதுகுறித்து ஏற்கனவே
சிவில் சப்ளைஸ் நிர்வாகத்திடம்
புகார் அளித்திருக்கிறோம்.
பருப்பு வகைகளை வெயிலில்
காய வைத்து பராமரித்து
வைத்தால் பூச்சிகள் அண்டாது.
அதைப்பற்றியும் எங்கள்
ஊழியர்களிடம் சொல்லி
இருக்கிறோம். அப்புறம் சார்….
சமுதாய வளைகாப்பு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில்
இருக்கிறோம்.
பிறகு பேசுகிறேன்,” என்று
சொல்லி முடித்துக்கொண்டார்.

 

இதையடுத்து நாம்
சீலநாய்க்கன்பட்டியில் உள்ள
டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு சென்றோம்.
அங்குள்ள ஊழியர்களிடம்
விசாரித்தபோது,
‘சார்… ஒவ்வொரு அங்கன்வாடி
மையத்திலும் எத்தனை
குழந்தைகள் இருக்கிறார்களோ
அவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்பதான் அரிசி, பருப்பு,
எண்ணெய் ஆகியவற்றை
சப்ளை செய்கிறோம்.
அதனால் அந்தப் பொருள்களை
நீண்ட நாள்கள் இருப்பு
வைக்கப்பட வாய்ப்பு
இருக்காது.

 

அப்படியே வண்டுகள் வைத்த
உணவுப்பொருள்கள் இருந்தால்
உடனடியாக திருப்பி
அனுப்பி விட்டால்,
மாற்று பொருள்களை
அனுப்பி வைக்கப்படும்
என்று சொல்லி இருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
எங்கள் பக்கத்தில் காலதாமதம்
ஆவதில்லை. சென்னையில்
உள்ள கிடங்கிலேயே ஓரிரு
மாதங்கள் இருப்பு வைத்த
பின்னர்தான் உணவுப்பொருள்கள்
இங்கு வருகின்றன.
அதனால் சில நேரம்
பருப்புகளில் வண்டுகள்
வைக்கப்படும் நிலை வரலாம்,”
என்றனர்.

 

அதன்பிறகு நாம் டிஎன்சிஎஸ்சி
மண்டல மேலாளர் ரவிச்சந்திரனிடம்
கேட்டபோது, குமாரசாமிப்பட்டி
அங்கன்வாடி மையத்தில்
வண்டுகள் வைத்த பருப்புகள்
இருந்ததாக புகார் வந்த
உடனேயே, அந்த மையத்தில்
எல்லா சரக்குகளும் புதிதாக
வழங்கப்பட்டு உள்ளன,” என்று
கூறியவர், அதற்கான
படங்களையும் நமக்கு
அனுப்பி வைத்தார்.

 

மாதத்தில் ஐந்து நாள்கள் சொந்த ஊரில் டேரா போடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கன்வாடி பக்கமும் கொஞ்சம் ஒதுங்கலாமே!

 

– பேனாக்காரன்

 

(நக்கீரன், 2019 அக். 12-15 இதழில் இருந்து)